முன்னுரை

சிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சிரஞ்சீவிகள் குறித்து இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள்

மகாபலி சக்கரவர்த்தி, அனுமன், வீடணன், பரசுராமர், பிரகலாதன் ஆகியோர் கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

1.மகாபலி சக்கரவர்த்தி

கம்பராமாயணத்தில் மகாபலி சக்கரவர்த்தி குறித்த பதிவுகள் பாலகாண்டம் வேள்விப் படலத்தில் காணப்படுகிறது. வேள்வியைக் காக்கவும், தாடகையை வதம் செய்யவும் விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற போது அவரே, மகாபலி சக்கரவர்த்தி குறித்து பேசுகிறார். அசுர அரசன் மகாபலி விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் வென்று தன்வயப்படுத்திக் கொண்டான். வேள்விகள் செய்து தானம் செய்ய முடிவு செய்தான். தேவர்கள் திருமாலை வணங்கி ’கொடியவனான மகாபலியின் கொடுஞ்செயலை ஒழித்திடுக’ என்று யாசித்தனர். திருமாலும் அவர்களைக் காக்க வேண்டி காசிப முனிவருக்கும், அதிதிக்கும் ஒரு குழந்தையாக பெரிய ஆலமரம் முழுவதும் அடங்கியுள்ள சிறிய ஆலம் விதையைப் போல, மிகக் குறுகிய வடிவத்தோடு அவதரித்தார். மகாபலிடம் சென்று மூன்றடி மண் தானமாகக் கேட்டார். மகாபலியும் நீர் வார்த்து மூன்று அடி மண்ணைத் தர, வாமன அவதார திருமால், விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியில் பூமி முழுவதையும், மற்றொரு அடியில் வானுலகம் முழுவதையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைக்க என்ற போது, மகாபலி ஆணவம் அழிந்து தன் தலை மேல் வைக்க வேண்டினார். பாதாள உலகின் மன்னன் ஆனார் மகாபலி சக்கரவர்த்தி. இன்னும் அங்கேயே சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார்.

“உலகு எலாம் உள்ளபடி அடக்கி ஓர் அடிக்கு
அலகு இலாது அவ் அடிக்கு அன்பன் மெய்யது ஆம்
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே”
(வேள்விப் படலம் 435)

2. அனுமன்

கம்பராமாயணத்தில் அனுமன் குறித்த அறிமுகம் கிட்கிந்தா காண்டம் அனுமன் படலத்தில் உள்ளது. சீதையைத் தேடி இராம லக்ஷ்மணர்கள் வர இருந்த போது சபரி கூறியபடி, சுக்ரீவனைச் சந்திக்க வேண்டி ரிஷ்ய முகமலைக்கு வந்தார்கள். அவர் வருவதை, மலைக்கு வரும்போது வழியில் அனுமன் கண்டார். இராமன் அனுமனிடம் நீ யார் என்ற போது, வாயு தேவனுக்கும், அஞ்சனைக்கும் மகனாகப் பிறந்தவன். என் பெயர் அனுமன் என்றான். சீதையைத் தேடி கண்டுபிடித்தது. கணையாழியைக் கொடுத்தது, சூளாமணியைப் பெற்று வந்தது. மருத்துவமலையைக் கொண்டு வந்து இராம லக்ஷ்மணர்களைக் காத்தது. மோதிரம் கொடுத்து பரதனின் உயிரைக் காத்தது என அனைத்தும் செய்தான். தற்கொலை எண்ணத்துடன் தூக்கு மாட்ட சென்ற சீதையை இராம நாமம் கூறி காத்தார்.

இராமன், அனுமனிடம் அடையாள மோதிரத்தைக்கொடுத்தனுப்பினார். அந்த மோதிரத்தை அனுமன் தரப் பெற்றுக் கொண்ட சீதை, போன உயிர் மீண்டும் பெற்றவர்கள் போலவும், இழந்த செல்வத்தைப் பெற்றவர்கள் போலவும், குழந்தை பெற்ற மலடி போலவும், ஆனந்தக் கடலில் மூழ்கி, மோதிரத்தைக் கையில் வாங்கி தன் மார்பில் வைத்தாள். தலை மீது வைத்தாள். கண்ணில் நீர் பெருகினால் வாய் திறந்து பேச வைத்தாள். ஆனால் பேச முடியாமல் போனது. இராமனின் மோதிரத்தால் சீதையின் மேனியில் புதியதோர் பிரகாசம் ஏற்பட்டது. கண்ணீர் சிந்திய வண்ணம்,

“உத்தமனே, நீ எனக்கு உயிர்த் தந்தாய். துணை இல்லாமல் என் துன்பத்தைத் தீர்த்த வள்ளலே, நீ வாழ்வாயாக, நான் கற்பு நிலையில் களங்கமற்றவளாக இருந்தால் பல யுகங்கள் ஒருநாள் என்று சொல்லப்படும் ஆண்டுகள் எல்லாம் 14 உலகங்களும் அழியும் காலத்திலும் கூட, இன்று போல் என்றும் இருப்பாயாக” என்று சீதை அனுமனை வாழ்த்தி வரம் அளித்தாள்.

“ஊழி ஓர்பகலாய் ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள்"
(உருக்காட்டுப்படலம் 559)

இராமன் அனுமனை வாழ்த்துதல்

“இந்திரசித் பிரம்மாத்திரத்தை விடுத்த இந்த நாளில், எவரும் இறக்காமல், எம்மொடு இருந்து நீண்ட காலம் வாழுமாறு அருளினாய். இங்ஙனம் அருளிய நீ, துன்பம் விளைவிக்கக் கூடிய பிணி ஒன்றையும் அடையாது இன்பமாக என் ஏவலால் என்றும் வாழ்வாயாக” என்று இராமன் வாழ்த்தினான்.

“இன்று வீகலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்
ஒன்றும் இன்னல்நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால்இனிது என் ஏவலால்”
(மருந்துமலைப் படலம் 2757)

இராவணன் வீடணனை நோக்கி வேலைச் செலுத்த, அடைக்கலப் பொருளைக் காக்க வேண்டும் என்று எண்ணிய இலட்சுமணன், அந்த வேலைத் தன் மார்பில் ஏந்தி மயக்கமடைந்தான். அனுமன் மருத்துவமலையைக் கொண்டு வந்து மயக்கத்தைத் தெளிவித்தான். இதைச் செவியுற்ற சாம்பவான் அனைத்தையும் இராமனிடம் கூற, இராமன் அனுமனைத் தொடர்ச்சியாகத் தழுவிக் கொண்டு, “உன்னைப் பெற்றேன் பெருமையுடையவனே, நான் பெறாதவை எவை? பின்னும் சற்றும் இடையூறில்லாத ஆயுளைப் பெறுவாயாக” என்று வாழ்த்தினான்.

“பெற்றனென் என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்ற இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான்”
(வேல் ஏற்றப்படலம் 3516)

3.வீடணன்

தசமுகன் இலங்கை வேந்தன் இராவணனின் தம்பி. கும்பகர்ணனுக்கும் தம்பியாவான். அசுரகுல விஸ்வ மகரிஷிக்கும், கைகேசிக்கும் பிறந்தவர். இருந்தபோதிலும் ஸ்ரீ ராம பக்தராகவே வாழ்ந்தார். இராவணன், சீதையைச் சிறை வைத்ததையும் கண்டித்தார். தூதராக வந்த அனுமனை, இராவணன் கொல்ல முயன்ற போது, தூதனைக் கொல்லக்கூடாது என்று கூறி தடுத்தார். இராவணனுக்குப் பலவாறு அறிவுரை கூறி திருத்த முயன்றார். அவன் கொன்று விடுவேன் என்ற விரட்டவே, இராமனைத் தேடிச்சென்று அடைக்கலமானார். இராவணனை வெல்வதற்கு பல ஆலோசனைகளை இராமனுக்கு வழங்கியவர் வீடணன்.

இராமன் வீடணனை வாழ்த்துதல்

வீடணன், இராமனிடம் தன்னை அடைக்கலப்படுத்தினான். அப்பொழுது இராமன்,“பதினான்கு உலகங்களும், என் பெயரும் எவ்வளவு காலம் வரை இருக்குமோ, அந்தக் கால எல்லை வரை அரக்கர் வாழ்கின்ற ஆழ்ந்த கடலில் நடுவண் அமைந்திருக்கின்ற இலங்கை அரசை உனக்குத் தந்தேன். ஆட்சி புரிவாயாக” என்றான்

“ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும்நாள் அன்றுகாறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்"

 (வீடணன் அடைக்கலப் படலம் 444)

இராமபிரான் வீடணனுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துதல்

இராமன், வீடணனுக்கு அறிவுரைப் பகன்ற பின் அனுமனை நோக்கினான். தன் மாற்றான் தாயாகிய கைகேயியின் சொல்லை மேற்கொண்டு வனம் புகுந்தவனாகிய இராமபிரான், வீடணனை நோக்கி,
“உயர்ந்த கீர்த்தியை உடையவனே என்று புகழ்ந்து அவனுக்கு வேண்டிய பல நீதிகளையும் எடுத்துரைத்து, நீ உன் சுற்றத்தோடு நிலைபெற்று வாழ்வாயாக”
என்ற சொல்லின் வலிமை பொருந்திய அனுமனை நோக்கினான்.

"பன்னும் நீதிகள் பல்பல கூறி மற்று
உன்னுடைத் தமரோடு உயர் கீர்த்தியோய்
மன்னி வாழ்க என்றுரைத்து ஆடல் மாருதி
தன்னை நோக்கினான் தாயர் சொல் நோக்கினான் "

(மீட்சிப்படலம் 3905)

4.பரசுராமர்

கம்பராமாயணத்தில் பரசுராமர் குறித்த செய்திகள் பாலகாண்டம் பரசுராமப் படலத்தில் அமைந்துள்ளது. இராமன் சீதையைத் திருமணம் செய்து வரும் வழியில் அவர்களைப் பரசுராமர் எதிர்த்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. சமதக்கினி முனிவர்,ரேணுகா தேவியின் மகன் பரசுராமன். இராமன் சிவதனுசை ஒடித்து சீதையைத் திருமணம் செய்தார். அப்போது ஏற்பட்ட ஒலியைக் கேட்ட பரசுராமர், இராமனிடம் வந்தார். நீ முன்னரே பழுதுபட்டு ஓரளவு முறிந்த வில்லை நீ ஒடித்தாய். அதற்காகப் பெருமைப் படாதே என்றார். உனக்கு வலிமை இருக்குமானால் திருமாலின் வில்லை வாங்கி வளைத்திடு என்றார். இராமனும் அதை வாங்கி வளைத்து, பரசுராமனிடம் நீ முனிவரின் புதல்வன். தவ ஒழுக்கம் மேற்கொண்டவன். உன்னைக் கொல்லக்கூடாது என்றாலும், வில்லில் பூட்டிய இந்த அம்பு இலக்கு இன்றி வீணாகக் கூடாது. இந்த அம்புக்கு இலக்கு எது விரைவாக உரை செய்க என்றான். உன்னால் எய்யப்படும் அம்பு இடையே வீணாகப் போகாமல் நான் செய்துள்ள தவங்களின் பயன் முழுவதையும் கவர்ந்து செல்க என்றார். உடனே அம்பு குற்றமற்ற தவப்பயன் முழுவதையும் சுமந்து கொண்டு இராமனிடமே மீண்டது.

“எய்த அம்பு இடைபழுது எய்திடாமல் என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே என
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே”
(பரசுராமப் படலம் 1247)

5.பிரகலாதன்

பொதுவாக சிரஞ்சீவிகள் வியாசர், அசுவத்தாமன், அனுமன், மகாபலி, வீடணன், பரசுராமன், க்ருபர் ஆகிய எழுவர் என்பர். இந்த வரிசையில் பிரகலாதன் இடம் பெறவில்லை என்றாலும் கம்பர் பிரகலாதனை சிரஞ்சீவிகள் வரிசையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பராமாயணத்தில் பிரகலாதன் குறித்த செய்திகள் யுத்தகாண்டம் இரணியன் வதைப்படலத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கன் இரணியகசிபுக்கும், கையாதுக்கும் பிறந்த மகன் பிரகலாதன். தாயின் வயிற்றில் இருக்கும்போதே, திருமால்மீது பக்தி ஏற்பட்டது. ஸ்ரீஹரியே இறைவன் என்ற ஆழ்ந்த பக்தியுடன் இருந்தான். இரணியகசிபு புதல்வனிடம் விஷ்ணு உண்மையான கடவுள் அல்ல. நம் குல விரோதி என்று நயமாக மிரட்டியும், சித்தரவதை செய்துபார்த்த போதும், பிரகலாதன் ஹரி பக்தியை விடவில்லை. ஆத்திரமடைந்த இரணியன், பிரகலாதனை பல விதங்களில் கொலை செய்யப் பார்த்தும், இறையருளால் பிரகலாதன் தப்பித்து வந்தான். நீ வணங்கும் இறைவன் எங்கிருக்கிறான் என்று இரணியன் கேட்டபோது, தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்றான். இந்தத் தூணில் உள்ளானா என்று கேட்டு, தூணைக் கதாயுதத்தால் தாக்க, உள்ளிருந்து வந்த பரம்பொருள் அவனை வதைத்தார். பிரகலாதனுக்கு சிரஞ்சீவி பட்டமும் அளித்தார்.

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனின் உடலைக் கை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் துன்பம் கொள்ளாத மன இயல்பைக் கொண்ட உனக்கு, இப்போது யாம் என்ன கைம்மாறு செய்வோம் என்று கேட்டார். இனிமேல் எல்லையற்ற குற்றங்களைச் செய்தாராயினும் உன் குலத்தில் பிறந்த அசுரர்களை நாம் கொல்ல மாட்டோம். நினக்கு எல்லாப் பிறப்புகளிலும் யாம் நல்லவராக இருப்போம். உனக்குச் செய்ய வேண்டிய ஏதேனும் இருப்பின் வெட்கப்படாமல் அதை இன்னது என விரைவில் சொல்வாயாக என்று அந்தப் பெருமான் பிரகலாதனையே நோக்கிக் கூறினான். நின் திருவருளால் இதுவரை நான் பெற்ற நன்மைகளோ எல்லை இல்லாதவை. இன்னும் யான் பெற வேண்டிய நன்மையும் இருக்கின்றதோ இன்னும் நான் பெற வேண்டியது இருக்குமானால் எலும்பில்லாத இழிந்த பிறப்பான புழுவின் உடலை நான் பெற்றாலும், உன்னிடம் அன்பு செலுத்தும் பெரும் பேற்றை எனக்கு அருள்வாயாக என்று பிரகலாதன் உரைத்தான். அங்ஙனம் உரைத்த பிரகலாதனைப் பார்த்து அருள் கூர்ந்த உள்ளத்தைக் கொண்டவனாய் என் அன்பன் வல்லவன் என்று மகிழ்வு கொண்ட பெருமான், பழமையான மண், விண், காற்று, நீர், தீ எனும் ஐந்து பூதங்கள் எல்லாம் அழிந்தாலும், அழியாமல் நீ என்னைப் போல எக்காலத்திலும் இருப்பவன் ஆவாய் என்று உரைத்தான்.

“அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினனாய்
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன்
முன்ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன்நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான்”
(இரணியன் வதைப் படலம் 299)

முடிவுரை

சிரஞ்சீவி என்றால் சாகா வரம் பெற்றவர்கள் என்று பொருள். பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துவிடும் என்பது நியதி. ஆனால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களுக்கு இறப்பு என்பது கிடையாது. சிரஞ்சீவி என்பது சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் கிடைக்கின்றது என்பதை இலக்கியங்களின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மகாபலி சக்கரவர்த்தி, அனுமன், வீடணன், பரசுராமர், பிரகலாதன் ஆகியோர் கம்பராமாயணத்தில் சிரஞ்சீவிகள் என்று கம்பர் குறிப்பிடுவதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணை நூற் பட்டியல்

1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.