
தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.
நீலகிரிக்கே உரிய மரங்களைப் பாதுகாப்பதையும், தமது வாழ்வியல் தகவமைப்பில் பெருந்துணை நல்கியமையும், நமது மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களின் நம்பிக்கையின் திரட்சியாக விளங்கியமையும், இயற்கைப் பேணலைத் தக்கவைத்து தலைமுறைக் கடத்துதலையும் உட்செறித்த இவர்களின் மரவழிபாட்டில் ‘நேரி’, ‘பிக்கெ’ உள்ளிட்ட மரங்கள் இடம்பெறுகின்றன. அதில் ‘நேரி’ மரத்தினைக் கொண்டமையும் இவ்வழிபாட்டின் தொன்மையினை இக்கட்டுரை விளக்குகின்றது. நேரி மரத்தினைக் கொண்டு நீளும் ‘சுத்து கல்லு மொரா’ எனும் குறிஞ்சி நிலம் சார்ந்த வழக்காறினைச் சங்கக் கூறுகளோடுப் பொருத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.
படகர்களின் கடவுள் முதுமரம் நேரி - சுத்தக் கல்லு மொரா
ஆதிமுதல், எருமை மந்தை பேணலையும் மலைப்புல வேளாண்மையினையும் தமது வாழ்வியலாகக் கொண்டிருக்கும் படகர்களின் மரபில், பண்பாட்டில் ‘நேரி’ எனும் நாவல் மரம் அடிப்படையானவொன்றாகும். படகர்களின் தாய்மொழியான ‘படுகு’ மொழியில் வழங்கப்படும் ‘நாடு, சீமெ, பெட்டா, அக்க – பக்க, ஊரு, அட்டி’ எனும் அவர்களின் வாழ்க்களப் பரப்பில், ‘அட்டி’ என்பது அம்மக்கள் வாழ்கின்ற ஊராகும். பெரும்பாலும், மலைகளின் கோடுகளிலும், அதன் சரிவினையொட்டியும் அமைந்திருக்கும் இக்குடியிருப்பினை இவர்கள் “அட்டி அணெ” என்று வரையறுப்பதுண்டு. இதில் ‘அணெ’ என்பது மலையில் அமைந்துள்ள புல்வெளியாகும். இதை, இவர்கள் ‘மந்தா’ என்றும் அழைப்பதுண்டு. இந்த இடங்களெல்லாம் நீர்நிலைகளை அடிப்படையாக வைத்தே அமைக்கப்பட்டவையாகும்.
எருமைகளைக் கயிற்றால் பிணைக்கும் மரபில்லாத படகர்கள், அவற்றை அடைக்க கற்களைக்கொண்டு வட்டவடிவில் அமைத்த ‘தோ’ எனும் தொழுவங்கள், படகர்களின் ‘மனெ’ எனும் வீடுகள், பசலைக் கன்றுகளை அடைத்துவைக்க உதவும் ‘கொட்டகெ’ எனும் வீடுபோன்ற சிறிய தொழுவங்கள் ஆகிய கட்டமைப்புகள் இவர்தம் ‘அட்டிகளின்’ அடிப்படைகளாகும். ‘அட்டியின்’ மையப்பகுதியை ‘அட்டணெ’ என்றழைக்கும் இவர்களின் இந்தச் சொற்சேர்க்கை எருமைகளுக்காக உருவாக்கப்பட்ட இவர்களின் வாழ்க்களத்தை நிறுவுகின்றது. அதாவது எருமை மந்தைப் பேணலிற்கான நீர்நிலை, மேய்ச்சல்நிலம் மற்றும் தொழுவம் போன்ற கூறுகளோடு அமையப்பெற்ற இவர்களின் வாழ்விடத்தின் தொடக்கம் மற்றும் மையமாக இந்த ‘அட்டணெ’ விளங்குகின்றது. இங்கிருந்தே அவ்வூரிலுள்ள குடியிருப்புகள் பெருகின எனலாம்.
படகர்கள் தமது ‘அட்டணெயிலேயே’ தமது மரபார்ந்த சமூக மற்றும் வாழ்க்கைவட்டச் சடங்குகளை நிகழ்த்துகின்றனர். கோயில் மற்றும் பெருந்தெய்வ வழிபாட்டு மரபில்லாத இவர்கள் தமது மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களை வழிபடுகின்றனர். அவர்கள் வாழ்ந்த, அவர்களின் குறியீடாக அமைந்த ‘தெவ்வமனெ’, ‘ஹெத்தெமனெ’, ‘தொட்டமனெ’, ‘முத்துரு மனெ’ போன்றவற்றையே தமது வழிபாட்டுத் தலமாகக் கொண்டிருக்கின்றனர்;. ‘இரிய’, ‘ஐயா’ என்று தமது ஆண் மூதாதையர் மற்றும் முன்னோர்களையும், ‘ஹெத்தெ’ என்று பெண் மூதாதையர்களையும் வழிபடும் இவர்களின், இந்த வழிபாட்டின் தோற்ற இடமாக, பொது இடமாக விளங்கும் ‘சுத்தக்கல்லு’ எனும் தலத்தினை, தமது ‘அட்டணெயின்’ மையத்தில் அமைத்துள்ளனர். வட்டம் அல்லது சதுரவடிவில் கற்களால் அமைக்கப்பட்ட இந்தத் திட்டையின் நடுவில் இவர்களின் “கடவுள் முதுமரம்” அமைந்திருக்கும். இவர்களின் இந்த முதுமரத்தை “கடவுள் முதுமரம்” என்பதைவிட அதன் தன்மைகருதி “மாசில் முதுமரம்” என்பதே பொருந்தும். தொன்மை மற்றும் தொடர்ச்சியினால் இந்த நேரிமரங்கள் இவர்களிடையே முதுமரங்களாகத் திகழ்கின்றன.
படகர்கள், தமது முன்னோர்களால் வணங்கப்பட்ட இந்த நேரி மரத்தில் தமது மூதாதையர்களும், முன்னோர்களும் உறைவதாக நம்புகின்றனர். இதேவழக்கம் ஆப்பிரிக்க தொல்குடிகளிடமும் உண்டு. படகர்கள், தமது ‘ஹெத்தெ’ எனும் முன்னோர்கள் உறையும் இடமாக இதைக் கொள்கின்றனர். சுற்றிலும் கல்லால் அமைக்கப்பட்ட இடம், சுத்தம் நிறைந்த இடம் எனும் அடிப்படையில் இந்த இடத்திற்கு இவர்கள் ‘சுத்தக் கல்லு’ எனும் இப்பெயரினை இட்டிருக்கலாம்.
‘ஊநேரி’, ‘கன்னேரி’, ‘பெந்நேரி’ எனும் பலவகைப்படும் இந்த நேரிமரத்தின் பெயராக்கமும் நோக்கப்படவேண்டியவொன்று. இவர்கள் ‘நேரி’ என்றழைக்கும் இந்தப் பெயர்சார்ந்து நுணுகும்போது, இதேபெயர் சங்கநூலானப் பதிற்றுப்பத்தில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. “கல் உயர் நேரிப் பொருநன்” (பதிற்றுப்பத்து – 67.22) என்று செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் கபிலர் பயன்படு;த்தும் “நேரி” என்ற பெயர்பெற்ற மலையானது இந்தப் பெயரோடு வைத்தெண்ணப்படுகின்ற வாய்ப்புடையது. அதாவது, ஒருவேளை இந்த மரத்தின் செறிவால் அம்மலை இப்பெயரினைப் பெற்றிருக்கலாம். அல்லது, உயர்ந்திருக்கின்ற கற்களைக்கொண்ட இம்மலையின் அமைப்பின் அடிப்படையிலும், அதன் உயர்ச்சிநோக்கியும் இப்பெயர் வந்திருக்கலாம். இந்த, உயர்ந்த, நேரானா என்ற பண்புகளும் படகர்களின் நேரி மரத்தோடு பொருந்துவது கவனிக்கவேண்டியவொன்று. படகர்களிடையேயும் ‘நேரி’ எனும் பெயரிலமைந்த ஊர்ப்பெயர்களும், இடப்பெயர்களும் உண்டு. இவை, முழுதும் இந்த நேரிமரத்தைக்கொண்டே பெயர்பெற்றவை. சான்றாக, ‘கன்னேரி முக்கு’ எனும் ‘அட்டியினைக்’ கொள்ளலாம்.
படகர்களின் பெரும்பான்மையான ‘அட்டிகள்’, அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழல் மற்றும் நிலவியலமைப்பினால் பெயர்பெற்றவை. அதில், மரங்களுக்குக் குறிப்பாக, ‘கன்னேரி’ மரங்களுக்குச் சிறப்பிடமுண்டு. நேரிமரத்தின் ஒருவகையாக விளங்கும் இந்தக் ‘கன்னேரி’ எனும் மரத்திற்கானப் பெயராக்கமும் நோக்கத்தகுந்தவொன்றாகும். ‘படுக’ மொழியில் ‘கன்னெ’ என்றால் கன்னி என்றும், கன்னித் தன்மையென்றும் பொருள். எனவே, தன் வாழ்நாள் முழுதும் காய்க்காமல் இருக்கும் தன்மைகொண்ட இந்தவகை நேரி மரத்திற்கு இவர்கள் ‘கன்னேரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதிகளுக்கு இந்த மரத்தினைக்கொண்டே பெயரிட்டுள்ளனர். சான்றாக, மேற்சொன்ன ‘கன்னேரி முக்கு’, ‘கன்னேரி’, ‘கன்னேரி மந்தணெ’ போன்ற ஊர்களைக் கொள்ளலாம். மேலும் இந்த நேரிமரங்கள் இல்லாத படகர்களின் ஊர்களே இல்லையெனலாம். நீலகிரியெனும் குறிஞ்சி நிலத்தில் அடர்ச் சோலைகளுக்கு நடுவில் வாழும் இவர்களைச் சுற்றி பல்வேறு அரிய மரங்கள் இருந்தாலும் இந்தக் ‘கன்னேரி’ மரங்கள் அந்த இடத்தின் பெயராகி நிற்பது அதன் மரபினையும், சிறப்பினையும் பறைசாற்றுகின்றது. ‘சுத்துக் கல்லிலும்’, மேடுபாங்கான இடங்களிலும் இந்த நேரிமரங்கள் அமைந்திருக்கும் இடத்தினை இவர்கள் ‘நேரிமொர மேடு’ என்கின்றனர். கோடை வெயிலும், அடர் குளிரிலும் நிலைகெடாமல் நின்று நிழல்தரும் பண்பாட்டுத் தன்மையாலும், அதன் அமைவிடத்தாலும் இம்மரமும், இம்மரமுள்ள இடமும் சிறப்பிடம் பெறுகின்றன.
தமது வாழ்களத்திற்கு மட்டுமே உரிய மரங்கள், பயன்மிகுந்த மரங்கள் என்ற வகையில் படகர்களிடையே சில மரங்கள் சிறப்பிடம் பெறுவதுண்டு. பெரும்பாலும் நீர்நிலைகளோடு அமைந்திருக்கும், படகர்களின் ‘அட்டி’ முகப்பிலும் எல்லைகளிலும் காணப்படும் நேரிமரங்களையும் இவர்கள் மாசில் முதுமரமாய்ப் பாதுகாப்பதுண்டு. நீர்நிலைகளுக்கான நீர்வரத்தைப் பெருக்குவதாலும், நீர்நிலைகளுக்கு அகன்ற நிழலைத் தருவதாலும் எல்லாவகையான நேரிமரங்களையும், குறிப்பாக, ‘பெந்நேரி மரங்களை’ எல்லைகளில் சுத்தகல் அமைத்து, புனிதத்தன்மையோடு பாதுகாத்து வழிபடுகின்றனர். ஆனால், ‘அட்டணெயிலுள்ள’ ‘சுத்துக் கல்லில்’ ‘கன்னேரி’ மரத்தை மட்டுமே வைத்திருக்கின்றனர். இது குறியீடு, பயன்பாட்டு நிலையோடு தொடர்புடையதாகும். இதனை,
“எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம்இ வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே” (நற்றிணை – பா – 83)
எனும் குறிஞ்சித் திணைப் பாடலோடு ஒப்பாயலாம். அதிலும் அந்தப் பாடலில் இடம்பெறும் கூறுகளோடு படகர்களின் இந்தத் தொல்வழக்காறு பொருந்திபோவது நோக்கத்தகுந்தது. குறிஞ்சிநில வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டுள்ள படகர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும், மொழியினையும் படகர்களின் இந்தச் சடங்கின் தொல்தன்மையினையும் இந்தச் சங்கப் பாடலின் கூறுகள் நிறுவுகின்றன.
தோழிக்கூற்றாக இடம்பெறும் பெருந்தேவனாரின் இந்தப்பாடல் இரவுக்குறியாக வந்த தலைவனிடம் தோழி கூறுவதாக அமைகின்றது. மக்களின் பயன்பாட்டிற்குரிய நீர்நிலைக்கு அருகில் உள்ள கடவுள் உறையும் முதுமரத்தில் வசிக்கின்ற கூகையே, நாங்கள் உனக்கு ஆட்டிறைச்சி, சுட்ட எலிக்கறி உள்ளிட்ட சிறந்த படையலை இடுகிறோம். அதற்கு மறாக நீ எங்களுக்கு ஒன்று செய்ய வேண்டியுள்ளது. அதாவது, இரவுக்குறியாக தலைவன் வரும்போது நீ அவனைக்கண்டு எவ்விதமான ஒலியும் எழுப்பாமல் இருக்க வேண்டும். என்று இரவுக்குறியின் ஆபத்தையும், தற்சமயம் ஊரின், வீட்டின் சூழலையும் சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்குக் கூறுவதாக இந்தப்பாடல் அமைகின்றது.
இந்தப் பாடலில் உள்ள கூறுகளை முதலில் மொழியியல் நிலையில் நோக்கும்போது,
“தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம்இ வலி முந்து கூகை!”
என்ற வரிகளிலுள்ள “உகிர்”, “கூகை” எனும் சொற்கள் இன்றும் படகர்களிடம் வழக்கிலுள்ளது நோக்கத்தக்கது. இதில் உகிர் என்ற சொல்லினை “உகிலு” என்றும் கூகை என்பதை “கூம்மா” என்றும் படர்கர்கள் வழங்கிவருகின்றனர். இந்தச் சொற்களுக்கான ஆக்கத்தினைத் தமிழிலின்றி இம்மக்களின் பண்புநிலையினூடே ஆராய இடமுண்டு. இது இவர்களின் மொழியிலுள்ள தொல்தமிழ்க் கூறிற்கான சான்றாகும்.
‘உகிர்’ என்ற சொல்லே இவர்களிடம் ‘உகிலு’ என்று மாறியதாக பொதுவாகக் கொள்ளவுள்ள இடத்திற்கு இவர்களிடமுள்ள இச்சொல் சார்ந்த ஆக்கம், பண்பாட்டுநிலை கூடுதலான தெளிவினைத் தருகின்றது.
படகர்களின் ‘உகிலு’ எனும் சொல்லாக்கத்தினை ஆயும்போது தமிழில் இன்று வழக்கொழிந்துபோன ‘உ’ என்ற இடைமைச்சுட்டினைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த இடைமைச்சுட்டும் இவர்களிடையே வழக்கிலுள்ளது. சான்றாக, படகர்கள் குழம்பினை “உதக்கா” என்கின்றனர். அதாவது, நீர்மமும், திண்ணமும் அல்லாத இடைமை நிலையில் உள்ளது என்ற பொருளில் இந்தப் பெயரினை வழங்கிவருகின்றனர். அதேபோல, ‘உகிலு’ என்ற சொல்லும் இடைப்பட்டது என்ற பொருள்நிலையிலேயே ஆகியுள்ளதாகக் கொள்ளலாம்.
(படகர்களின் கடவுள் முதுமரம்)
தோள்பட்டையினை “முடு” என்று அழைக்கும் இவர்கள் நுனிவிரலினை “முகி” என்று அழைக்கின்றனர். இந்த முகியினைக் கொண்டு உருண்டை பிடிக்கும் உணவுக் கவளத்தை இவர்கள் “முத்தே” என்கின்றனர். இந்த முகியின் சதைக்கு இடையில் தோன்றுவதால் நகத்தினை இவர்கள் “உகி” என்று அழைத்திருக்கலாம். இதை, “குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்” (திருமுருகாற்றுப்படை வ.313) எனும், கரடியைக் குறிக்கும் சங்கவரிகள் சான்றுபகர்கின்றன. கூரிய நகத்தினைக் கொண்டதால் கரடியை இங்கு ‘உளியம்’ எனும் இச்சொல் குறிக்கின்றது. இதை, படகர்கள் புலியைக் குறிக்கும் “உலி” என்ற சொல்லோடும் பொருத்திப் பார்க்கலாம்.
கூரிய நகங்களைக் கொண்டதால் புலியைப் படகர்கள் “உலி” என்று அழைப்பதாகக் கொள்வதற்கும் இடமுண்டு. படகர்களிடையே உள்ள மரப்பெயர்களில் “உ(ஹ_)லி பிக்கெ” எனும் சொல்லாச்சியுண்டு. அடர்ந்து பரந்து, புலிகள் அமர்வதற்கு ஏதுவான மரமாக விளங்குவதால் இதை இவர்கள் புலியைக் குறிக்கும் ‘உலி’ எனும் பெயர்க்கொண்டு அழைக்கின்றனர். இந்த நற்றிணைப்பாடல் சுட்டுவதைப்போல இந்த “உ(ஹ_)லி பிக்கெ” மரம் படகர்களின் கடவுள் உறையும் முதுமரமாகும்.
பெரும்பாலும் மக்கள் புழங்கும் நீர்நிலைகளிலும் ஊர்த் திடலிலும் இவர்களின் முன்னோர்களின் வழிபாட்டு முதுமரங்கள் விளங்குகின்றன. இந்த முதுமரங்கள் அனைத்துமே அவர்தம் வாழ்களத்தின் மரபார்ந்த மரங்களாக விளங்குவது நோக்கத்தக்கது. இந்த முதுமரங்களில் தம் முன்னோர்கள் உறைவதாக இவர்கள் நம்புகின்றனர். இந்த முதுமரங்கள் பட்டுப்போகும்போது மரபுபடி தம் முன்னோர்களிடம் அருளாடல் வழியாக ஒப்புதல்பெற்று அதே வகையிலான மரங்களை நடுகின்றனர். இது இவர்களின் இயற்கை வழிபாட்டிற்கும் தொல்திராவிடர்களின் மர வழிபாட்டிற்கும் உற்ற சான்றாகும். இந்த நற்றிணைப் பாடலின் பண்பாட்டு நிலையும் படகர்ளின் வாழ்வியலோடு பொருந்தியுள்ளமை நோக்கத்தக்கது. இதை தொல்தமிழரின் குறிஞ்சிப் பண்பாட்டின் நீட்சியாகக் கொள்வதற்கும் இடமுண்டு.
அதேபோல, கூகையைக் குறிக்கும் இவர்களின் “கூம்மா” என்ற சொல்லினைக் கூர்ந்து நோக்கும்போது இதையும் இவர்களின் பண்பாட்டோடு பொருத்திபார்க்க இடமுண்டு. கூகையெழுப்பும் “கூ” எனும் ஒருவிதமான அலறலை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சொல்லை இவர்கள் ஆக்கியுள்ளதாகக் கருதலாம். ஆதியிலிருந்து எருமை மந்தைப் பேணலையும், காட்டெரிப்பு வேளாண்மையினையும் மேற்கொண்டுவந்த இவர்கள் தம் இல்ல அடுப்பிலிருந்து திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் எடுக்கும் சாம்பலினைத் தம் விளைநிலங்களில் கொட்டுகின்றனர். இது இவர்களின் காட்டெரிப்பு வேளாண்மையின் எச்சமென்று கொள்ளலாம். தம் இல்லத்திற்கு முன்புள்ள, இவர்கள் “ஒலா” என்றழைக்கும் சிறு விளைநிலங்களில் அடுப்புச் சாம்பலினைக் கொட்டும்போது இவர்கள் வெகுகவனமாக இருப்பதுண்டு. இந்த அடுப்புச் சாம்பலினை எதுவோ என்றெண்ணி அவ்விடத்திற்கு வரும் கூகைகளையும் அதன் அலறலையும் குழந்தைகள் கேட்டு அஞ்சுமென்று இன்றும் இவர்கள் அக்கறைக் கொள்கின்றனர்.
ஊர் எல்லையிலும் புனிதமரத்தைக் கொண்டிருக்கும் படகர்களின் இப்பழக்கம் சுமேரியர்களுக்கும் உண்டு (மரவழிபாடு, க.ப.அறவாணன், பக்.40). அதோடு, சுமேரியர்கள் மேற்கொள்வதைப்போலவே படகர்களும் தமது புனிதமரத்தை நெருங்குவதற்கும், அதற்கும் சடங்குகளை நிகழ்த்துவதற்குமான உரிமையைத் தனது ஊரினைச் சேர்ந்த பூசாரிகளுக்கு மட்டுமே அளித்திருக்கின்றனர். மற்றவர்கள், குறிப்பாகப் பெண்களுக்கு இந்த மரங்கள் அமைந்திருக்கும் இடத்திலிருந்து விலக்கினைக் கட்டமைத்துள்ளனர். அதேபோல, “மரத்தை வெட்டநேரும்போது, வெட்டும்முன் முன்னோர்க்கு வழிபாடாற்றி, முன்னோரைச் சாமியாடியின்வழி வெளிப்படச்செய்து, மரத்தைவெட்ட ஒப்புதலையும், மரத்தில் வாழும் ஆவியை வெளியேற்றுவதற்கான சூழலையும் தமது முன்னோரிடம் வேண்டிப்பெற்றபின்பே தென் நைஜீரிய மக்கள் மரத்தை வெட்டத் துவங்குவர்” (மரவழிபாடு, க.ப.அறவாணன், பக்.55) எனும் தொல்வழக்குப் படகர்களுக்கும் பொருந்துகின்றது. சுத்துக்கல்லில் உள்ள நேரிமரம் பட்டுவீழும்போது, தம்மூதாதையர்களை அழைத்துச் சாமியாடி, அருள்வாக்கின்வழி ஒப்புதல் பெற்றப்பின்பே அம்மரத்தை அகற்றவோ, அதேபோன்ற புது மரநாற்றினை நடவோ செய்கின்றனர். இந்த வழக்கிலிருந்தே படகர்களின் மூதாதையர்கள் மற்றும் முன்னோர்களுக்கும் இந்த மரத்திற்குமுள்ள மரபுநிலையை அறிந்துகொள்ளலாம். மேலும், இம்மரம்சார்ந்த குறியீட்டு நிலைகளும் இவ்வழக்காற்று மரபின் தொன்மைக்குக் கட்டியமாக விளங்குகின்றன.
துணை நின்றவை
1. சங்க இலக்கியம், கழகவெளியீடு, 2000.
2. படகர்களும் வெள்ளியும் ஓர் குறியீட்டியல் பார்வை, கோ.சுனில்ஜோகி, ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் பன்னாட்டு மின்னிதழ், கனடா, 2022.
3. பொறங்காடு சீமை படகர்களின் மூலிகை மருத்துவம், கோ.சுனில்ஜோகி, ஆய்வியல் நிறைஞர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2011.
4. நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள், கோ.சுனில்ஜோகி, முனைவர்பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.
5. நீலகிரியின் பெருநிலப்பரப்பும் படகர்களின் நிலவியல் அறிவும், கோ.சுனில்ஜோகி, ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் பன்னாட்டு மின்னிதழ், கனடா, 2022.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.