வசந்தம் மலர வருகின்ற சித்திரையே
சுகந்தம் பரப்பி சுகந்தருவாய் சித்திரையே
அகங்கள் நிறைய ஆனந்தம் அத்தனையும்
அள்ளியே நீவருவாய் அழகான சித்திரையே

பற்பல தத்துவங்கள் உள்ளடக்கி நிற்கின்றாய்
பண்பாடு கலாசாரம் தாங்கியே ஒளிர்கின்றாய்
இத்தரையில் எதிர்பார்க்கும் ஏற்றமுடை திருநாளாய்
சித்திரையே விளங்குகிறாய் சிறப்புடனே வந்திடுவாய்

இலங்கையில் சித்திரை இன்பத்தை அளித்துவிடும்
இருவினமும் சித்திரையை ஏந்திடுவார் மகிழ்வுடனே
செந்தமிழும் சிங்களமும் கொண்டாடும் திருநாளாய்
சித்திரைத் திருநாள் இலங்கையில் மலர்ந்திடுமே

தமிழகம் கொண்டாடும் வடநாடும் வரவேற்கும்
உலகின் பலவிடங்களிலும் சித்திரை சிறந்திடுமே
புத்துடுப்பு புத்துணர்வு பூரிப்பு அத்தனையும்
சித்திரையின் முத்திரையாய் சிறப்பாக அமைந்திடுமே

இருப்பவரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்
இயன்றவரை சித்திரையை ஏற்றவரும் இன்புறுவர்
சமயமும் கலக்கும் சன்மார்க்கம் உடனிணையும்
சித்திரையில் அத்தனையும் சொத்தாக அமைந்திருக்கும்

புத்தாடை அணிவார் புதுக்கணக்கும் தொடங்குவார்
பட்டாசும் வெடிப்பார் பட்சணங்கள் பலசெய்வார்
மருத்துநீர் தலைவைத்து மனநிறைய பலநினைத்து
நீராடி நிற்பார் நிறைவுடனே வாழ்வதற்கு

கோவிலுக்குச் செல்லுவார் குறைகளைய வேண்டுவார்
காதலுடன் கடவுளை கைகூப்பித் தொழுதிடுவார்
சோதனைகள் வேதனைகள் சுமையகல வேண்டிடுவார்
சுகமான நினைவுகளைச் சுமந்தபடி தொழுதிடுவார்

மூத்தோரை வணங்குவார் முழுவாசி பெற்றிடுவார்
பெற்றவரை வணங்கிடுவார் பேரன்பாய் தழுவிடுவார்
சுற்றத்தார் சூழவே சுவையாக உண்டிடுவார்
சுந்தரத் தமிழிசைத்து ஊஞ்சலாடி மகிழ்ந்திடுவார்

சித்திரையைச் சிறப்பிக்க பட்டிமன்றம் நடக்கும்
சிங்காரத் தமிழிசை தென்றலில் கலக்கும்
கலை விழாக்கள் கலகலப்பாய் இருக்கும்
களிப்புடனே சித்திரையும் முத்திரையைப் பதிக்கும்

சித்திரையில் கோவில்களில் சிறப்பாக உற்சவங்கள்
பக்குவமாய் நடக்கும் பக்தியுடன் கூடிடுவார்
தேரோட்டம் உற்சவம் ஊர்கூடித் தேரிழுப்பார்
ஆன்மீகம் சித்திரையை அரவணைத்தே நிற்கும்

மங்கலமாம் சித்திரை மனமகிழ வைக்கும்
மனநிறைவு மனவமைதி வந்துவிட வைக்கும்
சந்தததும் வாழ்வினிலே சகலதுமே அமைய
வந்துவிடும் திருநாளாய் சித்திரையும் வரட்டும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.