* ஓவியம் -AI
துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.
இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.
பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?
வடிகட்டித் தெளிந்தால்
வடித்துத் தெளிந்ததை
உண்மையாக்கித் தொடரின்
உள்ள உண்மை
உறைக்கும். அல்லது
உதிரும் அதில்
உள்ள பொய்மைக் கனத்தால்.
உணர்வீர். உரைப்பீர். எழுத்தில்
வடிப்பீர். வரவேற்பேன் யான்.
துதியைத் துதிப்போரை
மதிப்பேனா? மிதிப்பேனா?
கவிதை: சோக்கிரடீசின் ஆரவாரம்!
நாம் மந்தைகள்.
மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும்
மந்தைகள்.
சொந்தமாகச் சிந்திக்க,
சீர்தூக்கி முடிவுகளை எடுக்க
எமக்குத் திராணியில்லை.
திராணியில்லையா
அல்லது
விருப்பு இல்லையா?
எப்பொழுதும் எமக்காக
யாரோ ஒருவர் எடுக்கும் முடிவுகளை
ஏற்றுக்கொள்வதில் எமக்கும்
தயக்கமெதுவுமில்லை.
தாராளமாக அவற்றை ஏற்றுக்கொள்ளும்
தாராளவாதிகள்
நாம் தாம், வேறு எவர்தாம்?
கருத்துகள் , மேய்ப்பர்களின் கூற்றுகள்
எம்மை உணர்ச்சி வெறியில்
துள்ளிக் குதிக்க வைக்கின்றன.
துள்ளிக் குதிக்கின்றோம்.
இன்பவெறியில் கூத்தாடுகின்றோம்.
ஆயிரம் வருடங்களுக்கு
முன்
சோக்கிரடீசு சொன்னான்:
'சுயமாகச் சிந்தியுங்கள்.
சீர்தூக்கிப் பாருங்கள்.
ஏன் என்று எதிர்க்கேள்வி கேளுங்கள்'
நாம் சிந்தித்தலை இழந்ததை
சோக்கிரடீசு இருந்திருந்தால்
அறிந்திருப்பான்.
அறியாமை கண்டு
ஆரவாரம் செய்திருப்பான்.