ஆய்வுச்சுருக்கம்கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். எல்லா ஊர்களிலும் கோயில்கள் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு பெற்றிருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் அருள்வழங்கும் திருத்தலங்களுள் ஒன்று செங்கம் அடுத்த வில்வராணி எனும் கிராமத்தில் அமைந்துள்ள லிங்க சொருப சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு வருபவர்களின் 27 நட்சத்திரக்காரர்களின் அனைத்து தோஷங்களையும் விலக்கி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட சுப்பிமணியர் அருளாசி வழங்குகின்றார். இத்தலத்தை நட்சத்திரதலம் என்றும் நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர்.
முக்கியச்சொற்கள்
வில்வராணி, முருகன், சுப்பிரமணியன், நட்சத்திரக்குன்று, நட்சத்திரத்தலம்
முன்னுரை
செங்கத்துக்கு அருகில் வில்வராணி எனும் கிராமத்தில் மலையின் இடைபட்ட (நடுவில்) இடத்தில் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனை நட்சத்திரக்கோயில், நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர். இங்கு வந்து முருகனை வழிபடுவோரின் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவர் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை இக்கட்டுரையில் காணலாம்.
அமைவிடம்
திருவண்ணாமலையிலிருந்து போளூர் செல்லும் வழியில் 32.கி.மீதொலைவிலும், வேலூரிலிருந்து 45.கி.மீ தொலைவிலும் வந்தால் போளூருக்கான இணைப்புச் சாலை ஒன்று வரும். அங்கிருந்து 10.கி.மீ தொலைவில் செங்கம் செல்லும் வழியில் சென்றால் வில்வாரணியை அடையலாம். வில்வாரணி என்னும்இடத்தில்தான் இக்கோயில் அமைந்திருக்கிறது.
நடைதிறப்பு
இக்கோயில் காலை 6.00 மணி முதல்11.00 மணி வரையும், மாலை 4.00. மணி முதல் இரவு 8.00. மணி வரையும் திறந்திருக்கிறது.
நட்சத்திரக்கோயில்
இக்கோயிலை பக்தர்கள் நட்சத்திரக் கோயில் என்றுஅழைக்கின்றனர். நல்ல சேஷத்திரக் கோயில் என்னும் பெயரே நாளடைவில் நட்சத்திரக் கோயிலாக மாறியிருக்கிறது. இதனை,
“நக்ஷத்ரா கோயில் என்று குறிப்பிடப்படுகிறது (கிருத்திகையில் 27 நட்சத்திரங்களும் கிருத்திகை கன்னிகளும் கூடி வழிபடும் இடம்) வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ ஸ்வயம்பு சிவசுப்ரமணிய ஸ்வாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், குறிப்பாக ராகு மற்றும் கேதுவிடம் பரிகாரம் தேடுபவர்கள்” (https://lightuptemples.com)
என்று கூறுவதிலிருந்து அறியலாம்.
இயற்கை வடிவங்களாக விளங்கும் நெருப்பையும் சிவனையும், நெருப்பிலிருந்து வரும் வெப்பத்தையும் உமாதேவியையும், நெருப்பின் நிறமாக இருக்கும் கணபதியையும், நெருப்பில் ஒளிரும் தன்மைக்கொண்ட ஒளியான முருகனையும் சைவத் தலங்களிலிருந்து பிரித்தறிவது கடினமாகும். அதன்கீழ் செங்கத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் திருகோயில் லிங்கவடிவம் பெற்ற முருகனால் தோற்றம் பெற்றிருக்கிறது.
இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் லிங்கவடிவத்தில் அருள் தருகிறான். இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கிருத்திகைகள் தோறும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகைப் பெண்களும் சிவனை முருகனுக்காக வழிபடும் மரபு இருப்பதால், அதனை விளக்கும் தன்மையில் செங்கத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் திருகோயிலில் முருகன் காட்சியளிக்கிறான்.
சுப்பிரமணியர் திருக்கோயில் தலவரலாறு
செங்கம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக குருக்கள் ஒருவர்எல்லாக் கோயில்களுக்கும் பூஜைகள் செய்துவந்தார். அவர் விரைந்து செல்வதற்காக குதிரைகளில் பயணிப்பது வழக்கம். அவர் தன் சக குருக்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார்.
ஒருமுறை அவ்வாறு செல்ல முடியாதபடி சில தடங்கல்கள் ஏற்பட அவர் திருத்தணி செல்லவில்லை. அன்று இரவு முருகன் கனவில் வந்து, நான் நாகவடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு கோயிலை கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுமாறும் கேட்க, குருக்களுக்கு விழிப்பு வருகிறது.
மறுநாள் விடிந்ததும் கனவில் வந்த முருகன் குறிப்பிட்டதைப் போல மலையில் சுயம்பு வடிவில் லிங்கம் ஒன்று குருக்களுக்கு கிடைக்க, அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருப்பதையும் குருக்கள் பார்க்கிறார். குருக்களைக் கண்டவுடன் அப்பாம்பு குடைப்பிடித்த வடிவத்தில் சிலையாக மாறிவிடுகிறது. அங்கு குருக்களும் அவருடன் திருத்தணிக்கு தொடர்ந்து சென்றுவந்த சக குருக்களும் ஒரு சிறிய கொட்டகையை அமைத்து, அவ்விடத்தில் கிடைக்கப்பெற்ற லிங்கத்தையே முருகனாக நினைத்து வழிபடுகின்றனர்.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு அங்கு வள்ளியும் தேய்வானையும் முருகனின் சிலையோடு இணைக்கப்பட்டதாக ஊர் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாகம் லிங்கத்தைக் காப்பது போன்ற உருவத்தில் கனவு வந்ததை அடிப்படையாகக் கொண்டு குருக்கள் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பதைப் போல சிலையை இக்கோயிலில் வடிவமைத்தார் என்பது தலபுராணம் கூறும் வரலாறாகும்.
செங்கம் சுப்பிரமணியர் திருக்கோயில் கல்வெட்டு
செங்கத்தில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் 12-ஆம், 13-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்தக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில்,
“மலைகடாம் பாட்டு என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட மரபுகள் மற்றும் மலைப்படுகடாம் என்னும் சங்கஇலக்கிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்தாவேள் நன்னன்செய் நன்னன் பற்றியக் குறிப்புகள் கிடக்கின்றன.” (மா. சந்திரமூர்த்தி, கு.வெங்கடேசன், ப.71)
இக்கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரிஷபேஸ்வரர்ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டுகள் சுப்பிரமணியர்திருக்கோயில் அமைந்திருக்கும் மலையை நவிரமலை என்று குறிப்பிடுகின்றன. அதேபோல சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகத் திகழும்மலைப்படுகடாம் என்னும் நூலின் குறிப்பிடப்பட்டு்ள்ள பல்வேறு தகவல்கள்இப்பகுதியைச் சார்ந்த தகவல்களாக இருப்பதாக மலைப்படுகடாமிற்கு உரைவழங்கிய உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய தகவல்கள் செங்கம், சுப்பிரமணியர் திருக்கோயிலின் பழமையை விளக்குவனவாக அமைந்திருக்கின்றன.
கோயில் அமைப்பு
கோயில் அடிவாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், நவகிரக சந்நதிகள் அமைந்துள்ளன. இடும்பம் சன்னதியும் உண்டு. கோயில் 275 படிகளைக் கொண்டது. மலை ஏறும் போது முதலாவதாக விநாயகர் சந்நதி, நந்தி தேவர் வாயிலிருந்து நீர் வந்து நிரம்பும்படியான குளம் ஒன்று காண முடிகின்றது. முருகனின் உயரமான சிலை அதனைத் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் பிரதான வாயில் தொடர்ந்து முருகன் சன்னதி. காசிவிசாலாட்சி உடனுரை காசி விசுவநாதர் சன்னதியும் உள்ளது. இயற்கை நலம் சூழ்ந்த அழகிய திருத்தலமாக அமைந்துள்ளது. கருவறையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சமேதராய் காட்சி தருகிறார்.
நேர்த்திக்கடன்
இங்குள்ள முருகனை ராகு, கேது தோஷமுள்ளவர்கள் வணங்கினால் தோஷம் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதற்கான நேர்த்திகடனாக பால் அபிஷேகமும், புத்தாடையும் முருகனுக்கு அளிக்கின்றனர்.
விழாக்கள்
“ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.” https://www.kanthakottam.com)
ஆடி கிருத்திகை காவடி எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இருக்கும். சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக காவடி எடுத்துவந்து முருகனுக்கு செலுத்துவர். தை மாத பிறப்பு, சித்திரை மாத பிறப்பு பால்குட அபிஷேகம், கந்தசஷ்டி விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன. மேலும், கிருத்திகை தோறும் மலைவலம் வருதலும் நடைபெறுகிறது. கிறுத்திகை தோறும் தேன் அபிஷேகம் செய்து சம்பா சாதம் படைத்து செவ்வரளி மாலை சாற்றி வழிபடுபவர்களின் நாகதோஷம், புத்திர தோஷம், திருமண தோஷம் அகலும் என நம்பப்படுகிறது.
தலவிருட்சம்
இக்கோயிலின் வில்வமரம். இதில் தொட்டில் கட்டி வழிபடுவோருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு
சிவன்தான் லிங்கவடிவில் காட்சியளிப்பார். இங்கு முருகன் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இது சிவனும் முருகனும் ஒன்றே எனும் கருத்தியலைக் கொண்டதாக அமைந்துள்ளது. மலேசியாவில் இருக்கும் சிலையைப் போன்றே இங்கேயும் உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவரைப்பற்றி
“ஸ்ரீசுப்பிரமணிய மாலை, நட்சத்திரக்குன்று வழிநடைப்பதம், உடுமலை பாமாலை, நட்சத்திரக்குன்று அருள்மிகு சுப்பிரமணியர் பாமாலை ஆகிய நூல்களும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் நான்கு பாடல்களும் இயற்றப்பட்டுள்ளன.” ( வேதாச்சலம்)
என்று வேதாச்சலம் கூறுகின்றார். இருப்பினும் மேற்காணும் நூல்கள் ஏதும் நமக்கு காணக்கிடைக்கவில்லை.
முடிவுரை
முருகன் சுயம்பு மூபமாக தோன்றி 27 நட்சத்திரகாரர்களின் சகல தோஷங்களையும் தீர்த்து நலமான வாழ்வினை அளித்து வருகிறார். கிருத்திகைதோறும் மலைவலம் வருகின்றனர். ஆடிக்கிருத்திகை, தை கிருத்திகை, சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. சூரசம்ஹாரம், கந்தசஷ்டி விழா ஆகியன மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குழந்தை வரம் வேண்டி தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது போன்ற பல்வேறு சுவாரசியமான தகவல்கள் இக்கட்டுரையில் செங்கம் அடுத்த வில்வராணி கிராமத்தில் அருளாட்சிபுரியும் சுப்பிரமணியர் குறிந்து அறிந்து கொண்டோம்.
அடிக்குறிப்புகள்
தகவலாளர்: திரு. வேதாச்சலம், வயது:49, ஊர்: செங்கம்
உசாத்துணை நூல்கள் & இணையத்தளங்கள்
மா. சந்திரமூர்த்தி, கு.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்டத் திருத்தலங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2016.
Vilvarani Subramaniar Temple, Thiruvannamalai
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.