‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.
காலம் இதழ்களை என்னால் தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. ஆனாலும் படித்த இதழ்கள் மனசுக்குள் பதியமாயிற்று. மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களின் புத்தகங்களால் குவிந்த தலாத்துஓயா இல்லத்தில்தான் முதன்முதலாக காலம் சஞ்சிகையை கண்டேன். என்னுடன் அதிநேசத்தோடு இருந்த கே.கணேஷ் அவர்கள் நான் மிகுந்த ஆர்வத்துடன் காலம் இதழ்களை படிப்பதைப்பார்த்து ஒருசில காலம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக தந்தார்; (பல பெறுமதியான நூல்களை அவரது கையொப்பத்துடன் எனக்கு தந்திருந்தார்). கொழும்பு போகும்போது புத்தக கடைகளில் காலம் இதழை கண்டால் வாங்கிக்கொள்வேன். என் வாசிப்புப் புலத்துக்கு காலம் சஞ்சிகையும் வெளிச்சமிட்டிருக்கிறது.
35 வருடங்களாக இயங்கும் காலம் 61 இதழ்களை பிரசவித்திருக்கிறது. காலம் பற்றிய அருண்மொழிவர்மனின் அவதானிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது: “காலம் இதழ் வெளிவரத் தொடங்கியதிலிருந்து பத்தாவது ஆண்டுக்காலமான 2000 வரை புலம்பெயர் நாடுகளில் வெளியான ஏனைய அனைத்து இதழ்களுமே தற்போது நின்றுவிட்டன. இப்படியான ஒரு சூழலில் காலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் அதன் தொடர்ச்சித் தன்மையை முக்கியமான ஓர் அம்சமாகவே பார்க்கின்றேன். தமிழின் சிறப்பு அதன் தொன்மையும் தொடர்ச்சியும் என்று கா. சிவத்தம்பி அவர்கள் சொன்னது போல, இதழொன்றின் சிறப்பானது அதன் உள்ளடக்கத்திலும் அதன் தொடர்ச்சியிலும் இருக்கின்றது என்றே கருதுகின்றேன்”. டொமினிக் ஜீவா ஐம்பது வருட காலத்தில் 401 ‘மல்லிகை’ இதழ்களை வெளிக்கொணர்ந்து சாதனை படைத்திருக்கிறார். 2007 ஆவணி மாதம் தலைபிரசவம் கண்ட ‘ஜீவநதி’ இம்மாதம் (சித்திரை 2025) 257ஆம் இதழை வெளியிட்டு பெரும் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜெயமோகனின் வார்த்தைகளில் கூறுவதானால், ‘காலம் சஞ்சிகை முப்பத்தி ஐந்து ஆண்டுகள் இயங்கி, இலக்கிய மணம் பரப்புகிறது. பலபெரும் வணிக நிறுவனங்கள் கூட இலக்கிய சஞ்சிகைகள் வெளியிடும் முயற்சியில் தோல்வியடைந்த வரலாறுகள் பல உள்ளன. காலம் அர்பணிப்பான உழைப்பு, உண்மை, ஒற்றுமையுணர்வு காரணமாக கால்பதித்து நடக்கிறது. இலக்கிய வரலாற்றில் இதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது’ (இந்த வரிகளுக்குள் ‘ஜீவநதி’யையும் இணைத்துக்கொள்வோம்).
காலத்தின் நோக்கத்தினை அதன் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார்: “காலத்தின் முக்கிய நோக்கம் இலக்கியமாகவும், எல்லைகளைக் கடந்தும் தமிழ் எழுத்தை அடையாளம் காணுவது”. சிறுபத்திரிகைகளுக்கான விகடன் விருது 2014இல் காலம் சஞ்சிகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. “காலத்தின் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்படவேண்டியவை அதன் சிறப்பிதழ்களாகும். மஹாகவி, சுந்தர ராமசாமி, குமார் மூர்த்தி, ஏஜே கனகரத்னா, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், சிரித்திரன் சுந்தர், பத்மநாப ஐயர், ஏ.சி. தாசீசியஸ், கா. சிவத்தம்பி, அசோகமித்திரன், மல்லிகை ஜீவா, செல்வா கனகநாயகம், நாச்சிமார் கோவில் கண்ணன், தெளிவத்தை ஜோசப், குழந்தை சண்முகலிங்கம் போன்ற ஆளுமைகளுக்குச் சிறப்பிதழ்களை வெளியிட்டிருப்பதுடன் நாடகச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ் மற்றும் இயல்விருதுச் சிறப்பிதழ்களையும் காலம் வெளியிட்டிருக்கின்றது. இந்தச் சிறப்பிதழ்களில் இடம்பெற்ற குறித்த ஆளுமைகளின் பேட்டிகளும், ஆளுமைகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளும் முக்கியமானவை என்றே கருதுகின்றேன்” என்ற அருள்மொழிவர்மனின் காலம் பற்றிய கவனிப்பை படித்தபோது ஜீவநதி சிறப்பிதழ்களும் (ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ், ஈழத்து நாவல் சிறப்பிதழ், ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், ஆளுமை சிறப்பிதழ்கள், ஆண்டு மலர்கள் எனப் பல) நினைவில் பிரவகித்தன. .
1990 ஜூலை மாதம் முப்பது பக்கங்களுடன் காலம் முதல் இதழ் பிரசவமானது. 15 கவிதைகள், 02 சிறுகதைகள், ஒரு கட்டுரை, ஒரு நேர்காணல் (திரைபட தயாரிப்பாளர்), சிறு குறிப்பு இவையே முதலிதழின் உள்ளடக்கமாகும். ஜனவரி 2025 வெளிவந்திருக்கும் காலம் 61 – 62 இதழின் பக்கங்கள் 210 ஆகும். கவின் மலரின் மிகநீண்ட நேர்காணல் காலத்தின் 19 பக்கங்களில் குவிந்திருக்கிறது. கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர், அரங்கக் கலைஞர் என பன்முகங்களைக் கொண்ட கவின்மலரை 15 மணிநேரம் சாம்ராஜ் நேர்கண்டிருக்கிறார். ‘கித்தார், பெரியார், கவின் மலர்’ என்ற தலைப்பில் அமைந்த இந்த நேர்காணல் வித்தியாசமானதொரு வாசிப்பனுவத்தினைத் தருகின்றது. சிறுகதை (எஸ்.ராமகிருஷ்ணன்: ‘நிழல் உண்பதில்லை’, ‘மீன் கதைகள்’: ஆங்கிலம் மூலம் ஜனிகா ஓசா; தமிழில் அ.முத்துலிங்கம், மலர்விழி மணியன்: ‘பின்னவள்’, செ.டானியல் ஜீனா: ‘கொடியின் நிழல்’, அசை சிவதாசன்: ‘புதிய சந்திரன்’, ஃபங்கி ரோன்: ‘வேலை’, மந்தாகினி: ‘சைபோர்க் குழந்தை’, ‘லேடியின் கனவு’: டோபையாஸ் ஓலஃப்; தமிழில் மைத்ரேயன்), கவிதை (ஜி.ஏ.கௌதம், தர்மினி, சித்தி றபீக்கா பாயிஸ், தேவ அபிரா, சேரன்), கட்டுரை (வெங்கட்ரமணனின் ‘இண்டிகோ: ஒரு நிறத்தின் வரலாறு, , ஷோபா சக்தியின் ‘எழுதும் கதை’, முனைவர் பால சிவகடாட்சமின் ‘ஆடு ஏன் பலிகடா ஆனது?’, இளங்கோவின் ‘இசை அழைத்துச் செல்லும் பாதைகள்”, சுகுமாரனின் ‘அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்’, என்.கே.மகாலிங்கத்தின் மு.பொன்னம்பலம் அஞ்சலி, கலாநிதி ஆனந்த ராஜாவின் ‘ரஷ்யாவின் பொருளாதாரச் சீரழிவும் லெனின் பதவி இழப்பும்’, லெனின் சிவத்தின் ‘சமனற்ற நீதி: சரித்திரத்தை புரட்டிய வாழ்க்கை’, இ.கிருஷ்ணகுமாரின் ‘10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா’, குசல் பெரேராவின் ‘வடக்கு- கிழக்கு தமிழர் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு வழங்கிய 29வீத ஆணை என்ன?’, சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘இயேசுவின் பிறப்புக் கதைகள்’), நூல் அறிமுகம் (சிங்கப்பூர் சிறுகதைத் தொகுப்பு, நினைவு நல்லது) நாவல் பகுதி (பா.அ.ஐயகரன்: ‘மிக நீண்ட விசாரணை’) என காலம் சுமந்திருக்கும் படைப்புகளை பற்றி விரிவாக எழுதும் ஆர்வத்தினை இன்னுமொரு கட்டுரைக்கு வைத்துவிட்டு, இங்கு 60 பக்கங்களை நிறைத்திருக்கும் ‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ பற்றியே பேச விழைகிறேன்.
காலம் இதழாசிரியர் செல்வம் அருளானந்தம் ‘நுண்மாண் நுழைபுல நுஃமான்’ என ஆசிரியர் தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்த தலைப்பினை பார்த்தபோது,
“நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று.” (407)
என்ற குறள் மனசுக்குள் பளிச்சிட்டது. ‘நுண்ணிய, மாட்சிமையுடைய ஆழ்ந்து தெளிந்த அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் செய்யப்பட்ட சிறப்பான பொம்மை போன்றதாகும்’ என்பது இக்குறளின் கருத்தாகும். பேராசிரியர் நுஃமான் அவர்களுடைய புலமை நுண்மாண் நுழைபுலம் மிக்கதாகும். அதாவது நுண்ணிய, மாட்சிமையுடைய ஆழ்ந்து தெளிந்த புலமையாகும். அது மானுட உணர்வுகளால் உருவானதாகும். இதனையே இவ்விதழ் பிரதிமை செய்துள்ளது. நுஃமானின் நுண்மாண் நுழைபுலச் சிறப்பை வெளிப்படுத்தும் ஆசிரியர் தலையங்கம் இவ்விதழின் அனைத்து சிருஷ்டிகளுக்குமான சாவியைப் போல் உள்ளது. இந்த தலைப்பு நுஃமான் அவர்களது புலமைத்துவ வரைபடத்தினை நுட்பமாக தீட்டியிருக்கிறது.
‘நினைவில் நிற்பது என்னை மயக்கிய அவரின் இனிமையும், தோழமையும், கம்பீரமும்தான்! அவற்றை இன்றுவரையும் இலங்கையில் எந்தப் பேராசிரியரிடமும் நான் காணவில்லை. ஒரு சிறப்புமில்லா என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருந்தகையின் நடத்தை என் மனதில் பெரும் பசுமை நினைவாகப் பதிந்தது. என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு தனிப்பட்ட உரையாடலில் "தமிழில் சலிப்பைத் தரும் எழுத்தை எழுதுபவர்கள் பெருவாரியாகவும், முக்கிய படைப்புகளைத் தருபவர்கள் குறைவாகவும் எழுதுகிறார்கள். அதற்கு நல்ல உதாரணம் பேராசிரியர் நுஃமான். நிறைய எழுதிய எழுத வேண்டியவர்கள் எப்போதாவதுதான் எழுதுகின்றார்' என்றார். அதற்குக் காரணம் தரமாக எழுதுவதற்காக அவர் எடுக்கும் கடின முயற்சியே! பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தமிழுக்குக் கிடைத்த அருங்கொடை, புதிய தமிழ்க் கவிதைக்கும், தமிழ் இலக்கியத் திறனாய்வுக்கும், மொழியியலுக்கும், மார்க்சிய இலக்கிய விமர்சனத்திற்கும், இனத்துவம் சார்ந்த சமூக விஞ்ஞானக் கற்கைக்கும் அவர் ஆற்றிய பணிகள் கனதியானவை. அவரைக் கொண்டாடுவதும், அவர் படைப்புகளைப் பரவலாக எடுத்துச்சென்று உரையாடுவதும் அவசியமானது. நவீன தமிழில் எதிர்ப்புக் கவிதை, தமிழ் மொழியியல், நவீன தமிழ் இலக்கணம், மூலத்துக்கு விசுவாசமான மொழிபெயர்ப்பு, அரசியல் கவிதை, ஈழத்து நூல்கள் செம்பதிப்பு ஆகிய பல தளங்களில் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அவர் விளங்குகிறார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய - மும்மொழிகளில் அவர் ஆற்றிய பணிகளுக்குக் காலம் இதழின் கௌரவிப்பான சிறிய பூங்கொத்து இந்த இதழ்.”
- சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் (இரா) -
“அடையாள அரசியலும் பண்பாட்டுப் பன்மைத்துவமும்” என்ற கட்டுரை இந்த சிறப்பிதழுக்கு முத்தாய்பாய் அமைந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் (இரா) இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் “Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity” என்ற ஆங்கிலமொழிமூல நூலை மையப்படுத்தி இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. நுஃமான் அவர்களது இந்நூலைப் பற்றியும் இது பற்றி எழுப்பட்ட இராஜேஸ்கண்ணன் அவர்களது கட்டுரை பற்றியும் சற்று விரிவாக துலக்க முனைந்துள்ளேன். இலங்கை முஸ்லிம்களின் அடையாள உருவாக்கத்தினை நுண்மையாய் ஆய்ந்திருக்கும் நுஃமான் அவர்களது ஆங்கில நூல் ‘ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்’ ஆகும். “ஈழத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எனது வாசிப்புகளின்போது, முஸ்லிம்களின் அடையாள உருவாக்கம் பற்றிய வாசிப்புகளில் நுஃமான் எழுதிய Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity, என்ற நூல் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. முஸ்லிம்கள் தேசிய இனமாக உருப்பெற்ற வரலாற்றினையும், இனமுரண்பாட்டின் வரலாற்றறையும் அந்த நூலில் அவர் ஆய்வுபூர்வமாக முன்வைத்திருப்பார். ஒரு கவிஞராகவும், மொழியியலாளராகவும் அதுவரை நான் அறிந்திருந்த நுஃமானின் அரசியல் பிரக்ஞையை அந்த நூலின் மூலமாக அறிந்துகொண்டேன்” என்கிறார் அருண்மொழிவர்மன். இதை ஒத்த கருத்தினை இரா பின்வருமாறு தெளிவுறுத்துகின்றார்:
“பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் ஆய்வுகளில் இலக்கியம், மொழியியல் கடந்து, சமூகவியல் முக்கியத்துவம் மிக்கதாகப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றில் 'Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity' குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்துடன் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய ஆழமான கருத்துகளையும் விவாதங்களையும் முன்வைக்கின்றது. அவரது இலக்கியம் மற்றும் மொழியியல் மையமான பேராளுமையின் ஒளியில் இந்த நூலின் முக்கியத்துவம் விவாதிக்கப்படாது மறைந்துபோனதோ என்று சிந்திக்கவைக்கின்றது.”
இந்த சிந்தனை உந்தலினாலேயே இந்நூலைப் பற்றி ஆய்வுப்பிரக்ஞையுடன் இரா இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். நுஃமான் அவர்களது இந்நூல் பற்றி எழுதப்பட்ட மிக விரிவான விமர்சனப் பார்வை இதுவாகவே இருக்கக் கூடும். சமூகவியல் துறையை பிரதிநிதித்துவம் செய்யும் புலமையாளரான இக்கட்டுரையாளர் (இரா) நுஃமான் அவர்களது நூலை சமூகவியல் தரிசனங்ளோடு பலகோணங்களில் நுண்ணாய்விற்கு உட்படுத்தியிருக்கிறார். மிகத்தீவிரமான வாசிப்பில் ஆய்வின் நுண்தளங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்நூலில் நாம் கவனம் கொள்ளவேண்டியதை நுட்பமாக்கிச் செல்கின்றன இராவின் எழுத்துக்கள். நுஃமான் அவர்களது நுண்மாண் நுழைபுல ஆய்வுகள் அவரை ‘துரையிடையிட்ட’ புலமையாளராக நிலைக்கச் செய்துள்ளமைப் பற்றி கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு விபரிக்கின்றார்:
இலங்கைத் தமிழ்ச் சூழலில் மார்க்சியக் கருத்துநிலையோடு 'தமிழியல் ஆய்வுகளையும் தமிழ் இலக்கியப் படைப்பாக்கங்களையும் தமிழ்த் திறனாய்வு நெறியையும் வளர்த்தெடுத்த குறித்துச் சொல்லத்தக்க முதன்மையான அறிஞர்களில் எம்.ஏ. நுஃமான் தனித்துவமானவர். ஈழத்தின் சிறந்த கவிஞராகவும், விமர்சகராகவும் விளங்குகின்ற இவர், மொழியியலில் ஆழ்ந்த புலமைத்துவம்மிக்க தமிழ்ப் பேராசிரியராக மதிப்புப்பெற்றவர். மொழியின் இயங்குதளம் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் பின்னணிகளோடு எவ்வாறு பிணைந்துள்ளது என்பதை தனது நுண்மாண் நுழைபுல ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியவர். 'தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்த அடிப்படையான மார்க்சிய கருத்துநிலைத் தெளிவுடனும் அதுசார்ந்த இயங்கியல் தன்மைவாய்ந்த சுயமதிப்பீடுகளுடனும் இலக்கிய, மொழி-யியல் ஆய்வுகளைத் தந்தவர். பொதுவாகவே மார்க்சிய கருத்துநிலைப்பட்ட அறிஞர்களின் துறைசார்ந்த கண்ணோட்டங்களில் ‘மார்க்சிய சமூகவியல்' உள்ளடக்கங்கள் நிறைந்திருக்கக் காணலாம். இது அவர்களைச் சமூகவியல் தரும் அணுகுமுறைகளோடு ஆய்வுகளைச் செய்யும் ஓர் ஆய்வியல் செழுமைக்கு இட்டுச்செல்கின்றது. இது 'துறையிடையிட்ட’(inter-disciplinary) புலமையாளர்களாக அவர்களை நிலைக்கச்செய்கின்றது.
234 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வு நூலை ‘இன ஆய்வுகளுக்கான சர்வதேச மையம்’ (ICES) 2007இல் வெளியிட்டது. அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நோர்வேயின் முகவர் நிறுவனத்தின் (NORAD) அணுசரணையுடன் ICES இயங்கியது. ICES உடன் இருந்த தொடர்பு பற்றியும் இந்நூல் வெளிக்கொணந்தமை பற்றியும் ஒரு நேர்காணலில் பேராசிரியர் நுஃமான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
“இன ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் (ICES) இன நல்லுறவைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்ட அரசு சாரா நிறுவனம், நீலன் திருச்செல்வம், ராதிகா குமாரசாமி ஆகியோர்தான் அதைத் தொடங்கி இயக்கினர். அவர்கள் இருக்கும்வரை அவர்களுடைய செல்வாக்கால் ICES சிறப்பாகச் செயற்பட்டது. பிந்திய காலத்தில் ராஜபக்ச அரசு அரசுசார்பற்ற நிறுவனங்களை முடக்கும் நோக்கில் அவற்றின் நிதி மூலங்களைக் கட்டுப்படுத்தியபோது ICES உம் பாதிக்கப்பட்டது. இலங்கையில் இன நல்லுறவை மேம்படுத்துவதில் எனக்குக் கருத்து ஒற்றுமை இருந்ததால் நானும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டேன். றெஜி சிறிவர்த்தனவும் அங்கு முக்கியமான பணியில் இருந்தார். முதலில் றெஜியின் 'சோவியத் யூனியனின் உடைவு' நூலை சேரனும் நானும் பதிப்பித்தோம். ICES ஏற்பாடுசெய்த கருத்தரங்குகள் சிலவற்றிலும் பங்குபற்றியிருக்கிறேன். இலங்கையில் இன உறவு தொடர்பான விரிவுரைத் தொடர் ஒன்றை ICES ஏற்பாடு செய்தது. அத்தொடரில் Undestanding Sri Lankan Muslim Identity என்ற தலைப்பில் நான் பேசினேன். அதை அவர்கள் சிறு நூலாகவும் வெளியிட்டார்கள். 2005ஆம் ஆண்டளவில் Sri Lankan Studies என்ற பெரிய ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கினார்கள். அது தொடர்பான பல ஆய்வு நூல்கள் வெளிவந்தன. அவ்வரிசையில்தான் Sri Lankan Muslims: Ethnic identity within Cultural Diversity என்ற எனது ஆய்வு நூலும் 2007இல் வெளிவந்தது. இந்த வரிசை நூல்களை முதலில் மூன்று மொழிகளிலும் வெளியிடும் திட்டம் அவர்களுக்கு இருந்தது. நிதிப் பற்றாக்குறையினால் அது நிறைவேறவில்லை. 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் (ICES) பணிப்பாளர் சபையிலும் சுமார் மூன்று ஆண்டுகள் செயற்பட்டிருக்கிறேன்” (முற்றுப்பெறாத விவாதங்கள்; 2023: 17).
பேராசிரியர் நுஃமான், தன்னுடைய தந்தை B. M. மக்பூல் ஆலிம் அவர்களது நினைவுக்கு இந்நூலை காணிக்கை யாக்கியிருக்கிறார். இந்த நூல் படிப்படியாக வளர்த்துச் செல்லப்படும் ஆறு அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது. இதனை இரா மிக்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
Language, Religion and Ethnicity: The Case of Sri Lankan Muslims
இலங்கை முஸ்லிம்களின் மொழி, சமயம், இனத்துவம் தொடர்பான அடிப்படையான தகவல்களை முதலாவது அத்தியாயம் விளக்குகின்றது. முஸ்லிம்கள் தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்த விரும்பாத போதும் தங்கள் தாய்மொழியாகத் தமிழை ஏன் பேசுகிறார்கள் என்ற கேள்வியைத் தன்னிடம் ஒரு பட்டமேற்படிப்பு மாணவி கேட்டதற்கு, இலங்கை மஸ்லிம்களின் இனத்துவ உருவாக்கத்தின் சிக்கல்தன்மைக்கான வரலாற்றுப் பின்புலத்தை விளக்கியதாகக் குறிப்பிட்டு முதலாவது அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். உண்மையில் இந்தக் கேள்விக்கான தர்க்க ரீதியான பதிலளிப்பாகவே பின்னுள்ள அத்தியாயங்கள் விரிகின்றன என்கிறார் இரா.
Muslims in Sri Lanka and the Sri Lankan Muslims
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் எனும் இரண்டாவது அத்தியாயம் இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் வேறுபட்ட வகைமையினரை வரலாற்றுப் பின்புலத்துடனும் சமூக, பொருளாதார, அரசியல் பின்புலத்துடனும் அறிமுகம் செய்கின்றது.
Language and Identity: A Sociolinguistic Profile of Sri Lankan Muslims
இலங்கை முஸ்லிம்களின் சமூகமொழி-யியல் விவரத்திரட்டினை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் மொழியும் அடையாளமும் குறித்து மூன்றாவது அத்தியாயம் ஆராய்கின்றது.
Politics of Muslim Identity Historical Roots
முஸ்லிம்களின் அடையாள அரசியலை வரலாற்று அடிப்படைகளுடன் நான்காவது அத்தியாயம் விளக்குகின்றது.
Religious Awareness and the Process of Islamization
முஸ்லிம்களின் சமய விழிப்புணர்வையும் இஸ்லாமியமயமாக்கச் செயல்முறையையும் அதன் பிரச்சினைகளோடு ஐந்தாம் அத்தியாயம் பேசுகின்றது.
Ethnic Identity and Muslim Women: Gender Equality or Subordination?
இனஅடையாளமும் முஸ்லிம் பெண்களும் தொடர்பாக விவாதித்தது அவர்களின் இரண்டாந்தர நிலை அல்லது பால்நிலை சமத்துவம் தொடர்பில் ஆறாவது அத்தியாயம் விளக்கமளிக்கின்றது.
இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவாகக் குறிப்பிடப்படும் கருத்துக்கள் சமாதானம், சகவாழ்வு, சுதந்திரம் பற்றியவையாகவே அமைந்தன. குறிப்பாக "இலங்கை முஸ்லிம்களின் அடையாளம் என்பது 19ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்களவர், தமிழர்களின் இன மைய- தேசியவாதத்துக்கான பதிலிறுப்புக்களிலிருந்து கட்டமைக்கப்பட்டதும், வளர்க்கப்பட்டதுமான எதிர்வினையாற்றும் ஓர் அரசியல்- பண்பாட்டுக் கருத்துநிலையாகத்தான் இருந்தது” (நுஃமான், 2007) என்ற முடிவுக்கு வருவதற்கான அடிப்படைகளே முன்னுள்ள அத்தியாயங்களின் விவாதங்களாக அமைந்துள்ளன. சமசந்தர்ப்பம் வழங்குதல், ஒவ்வொரு இனங்களுக்குமான சனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் பற்றி வலியுறுத்துவதுடன் "இன நல்லிணக்கத்துக்கும் சமூக சகவாழ்வுக்குமான முன்நிபந்தனையாகச் சமவுரிமைகளை வழங்குவதே அமையும்” (நுஃமான். 2007:215) என்றும் குறிப்பிடுகிறார். "அனைத்துச் சிறுபான்மை சமுதாயங்களும் தமக்கு எதிரான இனரீதியான வன்முறைகளை அனுபவிக்கிறார்கள் என்பதுடன் எந்தப் பாதுகாப்பு உணர்வையோ சுதந்திரத்தையோ கொண்டிருப்பதில்லை என்பதுடன் இதுவே அவர்களின் உளவியல் யதார்த்த நிலையுமாகும். இது பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தொடர்புடைய அரசாங்க நிறுவனங்கள் அவர்களின் மொழியுரிமையை ஒடுக்கியே வருகிறார்கள்" (நுஃமான். 2007:215) என்றும் குறிப்பிடுகின்றார். இறுதியில், "சமத்துவம் என்பது சமாதானத்தின் முன்நிபந்தனை, சமாதானம் என்பது சுதந்திரத்தின் முன்நிபந்தனை, ஒரு குடும்பம், ஒரு சமுதாயம், ஒரு நாடு என்பவற்றில் இந்த முன்நிபந்தனைகள் பிரயோகமாக வேண்டும், முழு உலகமும் நல்லிணக்கமான உறவை பேணுதல் வேண்டும்” (நுஃமான், 2007:216) என்று நிறைவுசெய்கிறார். நுஃமான் அவர்களது இந்த நிறைவு வரிகளை பார்க்கையில் 1990 இல் அவரெழுதிய ‘என் கடைசி வார்த்தைகள்’ என்ற கவிதை மனசுக்குள் சுழல்கிறது:
என் கடைசி வார்த்தைகள் இவைதான்
சமத்துவம் சமாதானம் சுதந்திரம்
எங்கு சமத்துவம் இல்லையோ
அங்கு சமாதானம் இல்லை
எங்கு சமாதானம் இல்லையோ
அங்கு சுதந்திரம் இல்லை
என் கடைசி வார்த்தைகள் இவைதான்
சமத்துவம் சமாதானம் சுதந்திரம்
நீ என் சமத்துவத்தை நிராகரிக்கிறாயா?
நீ சமாதானத்தை இழந்தாய்
உன் சுதந்திரத்தை இழந்தாய்
நீ என் சமத்துவத்தை அழித்திட
துப்பாக்கியை நீட்டுகிறாயா
துப்பாக்கி சமாதானத்தின் எதிரி
சுதந்திரத்தின் எதிரி
என் கடைசி வார்த்தைகள் இவைதான்
சமத்துவம் சமாதானம் சுதந்திரம்
வான் அதிரக் கூவுங்கள் மனிதர்களே
சமத்துவம் சமாதானம் சுதந்திரம்.
இந்த ஆய்வு நூலில் விவாதிக்கப்படும் விடயங்களும், நூலாசிரியர் வலியுறுத்தும் முடிவுகளும் வெளிவந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இதுபோன்ற பல ஆய்வுகளை 'இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம்' (ICES) போன்ற நிறுவனங்கள் முன்னெடுத்த போதிலும், இன்றுவரை சகவாழ்வும் நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியமாகாத நிலையே யதார்த்தமானது. இது இன்றும்கூட இந்த நூலில் கருத்தாடப்படும் விடயப்பொருளின் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றது.
இந்நூலில் பேராசிரியர் முன்வைத்துள்ள கருத்தாடல்கள் மூலம் அவர் எவ்வாறு துறைகடந்த புலமையாளராக செயற்பட்டிருக்கிறார் என்பதை இரா துல்லியமாக துலக்கியுள்ளார். ‘'பன்மைத்துவம் -தேசியவாதம்- அடையாளம்' பற்றிய உரையாடல் துறைகடந்த உரையாடலாக விருத்திபெற்றுள்ளது. தமிழ்ப் பேராசிரியரான நுஃமான் அவர்கள் தான்சார்ந்த சமூகத்தை முன்வைத்து மிகத்தீ-விரமான இந்த உரையாடலை நிகழ்த்தியிருப்பது அவரைத் துறை கடந்த (transdisciplinary) புலமையாளராக காட்டுகின்றது. தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சமூக விஞ்ஞான ஆய்வுக்கான அணுகுமுறைகளையும், தகவல் பின்புலங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரலாறு, அரசியல், சமூகவியல், பண்பாடு தொடர்பான புலமைப் பின்னணியோடு குறித்த விடயத்தைத் தரிசிக்கிறார். இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்ட இனத்துவப் பாரபட்சத்தையும் முரண்பாடுகளையும் களைவதற்கான பல்வேறு மாதிரிகள் முன்வைக்கப்படுகின்றன. 'கனேடிய கிடைத்தளக் கூட்டு” (Canadian mosaic) போன்ற 'பண்பாட்டுப் பன்மைத்துவ மாதிரிகள்' முன்மாதிரிகளாக வலியுறுத்தப்படுகின்றன. அவற்றின் அடிப்படையான நோக்கு 'மற்றமையைப் - புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதுமே' (understanding - and recognize others) ஆகும். இது இலங்கைச் சமூகத்தில் எந்தநிலையில் உள்ளது என்பதை முஸ்லிம் சமூகத்தை - மையப்படுத்திக் கருத்தாடுகின்றார் பேராசிரியர். குறித்த ஓர் இனத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டு ஓர் அகநிலையாளராக (insider) அந்த இனம் தொடர்பான கருத்துநிலையையோ இனஉணர்வு நிலையையோ பேசுவது ஓர் புலமைநிலைப்பட்ட ஆய்வாளருக்கு இடர்மிக்க ஒரு காரியமாகும். ஏனெனில், ஆய்வுக்கான புறவயம் பெரும்பாலும் வருவதில்லை. கல்வியியலாளர்கள்கூட இனத்துவ உணர்வுநிலையின் அழுத்தத்துக்கு உட்பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தனது நூலுக்கான முன்னுரையில் தெளிவுபடுத்துகிறார். "சமகால இலங்கை நிலவரத்தில், இனவுணர்வும் முரண்பாடும் அதியுச்சநிலையில் காணப்படும் நிலையில், ஒரு மக்கள் குழுமத்துக்கான இனத்துவக் கருத்துநிலையை விமர்சிக்கின்ற அகநிலையாளராக இருப்பது சிக்கலானதாகும். இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் ஒரு புறவயமானதும் சமநிலையானதுமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளேன். ஓர் அகநிலையாளன் புறநிலையாளனின் கண்ணோட்டத்தில் பேசுவது கடினமானதொரு இடுபணியாகும்" (நுஃமான், 2007:xi) என்று குறிப்பிடுகிறார். இந்தத் தெளிவோடு குறித்த விடயம் தொடர்பாக மிக ஆழமாகவும் அகலமாகவும் கருத்தாடுகிறார் பேராசிரியர்.
நுஃமான அவர்களது ஆய்வுநூலின் அத்தியாயங்களில் உள்ளடங்கும் கருத்தாடல்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதனை சுட்டும் பகுதிகள் முக்கியமானவை. இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களின் இன மைய தேசியவாதத்தில் நலிந்த பிரிவினராக மாறிய, இலங்கை முழுவதும் மிகச்சிறியளவில் பரவியிருந்த சிறுபான்மையினரான முஸ்லிம்கள் தங்களுக்கான மொழி அடையாளத்தை நிராகரித்து, தமிழர்களிலிருந்து தங்களை வேறுபடுத்த மத அடையாளத்தை அடிப்படையாகக்கொண்ட வலுவான இனத்துவ அடையாளத்தை விருத்திசெய்தனர் என்றும் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில்தான் சிங்கள, தமிழ் இனமைய – தேசியவாதத்திற்கான எதிர்நிலையாக ‘அரசியல் – பண்பாட்டுக் கருத்து நிலையாக’ (politico- cultural ideology) முஸ்லிம் அடையாளம் கட்டமைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த வாதம் இலங்கையில் சுதந்திரத்தின் பின்னான முஸ்லிம் இனஅடையாள உருவாக்கத்தில் கவனிக்கப்பட வேண்டிய கருத்தாகும். இந்தக் கருத்தை மையப்படுத்தியதாகவே இந்த நூலின் அத்தியாயங்களில் உள்ளடங்கும் கருத்தாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டிலுள்ள முஸ்லிம்களின் இன அடையாளத்துக்கும் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம்களின் அடையாளத்துக்குமான வேறுபாடுகள் பற்றிய ஒரு கருத்தாடலை முதலாவது அத்தியாயத்தின் இறுதிப்பகுதியில் முன்மொழிந்துள்ளார். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை முஸ்லிம்கள் இனவரைவியல் ரீதியில் தமிழர்களே என்று முன்வைத்த வாதத்தை மறுதலித்து, தங்களது இனத்துவ அடையாளத்துக்கு மதத்தை முன்னிறுத்தி வாதிட்டமை தொடர்பில் விளக்கியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தம்மை இஸ்லாமியத் தமிழர்கள் என்றே குறிப்பிட்டிருந்தனர் என்றும் அவர்கள் மதத்தையும் மொழியையும் சேர்த்தே தம்மை அடையாளப்படுத்து கிறார்கள் என்றும் விளக்கமளிக்கிறார். ஆனால், “இலங்கை நிலவரத்தில் முஸ்லிம்கள் சமயம், இனம் இரண்டும் சேர்ந்த ஒரு வகைப்பாடே” (நுஃமான், 2007:14) என்று அந்த அத்தியாயத்தை நிலைவுறுத்து வதாக இரா குறிப்பிடுகிறார். இராவின் ஆய்வு நுட்பம் வெளிக்கொணர்கின்ற கருத்தியல்களை சில கேள்விகளாகவும் அதற்கான விடைகளாகவும் இங்கு பதிகை செய்கின்றேன்.
இனத்துவ முரண்பாடுகளோடு கூடியவகையில் கட்டமைக்கப்பட்ட இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களுக்கான அடையாள உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்து வந்துள்ளது?
இவ்வினாவைச் சுற்றியே தர்க்கம் கட்டமைக்கப்படுவதாக இரா சுட்டிக்காட்டுகிறார். அந்தத் தர்க்கத்தின் முதலாவது அம்சம் முஸ்லிம்களின் மரபார்ந்த உபகுழுக்கள் பற்றியதாக அமைகிறது. இலங்கைச் சோனகர், கரையோர இந்திய சோனகர், மலே முஸ்லிம்கள், போராக்கள், மேமன்கள் ஆகிய உபகுழுக்களின் உருவாக்கம், சமூக முக்கியத்துவம், தொழில்கள், பொருளாதார நடவடிக்கைகள், கல்விப் பினபுலம், குடியேற்றங்கள், சமயம், பண்பாடு, கல்விக்கான மொழி, அரசியல் பிரதிநிதித்துவம் முதலான பல்வேறு விடயங்கள் தகவல்களாக விளக்கப்படுகின்றன. அதேநேரம், இந்த உபகுழுக்களிடையிலான வேறுபாடுகள் எவ்வாறு இலங்கைச் சமூகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டன என்பதையும், அந்த வேறுபாடுகள் முஸ்லிம்களின் பொது அடையாளமாகக் கட்டமைக்கப்படுவதில் எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்கள் என்பவற்றையும் உய்த்தறியமுடிகிறது.
நுஃமான’ இந்நூலில் எத்தகைய விடயங்களை ஆழமாக பகுப்பாய்வு செய்கின்றார்?
இந்த பகுப்பாய்வு புலத்தை இரா பின்வருமாறு விளக்குகின்றார். “இலங்கையில் முஸ்லிம்களிடையே உள்ள உபகுழுக்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து அந்தக் குழுக்கள்பற்றி அடிப்படையானதொரு தெளிவை ஏற்படுத்துகின்ற அதேவேளை, சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளுக்கும் முஸ்லிம் அடையாள உருவாக்கத்துக்குமான தொடர்புகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார். குறிப்பாக முஸ்லிம்களின் 'அடையாள குறிசுட்டல்' (label of identity) என்பது சோனகர், முகமதியர் என்ற அடையாளங்களிலிருந்து முஸ்லிம்கள் என்று மாறியமை பற்றி குறிப்பிடும் கருத்துகளும் அவற்றுக்கு ஏதுவான வரலாற்று நிகழ்வுகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன. ரீ.பி. ஜயா, ராஸிக் ஃபரீட் ஆகியோர் முறையே 'ஓல் சிலோன் முஸ்லிம் லீக்', 'ஓல் சிலோன் மூவர் அசோசியேசன்' என்பவற்றின் பின்புலத்தில் வேறுபட்ட அடையாளங்களைப் பரிந்துரைப்பவர்களாகத் தொழிற்பட்டமையும் அவர்களது அரசியல் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக்காட்டப்படுவதைக் குறிப்பிடலாம். ரீ.பீ. ஜயாவுக்கு எதிராக ஏ.ஈ. குணசிங்கவுக்கு 'மூவர் அசோசியேசன்' ஆதரவு வழங்கியமை தொடர்பிலும் குறிப்பிடுகிறார். முஸ்லிம் உயர்குழாமினர் மத்தியில் இந்த விவாதம் மிக நீண்டகாலம் தொடர்ந்திருந்தது. மரதானை பள்ளிவாசலிலான வழிபாட்டுக்கான உரிமை பற்றிய விவாதமும் இலங்கைச் சோனகர் என்ற சொற்பிரயோகத்தின் நீக்கமும் அது தொடர்பான அப்துல் காதரின் விவாதமும் விளக்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களில் கிழக்கு மாகாண அங்கத்தவர் தம்பிமுத்து, பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோரின் உத்தியோகரீதியற்ற பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஸிக் ஃபரீட் முன்நிறுத்திய சோனக அடையாளத்தை எதிர்த்து ஏ.எம்.ஏ. அஸீஸ் முன்வைத்த விவாதங்கள் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலிருந்து முனைப்பாக நடைபெற்றுவந்த இந்த விவாதங்கள் இலங்கையின் முஸ்லிம் அடையாள உருவாக்கம் பற்றிய முதன்மையான கருத்துநிலை வளர்ச்சிக்கான அடிப்படைகளைத் தந்திருந்தன என்பது தெளிவாக உணர்த்தப்படுகின்றது. உண்மையில் முஸ்லிம் உபகுழுக்களின் சமூக அந்தஸ்து, தொழில்சார்ந்த செல்வாக்கு, கல்வி, அரசியல் பின்புலம் போன்ற சமூகக் காரணிகள் இந்த அடையாளம் பற்றிய விவாதங்களுக்கு அடிப்படையாக அமைந்திருந்ததை உய்த்துணரலாம்.
இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு இனத்தின் அடையாளத்தின் பின்புலத்திலும் மையநிலைச் சமூகக் குழுக்களின் செல்வாக்கு இருந்தே வந்துள்ளது என்பதுடன் அதற்கு எதிரான கருத்துருவாக்கம் மிகுந்த சவாலுக்கு உட்பட்டிருந்ததனையும் காண முடியும். அது வர்க்கநிலைப்பட்ட, சாதிநிலைப்பட்ட நலன்களோடு பிணைந்திருந்தமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகவே இருந்துவந்துள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் அது வர்க்கநிலைப்பட்டதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது அடையாள உருவாக்கத்துக்கும் வர்க்கத்துக்குமான நேரடி தொடர்பினைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வர்க்கநிலைப்பட்ட முன்னெடுப்புகள் வணிகநோக்கு மையமானதாக இனங்களுக்கிடையே பொதுமைப்பாடான இயல்புகளைக் கொண்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது. இத்தகைய ஆழமான புரிதல்களை ஏற்படுத்துவதாகப் பேராசிரியரின் விளக்கங்கள் அமைந்துள்ளன”.
முஸ்லிம்களின் தாய்மொழி பற்றிய நுஃமானின் அணுகல் எவ்வாறு அமைந்துள்ளது?
இது பற்றிய இராவின் ஆய்வணுகல் இவ்வாறு அமைந்துள்ளது: “இலங்கை முஸ்லிம்களின் மொழி அடையாளம் குறித்த விவாதம் மிகநீண்டது. அவர்களின் தாய்மொழி பற்றிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ச்சியான பிரதிவாதங்களைச் சந்தித்து வந்தவை. தாய்மொழி பாகிய விவாதத்தை நுஃமான் அவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்த்துவரும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் தாய்மொழி பற்றிய விவாதங்களோடு எழுப்புகிறார். இந்தச் சமூக மொழியியல் குழப்பநிலை'(socio-linguistic complication தாய்மொழி சொந்த மொழி மற்றும் முதல்மொழி பற்றிய புதிய தேடல்களை வேண்டிநிற்கும். அந்தவகையில், இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் தாய்மொழி பற்றிய விவாதம் தனித்துவமானது. சித்தி லெப்பை, பதியுதீன் மஹ்மட், ஏ.எம்.ஏ. அஸீஸ் . போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட தாய்மொழி பற்றிய கருத்தாடல்கள் முக்கியமானவை. முஸ்லிம்கள் அரபி மொழியைத் தங்கள் வீட்டு மொழியாகக் கொள்ளவேண்டும்.' இலங்கையில் வாழும் போத்துக்கேயர்களும் ஒல்லாந்தரும் தங்கள் தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். முஸ்லிம்கள் தமிழை - மறந்து அரபியைத் தங்கள் தாய்மொழியாக ஏன் கொள்ளக் கூடாது என்று சித்தி லெப்பை கேள்வி முஸ்லிம் நேசன் பத்திரிகையில் எழுப்பியதைக் - குறிப்பிடுகிறார். 1938இலிருந்து தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தைக் கற்று அதனைத் தங்கள் தாய்மொழியாக ஏற்றுள்ளனர் என்று பதியுதீன் மஹ்மட் வாதிடுவதைக் குறிப்பிடுகின்றார். 1941இல் இலங்கை முஸ்லிமும் தாய்மொழியும் பற்றி ஏ.எம்.ஏ. அஸீஸ் எழுதிய கட்டுரையில் இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழே என்று விவாதித்ததாகக் குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து இலங்கை முஸ்லிம்கள் தங்கள் மொழி அடையாளத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்பதில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்துவந்ததை அறியலாம். "இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகைப் பரம்பல், அவர்களின் வர்க்க பிரிவுகள் என்பவற்றுக்கு அமைவாக இடத்துக்கிடம் சமூகமொழியியல் நிலவரம் வேறுபடுகிறது. சிங்களம் பேசுகின்ற தெற்குப் பிரதேசங்களில் சிதறலாகப் பரம்பியிருக்கும் முஸ்லிம்கள் தமிழ் சிங்களம் இரட்டைமொழிகளையும் சமமான சரளத்தன்மையுடன் பெரும்பாலானவர்கள் பேசுகிறார்கள். குறிப்பாக மூத்த சந்ததியினர் மாற்றமின்றி தமிழையே தங்கள் வீட்டுமொழியாகவும் குழுத்தொடர்பாடல் மொழியாகவும் பேசுகிறார்கள். மிகக்குறைந்தளவு உயர்வர்க்கத்தினரும் வளர்ந்துவரும் ஒரு தொகுதி இளம்சந்ததியினரும் சிங்களத்தைத் தமது வீட்டு மொழியாகப் பயன்படுத்துகின்றனர்” (நுஃமான்,2007:55-56) என்று குறிப்பிடும் கருத்து வாழ்விட வெளிக்கும் பயன்பாட்டு மொழிக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவைக்கும் கருத்தாகும். ஓர் இனக்குழுமத்தின் தாய்மொழி, வீட்டுமொழி, முதல்மொழி, தொடர்பாடல்மொழி பற்றிய விவாதம் ஒரு பன்மைத்துவ பண்பாட்டுச் சூழமைவில் எவ்வாறான கனதிமிக்க விவாதமாக மாறி அதுவே அரசியலுமாக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள இந்த விளக்கங்கள் ஏதுவாகின்றன.”
முஸ்லிம்களின் கல்விக்கான மொழி பற்றிய நுஃமானின் கருத்தாடல் எவ்வாறு அமைந்துள்ளது?
“முஸ்லிம்களின் கல்விக்கான மொழிமூலம் தொடர்பாகக் கேள்வியும் அந்த மொழிமூலத்தை சிங்கள மொழிக்குத் திறந்து விடுவதும் பற்றிய கருத்தாடல் செய்யப்படுகின்றது. ஆதார பூர்வமான பல புள்ளி விவரத் தரவுகளோடு முஸ்லிம்கள் தங்கள் கல்விக்கான மொழிமூலத்தை சிங்களமாக மாற்றிக்கொள் வதில் நாட்டமுடையவர்களாக உள்ளனர் என்பது எடுத்துக் காட்டப்படுகின்றது. மாவட்டம், மாகாணம் பாடசாலை மட்டங்களில் ஆரம்ப வகுப்புகள், இடைநிலை வகுப்புகள், உயர்தர வகுப்புக்களில் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிமூலம் கல்விகற்பதில் கொண்ட விருப்பார்வம் பற்றி பொருத்தமான புள்ளிவிவரங்களோடு குறிப்பிடுகிறார். சிங்கள. தமிழ் தேசியவாத எழுச்சியின் பின்னான காலத்தில் முஸ்லிம்கள் தங்கள் மொழிபற்றி குழப்பநிலையில் இருந்ததால் இத்தகைய நிலைப்பாட்டுக்குச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்ட விளைகிறார். குறிப்பாக, "சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள, தமிழ் தேசியவாதம் மொழிபற்றிய காதல், பேரார்வத்தை அவர்களிடையே பண்படுத்தியது, அதேநேரம் முஸ்லிம்கள் தங்கள் 'மொழிபற்றிய குழப்பத்திலிருந்தனர். முஸ்லிம்களின் வரலாறு வேறுபட்டது. இரண்டாவது சிறுபான்மை என்ற வகையில் அவர்கள் தங்கள் தப்பிப்பிழைத்தலுக்காகத் தமிழர்கள், சிங்களவர்களோடு போட்டிபோட வேண்டியிருந்தது. அவர்களின் அரசியல் இயக்கத்துக்கு மொழியின் மீதான காதலும் பேரார்வமும் அடிப்படையாதொன்றல்ல. தமிழ் அவர்களின் தாய்மொழியாக அமைந்தபோதிலும் அவர்களின் மொழியடையாளத்தை நிராகரித்துத் தங்கள் மதத்தை அடிப்படையாயக்கொண்ட இன அடையாளம் ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்டனர்” (நுஃமான், 2007:61) என்று குறிப்பிடுகிறார். அத்துடன், முஸ்லிம் சமூகத்தின் மொழிபற்றிய உளப்பாங்கு, மொழியைப் பேணுதல் என்பவை அவர்களில் சமூக அரசியல் தேவைகளால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்று முடிவும் சொல்கிறார். இது தங்கள் சமூக, அரசியல், பொருளாதார தேவைகளுக்காக முஸ்லிம்கள் தனிவழியமைக்கும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்ட சமூகமாக மாறிவிட்டது. எனும் பொருளைப் பொதிந்துள்ளது”.
ஒரு மொழியியல் பாண்டித்தியம் மிக்க பேராசிரியர் என்ற வகையில் மொழிப்பிரயோக வேறுபாடுகளை எவ்வாறு ஆராய்ந்துள்ளார்?
“இலங்கையில் வாழும் முஸ்லிம்களிடையே தமிழைப் பேசுவதிலும் எழுதுவதிலும் முரண்பாடுகளும் குழப்பங்களும் உள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு மொழியியல் பாண்டித்தியம் மிக்க பேராசிரியர் என்றவகையில் பிராந்திய வேறுபாடுகளுக்கேற்ப மொழிப் பிரயோகத்தில் நிலவிவருகின்ற வேறுபாடுகள் தொடர்பாக மிகநுட்பமான ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார். இலங்கைத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம் தமிழர்கள் மொழிப் பிரயோகத்தில் எவ்வாறான வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர் என்பதை விளக்குகிறார். அத்துடன், தென்பகுதி முஸ்லிம்கள், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலான மொழிப் பிரயோக வேறுபாடுகளை நுணுக்காமாக எடுத்துக்காட்டுகிறார். வாழ்விட பரம்பலின் பிராந்திய வேறுபாடுகள் முஸ்லிம்களின் மொழிசார்ந்த ஒருமுகத்தன்மைக்குச் சவாலான சூழலை உருவாக்குகின்றது எனும் வாதமொன்று உட்கிடையாக உள்ளது. அத்தகைய வேறுபாடு தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியிலும்கூ உள்ளவைதான் அத்துடன், தமிழர்கள் சிங்களவர்களின் மொழி ஆதிக்கம் முஸ்லிம்களின் மொழிப் பிரயோகத்தைத் தீர்மானிக்கும் காரணியாகின்றது என்ற கருத்தும் உள்ளமைந்துள்ளது. இந்த நிலையில்தான் பேராசிரியர் 'அரபுத்தமிழ்' எனும் கருத்தாக்கத்தின் வரவு குறித்துப் பேச விளைகிறார். இது முஸ்லிம்களை மொழியால் ஓரினமாக்கும் ஒரு விவாதமாக எழுந்திருந்தது. அத்துடன், முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்தையும் இணைக்கும் மொழியாக அது அமைந்துவிடுகின்றது. இந்த இடத்தில் சிங்கள பௌத்தம், சைவத் தமிழ் என்ற கருத்தாக்கங்களோடு இணைவைத்து அரபுத்தமிழ் பற்றி பார்க்க வேண்டியுள்ளது. அரபுத்தமிழ் குறித்து இந்த - நூலில் பத்துப் பக்கங்களில் விளக்கமளிக்கிறார்”.
முஸ்லிம் அடையாளத்தின் அரசியல் தொடர்பான நுஃமானின் பரிசீலனை எத்தகையது?
முஸ்லிம் அடையாளத்தின் அரசியல் தொடர்பான வரலாற்று மூலங்கள் குறித்து ஆழமானதும் ஆதாரங்களை அடிப்படையாகவும் கொண்ட பரிசீலனையைச் செய்கிறார். இது விரிவானதும் முக்கியமானதுமான ஓர் அத்தியாயம். இங்கும் சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என்பவற்றின் செல்வாக்கினால் முஸ்லிம் அடையாளம் எவ்வாறு இலங்கையில் அரசியல்ரீதியாக எதிர்கொள்ளப்பட்டது. என்பதற்கான விளக்கங்கள் உள்ளன. முஸ்லிம்களின் அடையாளமும் சிங்கள பௌத்த தேசியவாதமும் குறித்து பன்னிரண்டு பக்கங்களில் (135-146) தனித்தும் விளக்குவதுடன், வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியவாதமும் முஸ்லிம் அடையாளம் குறித்து ஆறு பக்கங்களில் (150-155) தனித்தும் எழுதுகிறார். சுதந்திரத்துக்கும் பின்னான காலத்தில் முஸ்லிம்களின் அடையாளம் நிலைபெறுவதற்கான இரண்டாவது கட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதை விளக்குகிறார். அந்தக் காலத்தில் குறிப்பாக முஸ்லிம் அடையாளத்தின் நிறுவனமயப்படுத்தல் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான பின்புலத்தைத் தெளிவுபடுத்துகிறார். கே.எம்.டி. சில்வா, குமாரி ஜெயவர்த்தன, லியோனாட் வூல்ஃப், விமலரட்ண போன்றவர்களின் எழுத்துகளை ஆதாரமாகக் கொண்டு அதனை நிலைநாட்டுகிறார். எவ்வாறு அநாகரிக தர்மபால காலம் முதல்கொண்டு சிங்கள தேசியவாத சிந்தனையின் தாக்கத்துக்கு முஸ்லிம்கள் உட்பட்டார்களோ அவ்வாறு தமிழர்கள் தரப்பில் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் செயற்பாடுகள் முஸ்லிம்களின் அடையாளத்தை மறுப்பதாக அமைந்தது என்ற கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். இதற்கான பல்வேறு ஆதாரங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து விளக்கமளிக்கிறார்.
தமிழ்த் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் முஸ்லிம்கள் தொடர்பில் கொண்டிருந்த வெறுப்பினை எவ்வாறு விமர்சிக்கின்றார்?
தமிழ்த் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் முஸ்லிம்கள் தொடர்பில் இயல்பான வெறுப்புக் (antipathy) கொண்டிருந்தார் எனவும், முஸ்லிம்கள் மீதான வன்முறையை அடக்கி சிங்களத் தலைவர்களைக் கைதுசெய்தமை தொடர்பில் பௌத்த தேசியவாதிகளுடன் இணைந்து அரசாங்கத்தை விமர்சித்திருந்தார் எனவும், அந்தக் கலவரத்துக்கான பொறுப்பாளிகளாகக் கரையோரச் முஸ்லிம்களே இருந்தனர் என்று பழிசொல்ல முயன்றார் எனவும் குறிப்பிடுகிறார். கலவரம் நிகழ்ந்தபோது இந்தியாவில் நின்ற இராமநாதன் உடனடியாகத் திரும்பிவந்து சட்டவாக்க கழகத்தில் நீண்ட உரையொன்றை ஆற்றி கலவரத்துக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்ததுடன் சிங்கள தேசியவாதிகளுடன் சேர்ந்து சுலவரம் தொடர்பாக விசாரணை செய்ய ஒரு றோயல் ஆணைக்குழுவை நிறுவியதை மேலும் குறிப்பிடுகிறார். 1916இல் இலண்டனில் வெளியிடப்பட்ட 'Riots and Martial Law in Ceylon 1915" என்ற தனது நூலில் கலவரத்தில் சிங்களவர்களைப் பலிக்கடாவாக்கியது அரசாங்கத்தின் செயல் என்று விமர்சனம் செய்து, பாதிக்கப்பட்ட தரப்பினரான முஸ்லிம்களுக்குக் குறைந்தளவு முக்கியத்துவத்தையே வழங்கியிருந்தார் என்றும் குறிப்பிடுகிறார். இதனை ஆதாரப்படுத்த அந்த நூலின் முதல் வாக்கியத்தையும் எடுத்துக்காட்டுகிறார். "இராமநாதனின் கருத்தின்படி, சிங்களவார்களால் 'ஹம்பயாஸ்' (வள்ளத்தில் வந்தவர்கள்) என்று அறியப்பட்ட முகமதியர்கள் என்ற சிறுகுழுவினரின் சகிப்பின்மையும் ஆக்கிரோசமுமே அதற்குக் காரணம் என்பதுடன் அண்மைய கலவரத்துக்கு முதற்காரணமாக கம்பளை, கண்டி மசூதிகளின் முன்னால் செல்லும்போது சிங்கள பௌத்தர்கள் அமைதியாகச் செல்ல வேண்டும் என்ற வற்புறுத்தலே" (நுஃமான், 2017:146) என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆதாரம் காட்டுகிறார். எவ்வளவுக்குச் சிங்களத் தேசியவாதிகள் மீதானவிமர்சனம் முன்வைக்கப்படுகின்றதோ அதற்கு மேலாகத் தமிழ்த் தேசியவாதியாக இராமநாதனின் மீதான விமர்சனமும் வலியுறுத்திக் கருத்தாடப்படுவதைக் காணலாம். இராமநாதனை முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைத்தவர் என்றே இந்த நூலில் வரும் வாதங்கள் நிலைநிறுத்துகின்றன. இது தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை வெறுப்புக்குரிய ஒன்றாகவே அமையும் என்பதும் கவனிக்கத்தக்கது.
முஸ்லிம்களின் கல்வி தொர்பான பிரச்சினைகளை எவ்வாறு அணுகியுள்ளார்?
முஸ்லிம்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளை 'இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஆங்கிலக் கல்வியும்' எனும் தலைப்பில் முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் அம்சங்களின் பின்புலத்தோடு சமூகவியல் நோக்கில் விளக்குவது தனித்துவமான ஓர் அம்சமாக அமைந்துள்ளது. நாடளாவியரீதியில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட கல்வி தொடர்பான பிரச்சினைகள், அவற்றைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்த நடவடிக்கைகளில் சித்திலெப்பை அவர்களின் பங்களிப்புகள், முஸ்லிம்களுக்கான ஆங்கிலவழிக் கல்விக்கான முன்னெடுப்புகள், முஸ்லிம் பெண்களுக்கான கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட பாடசாலைகள், - கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் சமூக வாழ்வுக்கும் கல்விக்குமான இடைவெளி குறித்த தெளிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. உண்மையில் முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் அடையாளம் தொடர்பிலான விழிப்புநிலையின் பின்னணியில் கல்வி தொடர்பிலான முன்னெடுப்பிலும் சமூக நிறுவனமயமாக்கலிலும் பெரும்பங்கு வகித்திருந்ததையும் புரிந்துகொள்வதற்கு அந்த விளக்கங்கள் உதவுகின்றன. குறிப்பாக 1891இல் சித்தி லெப்பை அவர்களின் முயற்சியினால் முஸ்லிம் பெண்களுக்காகப் பாடசாலைகள் நிறுவப்பட்டிருந்தமை இலங்கையை உலகளாவிய நிலையில் முஸ்லிம் பெண்கல்வி தொடர்பான முன்னெடுப்புகளில் முக்கியம் வாய்ந்ததாகவே காட்டுகின்றது.
முஸ்லிம்களின் அடையாள நிறுவனமயமாக்கம் பற்றி எப்படி விளக்குகின்றார்?
முஸ்லிம்களின் அடையாள நிறுவனமயமாக்கம் பற்றி விரிவாக விளக்கும்போது, அதற்குப் பின்புலமான காரணிகளைத் தனியாக விளக்குகிறார். எனினும், இந்த ஆய்வின் மைய இலக்கே முஸ்லிம்களின் அடையாளம் நிறுவனமயமாக்கலுக்கான முயற்சிகளும் அவற்றில் செல்வாக்குச் செலுத்திய காரணங்களுமாகவே அமைகிறது. இனரீதியான பிரதிநிதித்துவம், பாராளுமன்ற தேர்தல் அரசியலும் அதனை மையப்படுத்திய முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகளும், கல்வி குறித்த விழிப்புணர்வும் அதற்கான முன்னெடுப்புகளும், தமிழ் ஆசிரியர்களுக்குப் பதிலாக முஸ்லிம் ஆசிரியர்களின் நியமனங்கள், ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளின் உருவாக்கம், தேசிய கல்வி-யியல் கல்லூரிகளின் உருவாக்கம், முஸ்லிம்களின் வாழ்விடப் பிரதேசங்களிலான பல்கலைக்கழகங்களின் உருவாக்கம், முஸ்லிம்களுக்கான தனித்துவமான சட்ட சீர்திருத்தங்களுக்கான முறைமைகளின் உருவாக்கம், மசூதிகள் மற்றும் நிதியங்கள் தொடர்பான முஸ்லிம் உயர்குழாமினரின் செல்வாக்குத் தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள், அரச ஊடகங்களில் முஸ்லிம் பிரிவுகள் உருவாக்கப்பட்டமை முதலான பல்வேறு காரணிகள் குறித்து விளக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் அடையாளம் தொடர்பான உரையாடலில் எப்போதுமே பெரும் விமர்சனத்துக்குள்ளாகும் இரண்டு விடயங்கள் குறித்து நூலின் இறுதிப்பகுதி பேசுகின்றது. ஒன்று, சமய விழிப்புணர்வும் இஸ்லாமியமயமாக்கமும். இன்னொன்று இன அடையாளமும் முஸ்லிம் பெண்களும் பற்றியது. இவை இரண்டும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களது 'சமய அடிப்படைவாதத்துடன்' இணைத்தே பார்க்கப்படுகின்ற விடயங்களாகின்றன. இது குறித்து பேராசிரியர் முன் வைக்கும் கருத்துகள் ஈண்டு கவனிக்கத்தக்கவை. இந்த இரு அடையாளங்களையும் முன்னிறுத்திப் பேசாது முஸ்லிம்களின் அடையாளம் குறித்து உலகின் எந்தவொரு முஸ்லிம் சமூகம் பற்றியும் உரையாட முடியாது. அந்தளவுக்கு உணர்திறன்வாய்ந்த விடயமாக இவை அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.
அடிப்படைவாதம் என்ற கருத்தியல் எவ்வாறு அணுகப்பட்டுள்ளது?
அகமட் அக்பர் என்பாரின் கூற்றை மேற்கோள்காட்டி அடிப்டைவாதம் எனும் சொல் சமகால மேலைத்தேய அரசியல் கருத்தாடல்களில் ஒரு சிறுமைப்படுத்துவதும் குற்றஞ் சுமத்துவதுமான அர்த்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. பிரதானமாக ஏனெனில், மத்திய கிழக்கின் மீதான மேலைத்தேய ஆதிக்கத்துக்கான அரசியலுக்குக் காட்டப்படும் வன்முறையான அரசியல்ரீதியான எதிர்ப்பாகவும் இருப்பதால்தான். அதனால் சில முஸ்லிம் புலமையாளர்கள் அடிப்படைவாதம் எனும் அந்தப் பாரபட்சமான சொல்லின் பிரயோகத்தை நிராகரிக்கின்றனர்” (நுஃமான், 2007:161) என்று இது தொடர்பாகக் கருத்தாடத் தொடங்குகிறார். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைமிக்க ஒரு புலமையாளர் என்ற வகையிலும், மார்க்சிய சித்தாந்த கருத்தியல் கொண்டவர் என்ற வகையிலும் இதுகுறித்து ஆழமாகவும் வெளிப்படையாகவும் விவாதிக்க வேண்டிய பொறுப்புடையவர் பேராசிரியர் நுஃமான். அதனால்தான் நவீன தொழில்நுட்பங்கள், கைத்தொழில் தயாரிப்புகள், மருத்துவ தொழில்நுட்பங்கள், ஆயுதங்கள் என்பவற்றை இஸ்லாமிய உலகத்துக்கு முற்றாகப் புதியவை என்று குறிப்பிடும்போது "மிக பழைமைவாதிகளான தலிபான், அல்கெய்தா மேலைநாடுகள் தயாரிக்கும் அதிநவீன ஆயுதங்களை மேலைநாடுகளுக்கு எதிராகவே பாவிக்கின்றனர்” (நுஃமான், 2007:162) என்று தனது நிலைப்பாட்டை சூசகமாக முன்வைக்கிறார். அத்துடன் தலிபான்களின் கல்விக்கான தடை, பெண்களின் வேலைவாய்ப்புக்கான தடை புறவுலக கரிசனையை நிராகரித்தல், 'சரியா' சட்டத்தின் தங்களால் விளக்கமளிக்கப்பட்ட பகுதிகளைப் பிரயோகித்தல் விடயங்களை விமர்சிக்கத் தவற வில்லை.
இஸ்லாமிய நவீனமயமாக்கம் பற்றி என்ன எழுதியுள்ளார்?
இஸ்லாமிய நவீனமயமாக்கச் செயன்முறையாகச் சீர்திருத்தம் (Revivalism as a Process of Islamic Modernization) பற்றி எழுதுகிறார். இதனுள் இலங்கை முஸ்லிம்களிடையே நவீனத்துவத்துக்கான ஏற்புடமைக்கான முற்போக்கான சிந்தனைகள் இருந்ததற்கான ஆதாரங்களை முன்வைத்து விளக்கம் தருகிறார். இலங்கை இஸ்லாமியர்கள் தங்கள் சமய அறநெறிகள், ஒழுக்கங்களைப் பேணியவாறே இஸ்லாமிய பண்பாட்டையும் மேலைப் பண்பாட்டையும் கலக்க வேண்டிய அளவில் கலந்ததாகக் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில் இஸ்லாமிய பண்பாட்டைப் பேணும் வகையில் எழுச்சிபெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளையும் இஸ்லாமிய மத, பண்பாட்டு நிலைபேற்றில் அவற்றின் முதன்மை குறித்தும் நிறைந்த தகவல்களைத் தொகுத்தளிக்கிறார். அந்தத் தகவல்களில் முடிவாக முஸ்லிம் சமூகத்தில் பண்பாட்டுத் தூய்மையாக்கம் தொடர்பில் விளக்கம் தருகிறார். அரபு மொழியாக்க முயற்சிகள், அரபு பெயர்மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தபோதிலும் மரபுகளிலும் நாட்டார் கலை வடிவங்களின் பயில்வுகளிலும் ஏற்பட்டுவந்த நலிவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.
முஸ்லிம் பெண்கள் பற்றிய கருத்துக்கள் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன?
இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து, பலதார மணமும் பெண்களும், இஸ்லாமிய பெண்கள் மீதான பால்நிலைப் பாரபட்சம், ஹிஜாப் தரித்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்களும் நியாயப்பாடுகளும் விளக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பிலான முன்னேற்றங்கள் பற்றியும் புள்ளிவிவரங்களோடு விளக்கம் தரப்படுகின்றது. பெண்கள் கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு, பதவிநிலைகள் என்பவற்றில் முன்னேற்றமான நிலைக்குச் சென்றமைக்கான எடுத்துக்காட்டுக்கள் குறிப்பிடப்படுகின்றன. எதுவாயினும் முடிவாக, ஆண்மேலாதிக்க முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் அரசியலில் பங்கேற்றலுக்கு ஊக்கமளிக்கப்படுவதில்லை என்ற கருத்துடன் நிறைவுறுகின்றது. இஸ்லாமியப் பெண்கள் பற்றியும் அவர்களது உரிமைகள் பற்றியதுமான விவாதம்கூடச் சமயம், பண்பாட்டுப் பிரச்சினை தொடர்பான ஒரு விவாதமாகவே மாறிவிடுகின்றமை தவிர்க்கவியலாதது என்பது பேராசிரியரின் விளக்கங்களில் உள்ளமைந்திருக்கிறது.
நுஃமானின் பாரிய புலமைத்துவ செயற்பாடான இந்த ஆய்வுப் பிரதிபற்றிய இந்த அதிநுட்பமான விமர்சனப் பகுப்பாய்வை இரா எவ்வாறு நிறைவுசெய்கின்றார்?
பொதுவாகவே ஓர் அகநிலையாளரின் பார்வையில் குறித்த சமூகம் பற்றிய சார்புநிலை இருப்பதற்கான புறநிலையாளனின் பார்வையாக வெளிப்படுமாயின் சார்புநிலையுடையது எனும் கருத்து எழுவதில்லை. ஆனால் நுஃமான் அவர்கள் தன்னை ஒரு புறநிலையில் வைத்துக்கொண்டே குறித்த விடயத்தை மிக நிதானமாகக் கருத்தாடுகிறார். பல இடங்களில் முஸ்லிம் சமூகத்தின் போக்குகள் பற்றிய விமர்சனங்களும் வருகின்றன. அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின்மீது சிங்கள். தமிழ்த் தேசியவாதத்தின் அழுத்தம் பற்றிய கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான ஒரு வெட்டுமுகத்தையும், அவர்களுக்கான அடையாள உருவாக்கத்தின் பின்புலங்களையும் விளக்கும் ஓர் ஆய்வு எனும் வகையில் இலங்கைச் சமூகத்தை வியங்கிக்கொள்வதற்கான ஒரு பரிமாணத்தை இந்த நூல் கருத்துநிலைத் தெளிவுடன் விளக்குகின்றது எனலாம். இதனால் இலங்கைச் சமூகத்தைக் கற்றுக் கொள்ளும் ஒருவருக்குத் தவிர்க்கவியலாத ஒரு வரலாற்றுச் சமூகவியல் ஆவணமாக (historical sociological) இந்த ஆய்வு நூல் அமைந்துவிடுகின்றது.
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களது 'Sri Lankan Muslims: Ethnic Identity within Cultural Diversity' என்ற ஆய்வுப் பிரதியின் மைய இழைகளை இ.இராஜேஸ்கண்ணன் சமூகவியல் பிரக்ஞை வெளியில் நின்று மிக நேர்த்தியாக பகுப்பாய்வு செய்துள்ளார் என்பது வெள்ளிடைமலை! எனவேதான் ‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளிக்கொணர்ந்துள்ள பதினொரு ஆக்கங்களில் இராவின் பிரதி முதல் வாசிப்புக்கும் ஆய்வுத் தேடலுக்கும் உரியதாய் பரிணமித்துநிற்கிறது.
அடுத்து இச்சிறப்பிதழில் வெளிவந்துள்ள முக்கிய ஆய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஈஸ்வரநாதபிள்ளை குமரன் எழுதியுள்ள ‘பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்ப்புகள்’ என்ற கட்டுரையாகும். பலஸ்தீனக் கவிதை மொழிபெயர்ப்புகள், மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள், காற்றில் மிதக்கும் சொற்கள். இரவின் குரல், மொழிபெயர்ப்புத் தேர்வு, மொழிபெயர்ப்புக் கோட்பாடு என்ற உபதலைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுரையில் அவர் முன்வைத்துள்ள சில கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. “எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்ப்புப் பற்றிய அனுபவத் தெளிவுடன் மூலப்பிரதிகளை அணுகியுள்ளமை, அதேபோலவே மொழிபெயர்ப்பிற்குத் தேர்வு செய்யும் இலக்கியம் தொடர்பான தெளிவான பெயர்ப்புக்களை 'மானுடம் பயனுறச் செய்ய வேண்டும்' என்பதில் அவர் அக்கறை கொண்டவராக இருந்தார். இதனால்தான் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் அகன்ற மானுட விடுதலையை இலக்காகக் கொண்ட மொழிபெயர்ப்புகளாக அவையமைந்துள்ளன. பார்வையும் அவரிடமிருந்தது. தனது மொழி மேலும், பாரம்பரிய சிந்தனைகளில் இருந்து விடுபட்டுப் புதிதாகவும் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் உள்ளன. இம்மொழிபெயர்ப்புகளுக்கூடாக உலக இலக்கியத்தின் குறிப்பிட்ட சில பக்கங்களைத் தரிசிக்க முடிவதோடு, உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளையும் உலகத் தரமான கவிதைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்புகள் புதிய முயற்சிகளாகவும் முன்னுதாரணங்களாகவும் அமைந்துள்ளன. பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பாக முதலில் வெளிவந்த தொகுதி இவருடையதாகும். இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி ஏற்படுத்திய அதிர்வலைகளே பிற்காலத்தில் ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகள் பலஸ்தீனக் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கும் அவற்றை ஈழத்து உணர்வுகளுடன் பொருத்திப் பார்ப்பதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. அவரின் இந்தோனேசிய, மலாய மொழிக் கவிதைமொழிபெயர்ப்புகளும் கூட முன்னுதாரணமான முயற்சிகளாக அமைந்ததோடல்லாது தமிழ் வாசகர்களுக்குப் புதிய அனுபவ தரிசனத்தை ஏற்படுத்தித் தந்துள்ளன. வாசகர்களைச் சிரமப்படுத்தாத எளிமையான இந்த மொழிபெயர்ப்புகளைப்படிக்கின்றபோது சொந்தமொழிக் கவிதையொன்றினை - வாசித்த அனுபவத்தை வாசகர்கள் பெறுவார்கள். இலக்கு மொழியின் நெளிவு சுளிவுகளை அறிந்து படைப்பாக்க நுட்பத்துடன் இந்த மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. நுஃமான் கவிஞராக இருப்பதனால் கவிதை மொழிபெயர்ப்பின் சாத்தியங்களை அவரால் இலகுவாகத் தொட முடிந்துள்ளது. நுஃமானின் மொழிபெயர்ப்புகளை மூலத்துடன் ஒப்பிட்டுக் கருத்துரைக்கும் போதும் தமிழில் வெளியான பிற மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போதும் அவருடைய மொழிபெயர்ப்புகளின் கனதியும் காத்திரமும் மேலும் வெளிவரும். ஆதலால் எதிர்காலத்தில் நுஃமானின் மொழிபெயர்ப்புகள் தொடர்பாக நோக்கமுனைவோர் இது தொடர்பில் கவனம் செலுத்துதல் பயனுடையதாகும்”.
இச்சிறப்பிதழில் நுஃமான் அவர்களது மொழியியல், இலக்கணம் பற்றி எழுதப்பட்ட மூன்று கட்டுரைகள் காணப்படுகின்றன. நுஃமானின் அடிப்படை இலக்கணம் பற்றி பா.ரா.சுப்பிரமணியன் எழுதியிருக்கிறார். தொடர்பியல் நோக்கில் அடிப்படை தமிழ் இலக்கணம் பிரதியை அணுகியுள்ளார் தி.மோகன்ராஜ். நுஃமானின் இலக்கண நூல்களில் மொழியியல் அணுகுமுறை பற்றி சுபதினி ரமேஸ் ஆய்ந்தெளிதியுள்ளார். ‘துப்பாக்கிக்கு மூளை இல்லை’ என்ற கவிதை தொகுப்பை மையமாகக்கொண்டு, நுஃமான் அவர்களது கவிதைகள் பற்றி ந.மயூரரூபன் அலசியுள்ளார். ந.இரவீந்திரன் நுஃமான் அவர்களது மனிதநேய புலத்தை தொட்டுக்காட்டி ஒரு ஆக்கத்தினைத் தந்துள்ளார். ‘ஈழத்துத் தமிழறிஞர் எம்.ஏ.நுஃமான்: தனித்துவமிக்க பேராசிரியர்’ என்ற மகுடத்தில் க.பஞ்சாங்கம் எழுதியிருக்கிறார்.
“எத்துறை பற்றி எழுதினாலும் புறநிலைப் பார்வைக்குட்படுத்தி எழுதும் ஓர் ஆய்வாளர் எம்.ஏ. நுஃமான். அரபுமொழி ஆசிரியர் மக்புல் ஆலிம் அவர்களுக்கும் சுலைகா உம்மா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர். பிறப்புச் சூழலும் அவர் பெற்ற கல்வியும் இயல்பான அடக்கமான கல்வியாளனாக உருவாக்கின” என்ற வரிகளோடு தன் புலமைத்துவ சக பயணியின் ஆளுமைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறார் தகைசால் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ். இரண்டரை பக்கங்களில் மனநிறைவான பல ஆளுமை சங்கதிகளை சாசுவதப்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சங்கதி, “நுஃமானை நினைக்கும்போதெல்லாம் மறக்க முடியாததும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டியதுமாக அமையும் ஒரு விடயம் எனக்கு உடனடியாக முன்னுக்கு வரும். அது அவர் எங்கள் நாட்டுக் கவிஞர் மகாகவியினுடைய நூல்களைப் பதிப்பித்ததாகும். பேராசிரியர்களான கைலாசபதியும் சிவத்தம்பியும் மகாகவியைக் கவனிக்காமல் இருந்தபோதும் அந்தப் பெருங்கவிஞனின் நூல்களைப் பதிப்பித்து உதவியவர் 'சந்தன நுஃமானே’”. ‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ ஆக்கங்களுக்குள் நுழைய முன்பாகவே, இதழைப் பார்த்த பரவசத்தில் விக்னேஸ்வரன் எழுதிய குறிப்பொன்று இத்தருணத்தில் என்நினைவில் தோன்றிற்று: “நமது காலத்தின் மிக முக்கிய ஆளுமையாக மதிக்கப்படுபவரும், தனிப்பட்ட முறையிலும், ஒருவகையில் எனது எழுத்துக்கும், இலக்கியம் சார் வாசிப்புகளுக்கும், தன்னை அறியாமல் வழிகாட்டியவர் அவர். நேரடியாக அவருடைய ஒரு மாணவனாக நான் இருக்கவில்லை என்றாலும், என்மனதில் ஒரு ஆசிரியராக இடம்பிடித்துக் கொண்டவர் அவர். மல்லிகையில் வெளிவந்த (1976 என்று ஞாபகம்) “மஹாகவியின் வாழ்க்கை நோக்கு” என்ற கட்டுரையை, மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரை என்ற எண்ணத்தில் ஆர்வமுடடன் வாசித்தபோதுதான் நான் முதல் முதலாக மஹாகவி என்ற கவிஞரை அறிந்து கொள்கிறேன். நான் அதுவரைகாலமும் என்னுள் வளர்த்திருந்த எண்ணங்களை மிகத் தெளிவாக வலியுறுத்துவது போல அமைந்த அந்தக் கட்டுரை, எனது வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே நினைக்கிறேன். “இன்னவைதான் கவியெழுத ஏற்றபொருள் என்றுபிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்……..மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மைதனைப் பாடுங்கள்” என்ற மஹாகவியின் கவிதையின் வரிகளை வாசித்தபோது அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வும், தெளிவும் தான் என் வாழ்வின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானனித்தவை. அதன் பின்னரே அவர் எழுத்துக்களைத் தேடவும் அந்தத் தேடலின் விளைவாக கவிஞர் சேரனை அறிந்துகொள்ளவும் எனக்கு சந்தர்ப்பம் கிட்டுகிறது. பின்னர் அதுவே நானும் மஹாகவி குடும்பத்தில் ஒருவனாக மாறும் சந்தர்ப்பத்துக்கும் காரணமாக வந்து அமைகிறது. “தோன்றாத் துணை” யாக நின்று வழிகாட்டல் என்பதன் உண்மையான அர்த்தத்தை நான் புரிந்துகொண்ட தருணம் அது! அதன் பின்னால், மஹாகவி அவர்களின் பிள்ளைகளின் அன்புக்குரிய மாமாவான அவர் எனக்கும் கூட ஒரு மாமாவாகி விட்டிருந்தார்”. (காலம் இதழ் 7 (1993) மஹாகவி சிறப்பிதழாகியிருப்பதும், அதில் நுஃமான் அவர்களது, “நான் வளர்ந்த கருப்பை” என்ற நீண்ட கவிதை களமாகி (பக். 34-37) இருப்பதும் குறிப்பிடத்தக்கது).
இவ்வாக்கத்தில் பேராசிரியர் சண்முகதாஸ், நுஃமானுடைய ஆளுமை என்ன? என்பதை சுருக்கமாகப் பின்வருமாறு சுட்டுகின்றார்:
குறைந்த வயதிலிருந்தே ஓர் ஆக்க இலக்கியகாரனாக இருந்தமை, கவிஞன் என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தியமை; 'வாசகர் சங்கம்' என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களை வெளியிட்டமை.
அரபு மொழி ஆசிரியராகிய அவர் தந்தையின் வழிகாட்டலைப் பெற்றமை; அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றமை யாழ்ப்பாண, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் உயர் பட்டங்களைப் பெற்றமை; இவை யாவும் அவருடைய அறிவினை மட்டுமன்றி ஆசிரியத் துவத்தினையும் கல்விசார் நிலையினையும் உயர்த்தின.
பெரிய ஆளுமைகளாகிய கனகசபாபதி கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோர் பெய்ஜிங், மொஸ்கோ சார்புக் கட்சிச் சார்புடையவர்களாக இருந்தபோதும், மார்க்ஸிய சார்புள்ள இலக்கிய நோக்குக் கொண்ட நுஃமான் அவர்களுடைய சார்புநிலைகளைக் கடந்து ஒரு புறவயப்பட்ட சமநிலை பேணும் அணுகுமுறை-யினைக் கொண்டவராக அமைந்தமை.
இலக்கியம், இலக்கணம், பொதுமொழியியல், பயன்பாட்டு மொழியியல், சமூக மொழியியல், ஒப்பீட்டு மொழியியல், நடையியல், திறனாய்வு, நாட்டாரியல், பதிப்புத்துறை, மொழிபெயர்ப்பியல் ஆகிய துறைகளிலே தன் தடம் பதித்தமை, இவற்றுக்கு மேலாக ஓர் ஆக்க இலக்கியக்காரனாக அமைந்தமை.
அகம், புறம் என்ற பாகுபாட்டுடன் நுஃமான் அவர்களது பன்னிரண்டு கவிதைகளை காலம் தந்திருக்கிறது. நுட்பமான தேர்வு. திரும்பத்திரும்ப படிக்கத்தோன்றும் கவிதைகள். சிறப்பிதழின் முடிவாக, நுஃமான் சிறப்புப் பக்கங்கள் தொகுப்பாளர் கலாநிதி செ.சுதர்சன் “சந்தன நுஃமான்” எனும் மகுடத்தில் பதினொரு விருத்தப் பாக்களை ஆக்கியுள்ளார். பேராசிரியர் நுஃமான் அவர்களது பன்முக புலமைத்துவ செயற்பாடுகளின் ஒருசில பக்கங்களை காத்திரமாக வெளிக்கொணர்ந்தன் மூலம் இன்னுமொரு ஆய்வுத் தேடலுக்கு காலம் வித்திட்டுள்ளது. காலம் கே.கணேஷ் சிறப்பிதழுக்காக (இதழ் – 17; 2003 ஜனவரி) எம்.ஏ.நுஃமான், கே.கணேஷ் அவர்களுடன் மிக வித்தியாசமாகவும் கனதியாகவும் ஒரு நேர்காணலை நிகழ்த்தியிருப்பார். நுஃமான் சிறப்பிழுக்காக நுஃமான் அவர்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் நேர்கண்டிருக்கலாமே?
உசாத்துணை நூல்கள்
காலம் நுஃமான் சிறப்பிதழ் (ஜனவரி 2025)
Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity by M.A.Nuhman
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.