1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!

மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
​தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
​வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
​கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
​மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
​பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!                       

2. மனிதனும் மடிந்துபோன சாதியும்

​உயிரற்ற சாதியோ இங்கே, உயிருள்ள மனிதனைக் கொன்று குடிக்கிறது!
மனித மூளையில் தேங்கிய இந்நோய், எப்போதுதான் அழியப் போகிறது?
​ஆணவக் கொலைகளைத் தடுக்க, எந்த அரசுதான் முழுமையாய் முன்வரும்?
ஆட்சியாளர்கள் மாறுவதோடு, இந்த அவலமும் எப்போதுதான் முடிவுக்கு வரும்?
​புதியதாய் வந்திருக்கும் அரசும், பழைய அரசியல் போலவே ஒட்டிக்கொள்ளுமா?
அல்லது துணிவோடு நின்று, இக்கொடூரப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துமா?
​மனிதன் தோன்றிய தொடக்கக் காலத்தில், சாதி மதம் ஏதும் இல்லை!
இப்பிரிவினைகள் அற்ற வரலாற்றை, இன்னும் நாம் கற்பிக்கவே இல்லை!
​மனிதம் மறந்து வாழும் மனிதர்களை, என்றோ ஒருநாள் காலம் மாற்றும்!
சாதி என்னும் கொடும் நோய் ஒழிந்து, சமத்துவப் பூமி விரைவில் மலரும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.