
கட்டுரையாசிரியர் : வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் - நெறியாள்கை: முனைவர் சி.சிதம்பரம் -
முன்னுரை:
சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு பகுப்புகளை உடையது. இரண்டு பகுப்பிற்கும் அதற்கென திணை, துறைகள் இலக்கண நூலோரால் வகுக்கப்பட்டுள்ளன. அதனை முதன்மையாகக் கொண்டே எட்டுத்தொகை நூல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வஞ்சித்திணையின் கீழ் துணைவஞ்சி என்ற துறையின் பெயரில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆனால் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புற இலக்கண நூல்கள் எவற்றிலும் துணைவஞ்சி என்னும் இத்துறையானது சுட்டப்பெறவில்லை. இவ்வாய்வுக் கட்டுரை துணைவஞ்சி என்ற புறத்துறையின் விளக்கத்தினையும், எந்த அடிப்படையில் இத்துறை தோன்றியது என்பதையும் விளக்க முற்படுகின்றது.
துணைவஞ்சி - துறைவிளக்கம்
புறநானூற்றிற்கு உரை வரைந்த உ.வே. சாமிநாதையர், துணைவஞ்சி என்பதற்கு "ஒரு துறை, பிறரை வெல்லவாவது கொல்லவாவது துணிந்து நிற்கின்றானொருவனைச் சில கூறிச்சந்தி செய்வித்தல்" 1 என்கிறார். அதாவது போரில் தனது எதிரியை கொன்று வீழ்த்தி அல்லது சிறைபிடித்தாவது வெல்லுவேன் எனக் கோபம் கொண்டு துணிந்து நிற்பவன் ஒருவனை அறிவுரை கூறி தடுத்து நிறுத்துதலாகும். போர் செய்ய விரும்புவனை அறம் குறித்த நன்மொழிகள் கூறி தணித்து, உணரவைத்து போர் நிகழாமல் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பது துணைவஞ்சி என்ற துறையின் பொருண்மையாக அமைகிறது. துணைவஞ்சி என்ற துறையின் கீழ் புறநானூற்றில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன
ஆனால் புறநானூற்று துணைவஞ்சித்துறை பாடல்கள் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகிய எந்த ஒரு புறஇலக்கண நூல்களிலும் காணப்பெறவில்லை. உரையாசிரியர்கள் இத்துறை அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவர் படைத்த பன்னிரு படலம் என்ற நூலில் இடம்பெற்றிருக்கலாம் என்கின்றனர். இளம்பூரணர் "ஓத்தினால் பிண்டமாயிற்று பன்னிரு படலம்." 2 என்கிறார். ஆனால் தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ள இலக்கண நூல்கள் எதிலும் துணைவஞ்சி என்ற துறைப்பெயரும் அதற்கான விளக்கமும் இல்லை.
புறநானூற்றில் துணைவஞ்சி துறைப் பாடல்கள் :
துணைவஞ்சி என்ற துறையில் 6 பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள. (அவைவாவன: புறம். 36,45,46,47,57, 213).
|
வஎண். |
பாடல் எண் |
பாடியவர்
|
பாடப்பட்டோர் |
|
1. |
36 |
ஆலத்தூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
|
2. |
45 |
கோவூர்கிழார் |
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி |
|
3. |
46 |
கோவூர்கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
|
4. |
47 |
கோவூர்கிழார் |
நெடுங்கிள்ளி |
|
5. |
57 |
காவிரிப்பூம்பட்டினத்துக் காரி கண்ணனார் |
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் |
|
6. |
213 |
புல்லாற்றூர் எயிற்றியனார் |
கோப்பெருஞ்சோழன் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னன், கருவூரைச் சேர்ந்த சேர மன்னனை எதிர்த்து போரிடச் செல்கிறான். ஆனால் சேர மன்னனோ முற்றுகை செய்வோரை எதிர்த்துப் போரிடாமல் உள்ளே இருக்கிறான். இதனால் மேலும் கோபம் கொண்ட கிள்ளிவளவன் அவனது காவல் மரத்தை வெட்டுகிறான். பண்டைக்காலத்தில் ஒரு மன்னனது காவல் மரத்தை வெட்டுவது அவனுக்கு அழுக்கைத் தேடித்தருவதாகப் பருதப்பட்டது. ஆனால் அப்போதும் சேரன் போரிட வரவில்லை. இதனால் சோழன் கடுங்கோபம் கொள்ள ஆலத்தூர் கிழார், தற்போது நீ போரிட்டாலும் போரிடாவிட்டாலும் பெருமை உனக்கே! தன் காவல் மரத்தை வெட்டியும் போரிட வராமல் இருப்பவனோடு போரிடுவது உனக்குதான் இழுக்கு எனக் கூறிப் போரினைத் தடுத்து பேரழிவு ஏற்படாமல் காக்கிறார். (புறம். 36)
ஒரு சமயம் மலையமானைக் கொன்று அவன் நாட்டைக் கைப்பற்றிய கிள்ளிவளவன், அவனது சிறுபிள்ளைகளையும் யானையேற்றி கொல்லுமாறு உத்தரவிடுகிறான். உடனே கோவூர்க்கிழார், "சிபி மன்னனது வரிசையில் வந்த நீ, நற்பண்புகள் நிறைந்துள்ள, தந்தையை இழந்து மனம் நோக நிற்கும் இக்குழந்தைகளின் நிலையை எண்ணிவிட்டு பின்பு விரும்பியதை செய்" எனக் கூற, உடனே குழந்தைகளை விடுவித்தான் கிள்ளிவளவன். (புறம். 46). கோவூர்கிழார் மேலும் இரு மன்னர்களின் கோபத்தை தணித்து நல்வழிப்படுத்துகிறார்.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய இரு சோழ மன்னர்களும் தம்முள் மாறுபாடுகொண்டனர். நலங்கிள்ளி முற்றுகையிட நெடுங்கிள்ளி உள்ளிருந்தான். இவர்களின் மாறுபாட்டை போக்க வேண்டி கோவூர்க்கிழார், ' நீ எதிர்ப்பது பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்ல, வேப்பம்பூ மாலை சூடிய பாண்டியனும் அல்ல; எனவே இப்போர் சோழர் குடிக்காக நடப்பது இல்லை; இது எள்ளி நகையாடும் வண்ணம் உள்ளது' எனக் கூறி இருவரையும் போர்புரியும் எண்ணித்திலிருந்து மாற்றி சந்து செய்கிறார். (புறம். 45)
அதேபோல நெடுங்கிள்ளி, ஒருமுறை பரிசில்பெற வந்த இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் எனக்கருதி சிறைப்பிடிக்கிறான். அப்போதும் கோவூர்கிழார், "பல தொலைவு சென்று, பொய் நீக்கி, புகழ்ந்து பாடி, பெறும் பொருட்களை கணக்கில்லாது பிறருக்கு தந்து வாழும் புலவர்கள் இவர்களும், மன்னர் உன்னைப் போன்ற பெருமிதம் உடையவர்கள்" எனப் புலவர்களின் சிறப்பினைக் கூறி இளந்தத்தனை விடுவிக்கச்செய்கிறார். (புறம். 47)
இதேபோல, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் போருக்குச் செல்வதைப் பாடல் பாடித் தடுக்கிறார். ஒரு போரில் வெற்றிப்பெற அம்மன்னன் பிறமன்னனின் காவல்மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும். இப்பாடலில், தீயிட்டு ஊரைக் கொளுத்தினாலும் காவல்மரத்தை வெட்டாதே என்று பாடுகிறார் புலவர். எல்லாவற்றையும் கைவிடுக என்பது குறிப்பால் உணர்த்தப்பட, உணர்ந்து போரை கைவிடுகிறான் பாண்டியன். (புறம். 57)
ஒருமுறை கோப்பெருஞ்சோழனின் இரு மகன்களும் அரசாட்சியை பெறுவதற்காக தந்தையுடன் போர்புரிய வந்தனர். உடனே கோப்பெருஞ்சோழனும் எதிர்த்துப் போர்புரியத் தயாராக, புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர், உனக்கு பிறகு உன் மக்கள் தாமே ஆட்சிக்குரியவர்? தற்போது நீ போரிட்டால் அவர்களை வெல்வாய். ஆனால் நாளை யார் உன்னிடத்தில் அமர்ந்து ஆட்சிப் புரிவர் என உண்மையை உணர்த்தி போரினைத் தவிற்க முயற்சிக்கிறார். (புறம். 213) பின் கோப்பெருஞ்சோழன் தன் மகன்களிடம் ஆட்சியை ஒப்படைத்து வடக்கிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியும் பிற புறநானூற்றுப் பாடல்களின் வழி அறியமுடிகிறது.
இவ்வாறு 6 பாடல்களும், மிகுந்த சினம் கொண்டு போரோ தவறோ இழைக்கயிருந்த மன்னனுக்கு, புலவர்கள் நன்மொழி கூறி உண்மையை உணர்த்தி தடுப்பதாகவே அமைந்துள்ளன.
தொல்காப்பிய நூற்பா - உரை வேறுபாட்டு விளக்கம்:
இப்பாடல்கள் மூலம் துணைவஞ்சி துறையின் கருத்து புலப்பட்டாலும் அத்துறை எந்த இலக்கண நூல்களிலும் காணபெறவல்லை என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்துறையின் விளக்கம் தொல்காப்பிய விரி ஒன்றுடன் பொருந்தி வருகிறது. தொல்காப்பிய பொருளதிகார புறத்திணையியலில் ஏழு திணைகள் உள்ளன. அதில் ஐந்தாம் திணையான வாகைத்திணையின் வகைகளைச் சுட்டும் தொல்காப்பியர்,
"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையால்
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்" 3
என்ற சூத்திரத்தின் வழி விளக்குககிறார். இந்நூற்பாவில்,
"ஐவகைப் மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்"
என்ற சூத்திரவரிகளுக்கு உரையாசிரியர்கள் விளக்கும் பொருளினையும் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டினையும் முதலில் அறிய வேண்டும்.
தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர், கல்வி, வேட்டல், ஈதல், படை வழங்கல், குடிஓம்பல் என்ற ஐந்தும் அரசர் தொழில் எனவும், ஓதல், உழவு, ஈதல், வணிகம், விருந்தோம்பல் நிரைகாத்தல் என்ற ஆறும் ஏனோர் தொழில் எனவும் குறிப்பிடுகின்றனர். இவையன்றி சோமசுந்தர பாரதியார், 'ஐவகை மரபின் அரசர் என்றது சேர சோழ பாண்டியராவார். முடிவேந்தர் குடி மூன்று; ஆளுதற்குரிய வேளிர் குடி ஒன்று. மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத் தாண்டனராதலின் அரசர் எனப்படுதலான்' 4 என்று வேறு விதமாக விளக்கம் தருகிறார். இக்கருத்துகளை மறுத்து தம் உரையில் விளக்கம் கூறுகிறார் பாவலரேறு ச. பாலசுந்தரம், "பகையை வென்று திறை கோடலும் நாடு கோடலுமன்றி வாணிகம் முதலிய தொழில்களான் பொருளீட்டுதல் மன்னவர் மாண்பாகாமையான், இழைத்த ஒண்பொருட்பிரிவை மேவிய சிறப்பின் ஏனோர்க்குரியதாக அகத்திணையியலுட் கூறினார். அதனான் பொருள்வயிற்பிரிவு ஒழிந்த ஏனைய கல்வி, பகைதணிவினை, தூது, காவல், துணை ஆகிய ஐந்து தொழில்கள் பற்றிய வினைகளே அரசர்க்குரியவையாக அமைந்தமை நோக்கி ஐவகை மரபின் அரசர் பக்கம் என்றார் என்க." 5 என்று அரசற்குரிய தொழில்களையும், "நான்மறை ஒத்துக்களின் வழிவந்த ஆகமம் முதலாய நூல்களையும் பிறபிற கலைநூல்களையும் செய்யுள் நூல்களையும் ஓதலும், மன்னராற் சிறப்புப்பெற்றவழிப் பகைமேற்சேறலும், தூது போதலும், துணைவயிற் செல்லுதலும், காவல்மேற்கோடலும் வாணிகம் முதலியவற்றான் பொருளீட்டலும் உழுது பயன் விளைவித்துப் பொருளீட்டலும் ஆகிய அறுவகைப்பட்ட வினைகளின்கண் அந்தணரும் அரசரு மல்லாத ஏனையோராகிய வணிகரும் வேளாண்மாந்தரும் தத்தங்கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தலான் எய்தும் வாகையும் என்றவாறு." 6 என்று ஏனோருக்குரிய தொழில்களையும் எடுத்தியம்புகிறார்.
அரசர் தொழில்களில் இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் கூறும் வேட்டல் மற்றும் படை வழங்கலுக்கு மாறாக, பகை தணிவினை மற்றும் தூது ஆகியவற்றைக் கூறுகிறார். காரணம் வேள்வி செய்து பொருளீட்டல் அரசர் மாண்பல்ல என்கிறார். துணை என்பது மன்னர், மக்கள் மற்றும் படைவீரர் இருவருக்கும் துணையாக உதவியமையைக் குறிக்கிறது. பிற உரையாசிரியர் கூறும் படை வழங்கல், ஈதல் இரண்டும் துணை என்பதற்குள் பொருந்தி வருகிறது.
ஏனோர் தொழிலில் பொருளீட்டல் என்பதனுள் வாணிகம், உழவு இரண்டினையும் பொருத்துகிறார். படைவீரர்களுள் ஏனோர் ஆவதால் காவல், தூது, பகை என்ற மூன்றினைக் கூறுகிறார். பிறருக்கு துணையாதலின் துணை என்பது ஈதல், விருந்தோம்பல் இரண்டினையும் உள்ளடக்குகிறது.
இவ்வாறு பாலசுந்தரம் அவர்களின் உரை விளக்கம் இளம்பூரணர் நச்சர் கருத்துகளை மறுத்தளிக்காது உள்ளீட்டு தமது விளக்கத்தினை தெளிவாக விளக்கியுள்ளது.
துணைவஞ்சி துறையின் அடிப்படை:
புறநானூறு என்ற தொகுப்பு நூலிற்கு திணை துறை வகுத்த சான்றோர், அக்காலத்தில் அவர்களுக்கு கிடைத்த இலக்கண நூல்கள் மற்றும் உரைகளின் அடிப்படையில் திணை துறைகளை வகுத்தனர். தற்காலத்தில் கிடைக்கப்பெற்ற பல உரைகளையும் ஆய்வுரைகளையும் படித்தபின், பாலவரேறு ச. பாலசுந்தரம் அவர்களின் உரையிலுள்ள, பகை தணிவினை என்ற அரசர் தொழிலும், தூது என்ற ஏனோர் தொழிலும், துணைவஞ்சி என்ற துறையின் கருத்துடன் ஒன்றி வருவது புலனாகிறது. பகை வேண்டாம் என்று நட்பு பாராட்டும் அரசர் தொழிலும் தூது சென்று இரு நாட்டிற்குமிடையே அமைதியை நிலைநாட்டும் ஏனேர் தொழிலும் இணைந்து, கோபம் கொண்டு போர் செய்ய விரும்பவனை நன்மொழி கூறி நிறுத்துதல் என்ற கருத்தாக நிலைபெற்று மண்ணாசை காரணமாக போர் நிகழும் திணையான வஞ்சியின் கீழ் துணைவஞ்சி என்ற துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவுரை
தொல்காப்பியம் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பல கோட்பாடுகளுக்கும், பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற பல இலக்கிய வகைமைகளுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது. காரணம், ஒவ்வொருவரின் பார்வைகேற்ப, தொல்காப்பிய சூத்திரங்களின் கருத்துகள் விரிவாக்கம் பெறுகின்றன. அதனால்தான் 2000 காலத்திற்கு முற்பட்ட இலக்கண நூலாக இருந்தாலும், தொல்காப்பியம் தற்கால புதுமைக்கேற்ப கருத்துகளை வழங்கி உயிர்ப்புடன் உள்ளது. அந்த வகையிலே புறநானூற்றில் குறிப்பிடப்படும் துணைவஞ்சி என்ற துறையும் தொல்காப்பிய சூத்திரத்தின் அடிப்படையிலே தோன்றி வளர்ச்சிப் பெற்றுள்ளது என்பது இக்கட்டுரை மூலம் புலனாகிறது.
சான்றெண் விளக்கம்
-
சாமிநாதையர். உ. வே., புறநானூறு மூலமும் உரையும், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1923. ப. ருஅஉ
-
இளம்பூரணர், தொல்காப்பியம், பொருளதிகாரம், செய். 165.
-
தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத். 77.
-
வெள்ளைவாரணன். க., புறத்திணையியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1983. ப. ககூஎ.
-
பாலசுந்தரம். ச., தொல்காப்பியம் ஆராய்ச்சி காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், 2012. ப. 171.6.
-
பாலசுந்தரம். ச., தொல்காப்பியம் ஆராய்ச்சி காண்டிகையுரை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், 2012. ப. 173.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.