முன்னுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள். இந்நூல் ஒரு அறநூலாகும். திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு அதன் கருத்துக்களை மக்கள் நன்கு அறிகின்றனர். இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் எக்காலத்திலும் முக்காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும், எக்காலத்திலும் முக்காலத்திற்கும் தேவையான கருத்துக்களைத் தரும் அமுதசுரபியாகவும் இருக்கின்றது. வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள் எனும் இவ்ஆய்வுக்கட்டுரை வள்ளுவர் கூறியுள்ள சட்டநெறிகளைப் பற்றி விவாிப்பதாக அமைகின்றது.

முறை எனும் சொல்

சங்கப்பாடல்களில் ‘முறை’ என்னும் சொல் ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்ற பொருள்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை,

“முறை தளர்ந்த மன்னவன் கீழ்க்குடி போலக் கலங்குடி” (கலி.34 : 14)

என்ற பாடலடி குறிப்பிடுவதன் வாயிலாக முறை என்பதற்கு ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்பன பொருள்களாக அமைந்துள்ளதை அறிய இயலுகின்றது. முறை என்பதற்கு பாிமேலழகர் “முறை என்பது அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி”1 எனப் பொருள் விளக்கம் தருகின்றார்.

நீதி வழங்கும் முறை

முறை செய்தல் என்பது நீதி வழங்குதல் எனின் அந்நீதியை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வள்ளுவர் குறிப்பிடுவதை,

“ஓர்ந்து கண்ணோடாது இறைபுாிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வது அஃதே முறை”    (குறள்.541)

என்ற குறட்பா விளக்கிநிற்கின்றது. இக்குறளுக்கு பாிமேலழகர் “தன்கீழ் வாழ்பவன் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யார்மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையுடன் அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அந்நூலின் கண் உரைத்தவாறு செய்வதே முறையாகும்.”2 என உரைவிளக்கம் தருகின்றார். இம்முறையிலேயே நீதி வழங்க வேண்டுமென கலித்தொகையும்

“முறையெனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்” (கலி.133 :13)

என்ற பாடலடியால் அறியலாம். வள்ளுவர் கூறிய நீதி வழங்கும் முறை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

மரண தண்டனை

வள்ளுவர் குறிப்பிடும் கொடியார் என்ற சொல்லிற்கு பாிமேலழகர் “கொடியவர் என்றது தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவிற்கொள்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்றிவர் முதலாயினர்.”3 என்று பொருள் விளக்கம் தருகின்றார். இக்குற்றங்களைச் செய்தவர்களுக்கு கொலைத் தண்டனை(மரணதண்டனை) கொடுக்க வேண்டும் என குறள் உறுதி செய்கின்றது. இக்குற்றங்கள் மன்னிக்கப்படாத குற்றங்களாகக் கருதப்பட்டுள்ளது. அதனால் இக்குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரணதண்டனையே தீர்வாகக் கூறியுள்ளதை,

“கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”    (குறள்.550)

என்ற குறட்பா புலப்படுத்துகின்றது. அதாவது கொடிய செயல்களைச் செய்பவர்களை அரசன் மரண தண்டனை கொடுத்து தண்டிப்பது நல்லவர்களைக் காப்பதங்கே. அது ஒரு உழவன் களையை நீக்கிப் பயிர்களைக் காத்தலுக்கு ஒப்பாகும். வள்ளுவர் குறிப்பிட்டுள்ள மரணதண்டனை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. இத்தண்டனை நடைமுறையில் இருந்தால் மட்டுமே வாழ்வில் குற்றங்கள் குறைந்து வாழ்வு சிறக்கும். அதனால் வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது.

பிறர்மனை நயவாமை

பிறர் மனைவியை மனத்தாலும் அடைய விரும்புதல் பெருங்குற்றமாகும். புராணகாலத்திலங்களிலிருந்தே இது குற்றமாகக் கருதப்பட்டுள்ளது. சான்றாக. இந்திரன் கௌதம முனிவாின் உருவம் கொண்டு, அவரது மனைவியான அகலியையுடன் இன்பம் துய்க்கின்றான். இதனைக் கண்ட கௌதம முனிவர் இந்திரன் தேவர் உலகத்திற்கு தலைவனாக இருந்தாலும் கூட அவனது உடம்பெல்லாம் ஆயிரம் கண்ணாகுக என சாபம் விடுக்கின்றார். அதனால் தேவருலமாக இருந்தாலும் சாி பூலோகமாக இருந்தாலும் சாி ஏழேழ் உலகிலும் பிறன்மனைவியை விரும்புதல் குற்றமாகும். அதற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதையும் அறிகிறோம். வள்ளுவரும் பிறருடைய மனைவியை விரும்புபவாிடம் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு குற்றங்களும் நீங்காமல் நிற்கும் என்பதை,

“பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்”    (குறள்.146)

என்ற குறட்பா வலியுறுத்துகின்றது. பிறன்மனைவியை விரும்புபவர்கு மரணதண்டனையை விளம்புவதாக பாிமேலழகர் தமது உரையில் குறிப்பிடுகின்றார்.

பரத்தயை நாடாமை

பரத்தமை என்பது ஐந்திணைக்கும் பொதுவானதாக இருப்பினும் மருதத் திணையில் மட்டுமே அதிகம் பேசப்படுகின்றது. பரத்தமைத் தொழிலில் ஈடுபட்ட ஆடவர், மகளிர் குறித்து ஆறுமுகம், “பரந்துபட்ட இன்பத்தைத் தருகின்றவர் பரத்தையர். பரந்து அதற்காகச் செல்பவர் பரத்தர். பரத்தர் என்ற ஆண்பாற் பெயருக்குப் பரத்தையர் என்ற பெண்பாற் பெயர் வழங்குகிறது”4 என்று விளம்புகின்றார். மேலும் பரத்தமைத் தொழிலில் ஈடுபட்டு வந்த மகளிர் செல்வ வளம் உடையவர்களிடம் தமது கலைகளை நிகழ்த்திப் பொருள் பெற்று வாழ்ந்தமையும் அறியப்படுகின்றது.

பரத்தையர் குறித்து இளம்பூரணர் தமது தொல்காப்பிய உரையில் “பரத்தையராவர் யாவரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகி அழகும் இளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுத் தங்காதவர்”5 என்று குறிப்பிடுகின்றார். பரத்தமை குறித்து உ.வே.சா “பலவகையானும் உயர் நெறியாகிய அன்புடைய வாழ்க்கை, பூவிற்குப் புல்லிதழ் வாய்த்தற் போலவும் மதிக்கு மறு வாய்த்தற் போலவும் பரத்தையிற்பிரிவு என்னும் இழிந்த ஒழுக்கத்தினால் சிறிது கலக்கமடைகிறது.”6 எனக் குறிப்பிடுகின்றார். பரத்தமை ஒழுக்கத்தை வள்ளுவர் மிகவும் சாடுகின்றார். பொருளையே விரும்பும் விலை மகளிரைத் தழுவுதல், பிணம் எடுப்பவர் பொருளுக்காக இருட்டறையில் முன்னறியாதவாின் பிணத்தைத் தழுவுவதற்குச் சமம் எனவும் வரைவின் மகளிாின் மென்மையான தோளைத் தழுவும் அறிவில்லாதவர்களாகிய கீழ்மக்கள் அழுந்தும் நரகத்திற்குச் செல்வர் என்பதை,

“வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூாியர்கள் ஆளும் அளறு”    (குறள்.919)

என்ற குறட்பா விளக்குகின்றது. அதனைப்போன்று பரத்தமை ஒழுக்கம், கள்ளுண்ணல், சூது ஆகிய மூன்று பழக்கத்தை உடையவர்களிடம் திருமகள் விலகிக்கொள்வாள். அவர்கள் மிகுந்த துன்பத்தை அடைவார்கள் என்பதை,

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு”    (குறள்.920)

என்ற குறட்பா வாயிலாக அறியலாம். தொல்காப்பியர் நால்வகை வர்ணத்தாருக்கும் பரத்தமைப் பிாிவு உண்டு என்கிறார். இன்று சமுதாயத்தில் பரத்தமை ஒழுக்கம் நல்லோர்களால் ஒதுக்கப்பட்டும் அல்லோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது என்பதை அறியலாம். திருக்குறளுக்கு உரை எழுதிய பாிமேலழகர் பரத்தமை ஒழுக்கத்திற்கு மரணதண்டனை உண்டு என்பதை வள்ளுவர் கூறுவதாக குறிப்பிடுகின்றார்.

கள்ளுண்ணாமை

‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற வாசகத்திற்கு ஏற்ப இன்றைய சமுதாயத்தைப் பொிதும் சீர்குலைத்துக் கொண்டிருப்பது மதுப்பழக்கமாகும். கள்ளுண்ணல் என்பது சங்ககாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் கள்ளுண்ணலைப் பெருங்குற்றமாகக் கருதுகின்றது. இதனை,

“நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு”    (குறள்.924)

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி”    (குறள்.923)

என்கின்ற குறட்பாக்கள் எடுத்தியம்புகின்றன. நாணம் என்ற குணத்தை கொண்டிருப்பவர்கள் கள்ளை உண்ணுதல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்யமாட்டார்கள். கள் உண்பவனைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும் வெறுப்பாள். தன் தாயே குழந்தையை வெறுக்கும் பட்சத்தில் சான்றோர்களால் அவன் பொிதும் ஒதுக்கப்பட்டவனாகவே கருதப்படுவான். இக்கருத்தினைத் தென்றலின் சுவடுகள் என்ற நூல், மது அருந்திய கணவன் நமது நாட்டின் பண்பாட்டுச் சின்னமான தாலியைக் குடிக்க காசு இன்றி மனைவியின் கழுத்திலிருந்து அறுத்தான் என்பதை,

“குடிபோதையில்
அறுத்தான்
கட்டியதாலி”7

என்ற கவிதை வாிகள் புலப்படுத்துகின்றன. மதுவால் இன்று நாட்டின் ஒழுக்கம் சீர்கெட்டு தீயசெயல்கள் அதிகாித்து வருகின்றன.

முடிவுரை

வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள் அனைத்துமே என்றைக்கும் தேவையானவை. அவற்றில் நீதி வழங்கும் முறை, மரணதண்டனை, பிறர்மனை நயவாமை, கள்ளுண்ணாமை, பரத்தயை நாடாமை போன்ற கருத்துக்கள் வாழ்விற்குத் தேவையான மிக அத்தியாவசியமான கருத்துக்களாகும். ஏனெனில் நீதி என்பது இன்று அனைவருக்கும் ஒன்றாக இல்லை. பணம், பதவி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு ஒன்றாகவும் உள்ளது. அதனால் நீதி என்பது எப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை வள்ளுவர் கூறியுள்ளதையும், இன்று சமுதாயத்தில் பல குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது மதுவும், கடுமையான தண்டனை இன்மையும் இதனையே வள்ளுவர் கள் உண்ணக்கூடாது என்றும், குற்றங்கள் புாிந்தவர்களை களை எடுப்பது போல் களைய வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார். பிறர்மனைவியை விரும்புவதையும், பரத்தமை ஒழுக்கத்தையும் முழுமையாக சாடுகின்றார். இக்குற்றங்கள் நிகழ்ந்தால் சமுதாயம் சீர்கெட்டு அழிந்துவிடும் எனவும், பண்பாடு, ஒழுக்கம் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே குறிப்பிட்டுள்ளார். வள்ளுவர் சுட்டியுள்ள சட்டநெறிகள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவையாகும்.

சான்றெண் விளக்கம்

    1.முனைவர் மு.முத்துவேலு, இலக்கியங்களில் சட்டநெறிகள், ப.17.

    2. செ.மா.கணபதி, பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும், ப.11.

    3. முனைவர் மு.முத்துவேலு, மு.நூ., பக்.80-81.

    4. அ.ஆறுமுகம், சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு, ப.56.

    5. தொல்.பொருள்.இளம்.(உ.ஆ), ப.295.

    6. உ.வே.சாமிநாதையர், குறுந்தொகை நூலாராய்ச்சி, ப.73.

    7. தென்றலின் சுவடுகள் (கவிதைத்தொகுப்பு), ப.15

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[ Disclosure: As an Amazon Associate, I earn from qualifying purchases.]