கட்டுரையாளர் - முனைவர் சி.தேவி, உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

முன்னுரை
இலக்கியமும் உளவியலும் இணைத்து ஓரு சேரப்பார்க்கத்தக்க அறிவுத்துறையாகும், இலக்கியப் படைப்புகளையும், படைப்பாளிகளையும் உளவியல் கோட்பாடுகள் மூலம் ஆராயத் திறனாய்வாளர்கள் முற்படுகின்றனர். படைப்பாளனின் மனநிலை, உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி ஆராய உளவியல் உதவுகிறது. மேலும், இலக்கியப் படைப்புகளின் மூலம் மனித நடத்தைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம். எனவே எஸ்.ஜே. சிவசங்கர் அவர்களின் “ கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும்” என்ற சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள படைப்பான 'நிழல்' எனும் சிறுகதை உளவியல் பார்வையில் அணுகப்பட்டுள்ளது.
இலக்கியமும் உளவியலும்
படைப்பாளியின் உளவியல்
படைப்பின் உளவியல்
உளவியலைக் கருவியாகப் பயன்படுத்துதல்
சமூக மற்றும் வாழ்வியல் கூறுகளைப் புரிந்துகொள்ளுதல்
ஒப்பிலக்கியத்தின் ஒரு பிரிவு என்ற ஐந்தின் அடிப்படையில் இலக்கியங்கள் உளவியல் சார்ந்து ஆயப்படுகிறது.
நிழல் ஒரு அறிவியல் சிந்தனை
"நிழல் என்னும் கொள்கை" இயற்பியல் கொள்கையின்படி, ஒளி புகாத பொருள் ஒளி மூலத்தின் பாதையில் குறுக்கிடும் போது ஏற்படும் நிழல் உருவாகும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்த கொள்கை, ஒளிக்கதிர்கள் நேர்கோட்டில் பயணிப்பதால், அவை தடுக்கப்படும் இடத்தில் ஒரு இருண்ட பகுதியை உருவாக்குகின்றன என்ற அடிப்படைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு ஒளி மூலத்திலிருந்து (எ.கா. சூரியன், மின்விளக்கு) வரும் ஒளிக்கதிர்கள், ஒரு ஒளிபுகா பொருளால் (எ.கா. மரம், சுவர்ப் பொருள்) தடுக்கப்படுகின்றன.அதனால், அந்தப் பொருளின் பின்னால் சுவரில் அல்லது வேறு எந்தப் பரப்பிலும் ஒளி படாத ஒரு இருண்ட பகுதி உருவாகிறது. இந்தப் பகுதிக்கு நிழல் என்று பெயர். நிழலின் வடிவம், ஒளியூடுருவாப் பொருளின் வடிவத்தைப் பிரதிபலிக்கிறது, மேலும் ஒளி மூலத்தின் நிலையைப் பொறுத்து நிழலின் அளவும் வடிவமும் மாறுபடும்.
தத்துவப் பார்வையில் நிழல்
தத்துவப் பார்வையில் நிழல் என்பது உண்மையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகவோ, முழுமையான உண்மைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவோ, அல்லது ஒருவரின் உள் மனதில் மறைந்திருக்கும் புறக்கணிக்கப்பட்ட அம்சமாகவோ விளக்கப்படுகிறது. சில தத்துவ நூல்களில் நிழல் என்பது மறைக்கப்பட்ட, அப்பட்டமான அல்லது இருண்ட பக்கங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
'ஒவ்வொரு உண்மையும் ஒரு உண்மையின் நிழல்' என்ற கருத்தின்படி, நிழல் என்பது நாம் பார்க்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகும். நிஜமான முழுமையான உண்மைக்கு அவை வெறும் சுவடுகள் தான்.
நாம் யாருடைய நிழலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற வினாவிற்கு விடை தேடுகிற பொழுது நான் யார் என்பதை நாம் உணர்வோம்.
”நான் யார்? என்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இரமண மகரிசி அவர்கள் வழங்கிய உபதேசம் ஆகும். தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்ற அழிவில்லாத நித்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே பயன் என தமது திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார். இந்த உண்மையை விளக்கும் விளக்கவுரையே நான் யார் என்ற இரமணர் அவர்களின் புத்தகம் ஆகும். ”
எனவே இந்நூலின் உள்ளடக்கம்
1. நம் சொரூபமே ஆனந்தம்.
2. விசாரணை செய்வது எப்படி?
3. பிரித்து ஆறிதல்
4. "நான் என்பதன் பொருள்"
5. ஞானம்
6. பயன் என்றவாறு தலைப்பிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
உளவியல் பார்வையில் நிழல்
கார்ல் ஜங் வரையறுத்தபடி, ”நிழல் மாதிரி, நாம் நிராகரிக்கக்கூடிய, மறுக்கக்கூடிய அல்லது வெறுமனே அடையாளம் காண முடியாத நமது பகுதிகளை உள்ளடக்கியது”. நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு மயக்கத்தில் வேரூன்றிய நிழல், நாம் உணர்வுபூர்வமாக எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் நமது ஆளுமையில் - உலகிற்கு நாம் காட்டும் வெளிப்புற 'முகமூடி'யில் காட்டப்படும் பண்புகளை வேறுபடுத்துகிறது. இது நமது ஆளுமையின் விலங்கு பக்கமாகும் அதாவது பிராய்டு விளக்கும் ID (இட்) போன்றது ஆகும்.
இது நமது படைப்பு மற்றும் அழிவு ஆற்றல்கள் இரண்டிற்கும் அடிப்படையான மூலமாகும். ”பரிணாமக் கோட்பாட்டின்படி, ஜங்கின் முன்மாதிரிகள் ஒரு காலத்தில் உயிர்வாழும் மதிப்பைக் கொண்டிருந்த முன்கணிப்புகளை பிரதிபலிக்கின்றன. நிழல் வெறும் எதிர்மறையானது அல்ல; அது நமது ஆளுமைக்கு ஆழத்தையும் சமநிலையையும் வழங்குகிறது, ஒருவரின் ஆளுமையின் ஒவ்வொரு அம்சமும் ஈடுசெய்யும் எதிர்முனையைக் கொண்டுள்ளது என்ற கொள்கையை பிரதிபலிக்கிறது.”
"ஒளி இருக்கும் இடத்தில் நிழலும் இருக்க வேண்டும்" என்ற கருத்தில் இது அடையாளப்படுத்தப்படுகிறது. நிழலைப் புறக்கணித்து, ஆளுமைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது, மேலோட்டமான ஆளுமையை ஏற்படுத்தி, மற்றவர்களின் கருத்துக்களில் நம்மை மூழ்கடித்துவிடும்.
”நாம் விரும்பாத பண்புகளை மற்றவர்கள் மீது வெளிப்படுத்தும்போது, நிழல் கூறுகள் பெரும்பாலும் வெளிப்படும், நாம் நிராகரிக்கும் அம்சங்களுக்கு கண்ணாடியாகச் செயல்படும். நமது நிழலுடன் ஈடுபடுவது சவாலானது, ஆனால் அது ஒரு சமநிலையான ஆளுமைக்கு மிகவும் முக்கியமானது.
இந்த 'இருண்ட' கூறுகளை நமது நனவான, நடைமுறையில் நமது செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சுயத்தில் அங்கீகரித்து ஒருங்கிணைப்பதை உள்ளடக்கிய இந்த செயல்முறை, நன்கு வட்டமான ஆளுமையை வளர்ப்பதில் உதவுகிறது.
ஆளுமை மற்றும் நிழலின் இந்த இடைச்செருகல் பெரும்பாலும் இலக்கியங்களில் ஆராயப்படுகிறது, உதாரணமாக "டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்" மற்றும் "தி பிக்சர் ஆஃப் டோரியன் கிரே" ஆகியவற்றில், கதாபாத்திரங்கள் தங்கள் இரட்டை இயல்புகளுடன் போராடுகின்றன, இது ஜங்கின் கோட்பாட்டின் இந்த அம்சத்தின் கவர்ச்சிகரமான தன்மையை மேலும் விளக்குகிறது.”
'நிழல்' கதைக்களம்
அச்சநந்தி தேவரின் திருமேனி செய்யும் பணி செய்பவர் என்று கதையின் தொடக்கத்தில், சாதமு பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலமாக இப்பணியினை அவர் செய்து வந்தாா். தியானம் செய்து அதன் பின் பணிகளைத் தொடங்கும்படி அங்கு தங்கியிருந்த நந்தி கணத்தைச் சேர்ந்த முனிகள் கேட்டுக் கொண்டார். அதன்படி செய்யத் தொடங்கினேன். சுனையில் நீர் அருந்தக் குனிந்த போது என் நிழலைக் கண்டேன். என் மூளையில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. எனது கலக்கங்கள் கரைந்து மகிழ்வானேன். எனது அடையாளங்களாக நான் ஏற்றுப் பின்பற்றியது பலரது வாழ்க்கை நிகழ்வுகள். எனவே நான் பலரது நிழலாகத் தென்பட்டேன். இது புரியத் தொடங்கியது. அனைத்தையும் களைந்து செயல்பட ஆரம்பிக்கும் பொழுது எனது நிழலாக வேறு யார் சாயலும் அற்று இருந்தது. இனி எனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற இலேசான மனதோடு நடந்தேன் என்று கதையை நிறைவு செய்கிறார். இடையே நிழல் என்பது வெளிச்சம் அற்ற நிலையில் தோன்றுவது என்ற இயற்பியல் உண்மையையும் விளக்கிச் சென்றுள்ளார்.
உளவியல் சிந்தனையும் எஸ்.ஜே. சிவசங்கர் படைப்பும்
எஸ்.ஜே. சிவசங்கர் அவர்களது நிழல் எனும் சிறுகதை உளவியலைக் கருவியாகப் பயன்படுத்துதல் மற்றும் சமூக மற்றும் வாழ்வியல் கூறுகளைப் புரிந்து கொள்ளுதல் கொள்கைகளின் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
- எழுத்தாளர் எஸ்.ஜே. சிவசங்கர் -
சாதமுக்தனின் அன்றாட வாழ்க்கை
நமது சமூக நடைமுறையின் அடிப்படையில் நமது நடத்தைகள், வாழ்க்கைச் செயல்பாடுகள் அனைத்தையும் தீர்மானித்து நமக்கு உருவம் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர்களாக ஆசிரியர், மதகுருமார்கள், தலைவர்கள் போன்றோர் அமைகின்றனர். நிழல் சிறுகதையில் இடம்பெறுகின்ற சாதமுக்கியன் என்பவனும் தனது ஆசிரியர் பணித்ததை அப்படியே கேட்டுச் செய்யும் தன்மை உடையவனாக இருக்கிறான்.
” என் உளிகளையும் சாணைக் கற்களையும் இதர சுத்தியல்கள், ஆணிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பையை ஸ்தூபியில் வைத்து தியானம் செய்து பணியைத் தொடங்கும்படிக்கு ந்ந்தி கணத்தைச் சேர்ந்த அந்த முனிகள் கேட்டுக் கொண்டனர். அப்படியே பணிந்து முதற்கட்ட முன்னேற்பாடுகளை முடித்துக் கொண்டு குகைப்படுக்கை ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் அது நடந்தது.”( கே.தி.க.கூ.ப. 67) என்று ஆசிரியரின் கூற்றுப்படி அப்படியே நடக்கும் மாணவனாக சாதமுக்கியன் இருந்தான். என்பதை இக்கூற்றின் மூலம் அறியலாம்.
குகைப்படுகையில் நடந்த மாற்றம்
சமணம் என்பது சாதமுக்தன் தழுவிய சமயமாக இருந்தது. அது கற்றுக்கொடுத்த வகையில் அவனது அன்றாட வாழ்க்கை நிலைகள், அவனது உணவு, உடை, நம்பிக்கைகள் என அனைத்தும் வெளிப்பட்டன. நான் எப்போதும் என் நிழலையோ, பிம்பத்தையோ பார்த்ததில்லை. தன் நிழலுருவை பார்த்தபொழுது தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்கிறான்.
” என் கலக்கங்கள் அந்த கணத்திலிருந்து கரைந்தது. அதிகாரங்களற்ற அன்பும், களங்கமற்ற சந்தோஷங்களுமாக கழிந்தன என் நாட்கள். நான் அச்சந்தி ஆனேன். என் தலைமயிர் இப்போது பிரிக்கப்பட்டிருந்த்து. ஆடைகளற்று திசைகளே ஆடைகளாக திகம்பரனாக நான் அலைந்தேன்”(க.கூ.கே.தி. ப. 68) என்ற வரிகள் மூலம் சாதமுக்தனின் தனிமை அவனக்குத் தான் யார் என்ற வினாவிற்கு விடை தேடும் பணியைத் தொடங்க உந்தித்தள்ளியது என்பதை அறியமுடிகின்றது.
சாதமுக்தன் அறிந்த விடை
சாதமுக்தன் சிறுவயதிலிருந்து தான் எப்படியிருந்தேன் என்பதை எண்ணிப்பார்க்கிறான். பத்து வயதில் ஒருவரையும், பருவ வயதில் ஒருவரையும் என்று பாலத்திற்கு ஒருவரைப் பின்பற்றி வாழ்ந்த இயல்பு புலப்பட்டது. தான் கற்ற குரு, பார்த்த தத்துவஞானிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் நிழலாக, தான் வாழ்ந்ததாக உணர்ந்தான். அப்படி இருக்கக்கூடாது. நான் என் சுயத்தன்மையோடு வாழ வேண்டும் என்ற விரும்பினான். என்பதை
” என்னால் இந்த உருவங்களின் பேச்சை உள்வாங்க முடியவில்லை. நான் தத்தளித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய மத்திம வயது வரை என்னால் இந்த நிழல்களை உதறிவிட முடியவில்லை. இந்த நீண்ட காலத்தில் என்னால் என்னுடைய நிழலை ஒருபோதும் காணமுடியவில்லை. படிப்படியாக என் தோற்றம் நிழலுருவமாகவும் நான் தரையிலுமாக தலைகீழாக மாறிக்கொண்டிருந்தேன்.” (க.கூ.கே.தி.ப. 70) என்றுவெளிப்படுத்தியுள்ளான்.
தனது ஆசிரியர் போதித்த வகையில் தனது பணிகளைச் செய்து வந்தான் சாதமுக்தன். தனிமை பல பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும் என்ற வகையில் சாதமுக்தன் மனதிற்குள் நான் யார் என்ற வினா எழுந்தது. யாரது சாயலாகவும் நான் இருக்கக்கூடாது. நான் எனது சுயத்தோடு மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து தெரிந்துகொண்டான்.
” யாரோ ஒருவரின் நிழல் என் மீது ஒரு துயரமாக, இருளாக படிவதை ஒப்புக்கொள்வது சிக்கலாகயிருந்த்து. எனக்கென ஒரு நிழல் வேண்டும். உந்த ஒளிக்கலப்புமற்ற ஒரு சுத்தமான நிழல். வெயிலில் அலைக்கழியும் ஒரு யாத்ரீகனைப் போல் நான் நிழல் தேடி அலைக்கழிந்தேன். யாருமற்ற பரந்தவெளியில், கடற்கரை மணலில், மலையில் பாறைகளில் என் தேடல் தொடர்ந்தது…… பாறையிடுக்கிலிருந்து ஒரு ஒளி பாய்ந்து என் மேல் விழுந்த்து. நான் தரையில் பார்க்கையில் என் நிழல் என்னைப் போலவேயிருந்த்து.”(க.கூ.கே.தி. ப. 70) என்ற வரிகள் மூலம் சாதமுக்தனின் தெளிவடைந்த மனநிலையை விளக்குகிறது.
முடிவுரை
உளவியல் கொள்கையில், "நிழல்" என்பது ஒரு நபரின் அடக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அம்சங்களான உணர்ச்சிகள், அச்சங்கள் மற்றும் ஆசைகளைக் குறிக்கிறது . சாதமுக்தன் தனது அடக்கப்பட்ட சுயதன்மையை வெளிப்படுத்த எத்தனித்த்து போலநாமும் போலி ஆளுமையோடு நிழலாக இல்லாமல் சுயமாக வாழ வேண்டும். மனமும் சுயமும் ஒரு தனிநபரின் அடையாளத்தையும் உலகத்தைப் பற்றிய பார்வையையும் உருவாக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய கருத்துக்கள். மனம் என்பது மூளையின் செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளின் ஒரு கட்டமைப்பாகும், அதே சமயம் சுயம் என்பது அந்த கட்டமைப்பிலிருந்து உருவாகும் ஒரு தனிப்பட்ட அடையாளமாகும். இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு தனிநபரின் வாழ்க்கையை வடிவமைப்பதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இந்த உறவைப் புரிந்துகொள்வது மனித இயல்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
துணைநின்றவை.
நான் யார்? தன்னிலை விளக்கம்.விஜயா பதிப்பகம், கோவை.
Carl Jung's Theory of Personality https://share.google/nEpbRdTUI8G7QOGhE
https://shorturl.at/JTcia
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.