1. நிகர் செய்திடாத நியாயங்கள்.

வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.

நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.

சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின்
புரையோடிய அவலம்.

விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.

கூடிய நெருக்கடி கூத்தில்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதிலத்தில்
மகிழவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.


காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.


2. காய்ந்திடாத ஈரம்.

பால்யத்தில்
பழகிவிடும் செயலொன்று
அனிச்சையென
மாறுவதை
மரபணுக்களைப்
பொறுப்பாக்கும்
மாய வினோத
முடக்கு வாதங்களில்
மனம் ஆசுவாசம் கொள்வதான
செயற்கைகளின் செழுமைகளுக்கிடையில்.

பசப்பற்றப் பாசத்தில்
உள் நுழைந்த
ஒற்றை எண்ணம்
வளர்தலில்
வாய்த்த
பேரலையில்
வாறிச் சுருட்டிடாமல்
அலையாடி நுரைக்கிறது.
ஒட்டி நின்று
உறவாடும் நேசத்தில்
நெஞ்சை நனைத்து
நெகிழும் படியாக
குழந்தையெனக் கொஞ்சிய
பிள்ளை
சிறுமியாக மாறிபொழுதிலும்
மாறிடாத பண்பில்.

நன்றி:  தோழி சிறுமி சார்ஜிமாவிற்கு.


3. எப்படியாவது எப்பொழுதாவது.

ஒளிந்திருந்த
முதுமையைக்
கண்டெடுத்த
பிறகு
ஒளிந்து கொண்டது
இளமை
பார தூரமாக
நினைவுக்குள்
சிக்காமல்.

நகலெடுக்கும் கருவிகளை
நானறியாதபொழுதில்
வாய்க்காதுபோனது
பழுப்பேறியப் படமாக
பழைய முகம்
மனசுகம் கிடைக்காமல்
இப்போது
மருகுமாறு.

அனுபவ சுருக்கங்களை
ஆற்றாமையில்
பார்க்கின்றேன்

கண நேர
தரிசனமாக
கண்டுவிடும் ஆவலில்
ஒவ்வொரு முறையும்
கண்ணாடியை
இயலாமையின் ஏக்கத்தில்
தடவியவாறு
சில
ஜீபூம்பாக்களை
எதிர்பார்த்து.


4. இப்படியும் இருக்கலாம்.

காலை வணக்கத்தில்
கருத்துக்கள் போடும்
நண்பர்களை.
எதிர் வீட்டு
பாட்டி
என் வீட்டுப்பூவை
இன்னொரு வீட்டு
சுவரப் பிள்ளையாருக்கு
போடுவதை.
வாழை இலையில்
வந்தமர்ந்து
சறுக்கி விழுமோவென
சலனப்படுத்தும்
சிறு குருவியை.
குடித்து குடித்து
குவிந்த போத்தல்களை
மூட்டையாக
விற்கும்
மூன்றாவது வீட்டு
தெருத் தோழனை
தினம்
பார்ப்பதை.
ஏதோவொன்றை
எப்பொழுதும்
அன்றாடம் கடப்பதாக
இச்செய்தியையும்
கடக்க முடியவில்லை
சாதரணமாக.

அவரொரு
சாம்ராஜ்யமைத்த
சகோதரனின் தந்தை.

ஒடுக்கப்பட்ட இடத்தில்
உருவாகிய
அரசு ஊழியர்.

எவர் மனம் நோகாத
வெள்ளையாடை
உடுத்துவதில்
விருப்பம் கொண்டவர்.

கீழ் நிலையிலும்
ஊர் வியந்த
மேல் நிலையிலும்
ஊர் வியந்த
பவித்ர மாணிக்கமாக
பரிணமித்து
பலருக்கும்
பிடித்தமான
எளிமையில்
எப்படி
இருக்கிறீர்களென்று
கேட்க
நினைக்க வைத்தவர்.

எப்பொழுதும் போல
சிரிப்பொன்றைத்தான்
தருவாரென தெரிந்தும்
கேட்க
வாய்பற்றுப்
போனதற்காக
வருந்துகிறேன்
இத்தருணத்தில்.

எனக்கு வந்த
மரணச் செய்தியை
கடந்து போகமுடியாமல்
இயல்புக்குள்
இன்னும்
இயல்பாக இருக்க
வேண்டுமென
யாவருக்கும்

யாவுமாகிட
ஆசைகள் கொண்டு
தொடங்கியது

இக் கணம்
அடுத்த கணத்தை
அப்படியே
ஏற்பதற்காக
அவரைப்போலவே.


5. உருவாத முடிச்சு.

பார்வைச் சுருக்கில்
சிக்கிப்
பரிதவிக்கிறது
மனம்
பிராண அவஸ்தையாக
பேதலித்து.
இழுபடும் மனம்
சிராய்ப்புகளோடு
நோவுகிறது.
இன்னொரு பார்வையில்
யாவும்
தளர்வுற.


6. இசைவாகாத இணக்கம்.

அசைபோடும்
மனம்
மென்று விட
கடினப் படுகிறது
பாக்கு வெட்டிகளற்ற
பரிதவிப்பில்.
இணைவற்ற
ஒன்று கூடலில்
சிவக்க மறுக்கிறது
வாழ்க்கை
சிறப்பெனச் சுவைக்க முடியாமல்
சமச்சீரின் சாத்தியத்தை
எதிர்பார்த்து.



7. முடிவுறாத தேடல்கள்

என்
வீடென்றுதான்
அழைக்கிறார்கள்.
எல்லாம் இருக்கிறது
என்னைத்தவிர.

தேடிக்
கொண்டுதான்
இருக்கிறேன்.
அசௌகரியமற்று
ஆமாம்
என் வீடென
சொல்லிவிட.


8. மறந்துபோனது மனித அறம்.

பூமிக்காக
வேர்விட்டேன் என்கிறது செடி
தண்ணீரோடு உறவாடவுமென.

சூரியனுக்காக
மலர்ந்தேன்
என்கிறது
மலர்கள்

வாசனையை காற்றுக்கெனச் சொல்லி.
அபரிக்கிறவனென
அறியவில்லையது
பறித்தலில்
நான்
பழகியதால்.


9. இளைப்பாறுதலின் அசௌகரியங்கள்.

எங்கோ தொலைத்த ஒன்றை
நான் வீட்டில்
தேடிக் கொண்டு இருந்தேன்.
அதென்னவோ
எனக்கு சவுகரியமாக இருந்தது.
எங்கிருந்தோ
குரல்கள் வந்த வண்ணமிருந்தது.
அது உபாயங்களை சொல்லியபடியே இருந்தது.
பல முறை நான்
தேடுவதைப் பராக்
பார்த்துக் கொண்டிருந்ததும் நிகழ்ந்தது.
அலுப்புகள் கூடிய பலநேரங்களில்
என் மீதே
எனக்கு சந்தேகங்கள் வலுத்தது.
கதவைத் திறந்து ஓடி விடலாமா எனத் தோன்ற
வெளியில்
அநேக சாத்தியங்கள்
என்னை ஈர்த்தது.
இப்படியான பொழுதொன்றில்
நான் தேடியதாக
நினைத்தது
கிடைத்து விட்டதாக
ஆசுவாசம் கொண்டு பார்க்கையில்
நீ
தொலைக்கவே இல்லையேவென்ற
நினைவு
குறுஞ்சிரிப்பொலியாக
வியக்க வைத்தது.
குவளையால்
பருகிய
மிடறு சுவையின் பூரிப்பில்
நான் மிதக்கும் போது
நீங்கள் கேட்கிறீர்கள்
நான் தொலையக்கொடுத்தப்பொருளை
எப்படிக் தேடியெடுப்பதென.
பிறகென்ன
நானும்
உங்களோடு தேடுவதாக
பாவனைகள் செய்கிறேன்.
நீங்கள்
நீங்களாக இருக்கிறீர்கள்.
நான்
நானாக
இருக்கிறேன்.

பதங்கள் மட்டும்
மாறிக் கிடக்கிறது.

வானத்தைப்போல
சலித்திடாத
பேரன்பின்
வாஞ்சையில்
நேற்றைய
என்னை நினைவூட்டுகிறீர்கள்.

நாளைய
உங்களை
நான்
நினைவூட்டுகிறேன்.

எனக்குப் பேரானந்தம்.
உங்களுக்கு
பேரவதிதான்.

புரிகிறதென
நீங்கள்
தவிப்பதும்
புரிய வைக்க
நான்
தவிப்பதும்
பாரிய நிகழ்வொன்று
நடந்தப்படியே
இருக்கிறது.

இப் பார
தூரப்பயணத்தில்
அசௌவுகரியமான
சௌகரியத்தில்.


10. விசுவாச மன்றாட்டம்.

மீய்ந்த
கொஞ்ச நம்பிக்கையும்
நசிந்ததழுகியபொழுது
தூரமாக
தென்பட்டது
விடவெள்ளிதானோ
வாக்கு தத்த
வாஞ்சையில்.

இம் முறையேனும்
ஆணிகள்
அரையும்
அறியாமைக்குள்
வீழாதிருக்க
வேண்டுமென
யுக யுகமாக
தவிக்கிறேன்
தாகித்து.

அன்றாடங்கள்
யாவிலும்
எப்பொழுதும்
சிலுவைப் பாடில்
சிதைந்து போகும்
மன்றாட்டமாகவே
தருணங்கள்

மாறிப்போனதால்.


11. துய்க்காத பொழுதின் அயர்ச்சி!

எண்ணிலடங்காத முறை
இதன் வழியாக சென்றிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
ஒரு சிந்தனை
ஒரு சிக்கல்
அதன் முறைமைகளாக
வாழ்வின் போதாமையென
விரைந்திருக்கிறேன்.

அகலப்படுத்தப்படும்
இச்சாலையின் அசௌகரியங்கள் 
இன்னும் கொஞ்சம் நாளில் பயணங்களை
இலகுவாக்கிவிடும்.

கடந்து போன நாலொன்றில்
இம் மரங்களின் ஏதோவொன்றில்
கொஞ்சம் நின்று நிழல் துய்த்திருக்கலாம்.
அதன் குளிர்மையை சேகரமாக்கி இருக்கலாம்.

பெயர் தெரிந்தும் தெரியாத பறவைகளின் ஒலியை
நிதானமாக அவதானித்திருக்கலாம்.

குறைந்தபட்சம் ஏதோவொரு மரத்தின் பழத்தை
ருசித்திருக்கலாம்.

துரிதப் பயன்பாட்டின் சவுகரியத்திற்கு
சாலையோர மர அழிப்பு
பார தூர சிந்தனைகளற்ற குறைகளுடைய
நீர்த்த அரசியல் தனம் தான்.

பயணத்தின் இருபக்க வெறுமை வியாபித்தல்
வேறோரு மர அமர்வின் துளிர்ப்பின் பிறகு
மறைந்துபோகும்தான்.
அப்பொழுதாவது மனதிடம் மருகாமல்
நின்று நிதானப்படவேண்டும்.

சிறார் வயதிலிருந்தே
சாலையோர
மர நிழலுக்குள்
ஒதுங்கி மகிழாததற்கு
அம்மாவெனும்
அழகு தேவதை
தூக்கிட்டுக் கொண்டாளா
தூக்கிலிடப்பட்டாளாவென்ற
விடைகள் தெரியாத
வேதனை கூட
வாழ்வில் ஒதுங்கிடாத விரண்டோடலுக்கு
காரணமாக இருக்கலாம்.

தனக்கு மட்டுமே
வாய்த்த
மீளாத் துயரென
தருணங்களை
செமிக்கத் தெரியாதவன்
என்னைப்போல
கண்ணீரில்
கரைந்து
இப்படியே
தப்பித்தோடிக் கொண்டிருக்கிறான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* ஓவியம் - AI