பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.
அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'
அம்மா சொன்னதில் உள்ள நியாயத்தை
அப்போது நானுணர்ந்தேன்.
தர்க்கரீதியாகவும் அது சரியாகத்தானிருந்தது.
புத்திசாலிப் பாட்டி என்றேன்.
'உன்னைப்போல் ' என்றாள் அம்மா.
எனக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது.
என் செல்ல அம்மா என்று கொஞ்சினேன்.
என் அம்மாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன்
அங்கிருந்த பாட்டியின் தனிமையைப் பற்றி.
பாட்டிக்குத் துணையாக நானும் அங்கு செல்வேன்.
பாட்டியின் கதை கேட்டு நானும் அங்கு தூங்குவேன்.
இவ்விதமெல்லாம் அப்போது நான் எண்ணிக்கொள்வேன்.
இப்பொழுதும் பாட்டி அங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்.
தனிமையில் வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்.
நானும் இன்னும் இங்கிருந்தவாறு
அவளைப்பற்றி அவ்வப்போது சிந்தித்துக்
கொண்டுதானிருக்கின்றேன்.
பாட்டி தனித்து வசிக்கும் இல்லத்திற்கு
ஒரு நாள் நான் நிச்சயம் செல்வேன்.
அவளுக்கு
ஒத்தாசையாக இருப்பேன்
என்று
இப்போதும் நான்
எண்ணிக்கொண்டுதான்
இருக்கின்றேன்.
*ஓவியம் AI