01. சிந்தாதேவி!

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
ஓலங்களும் ஒப்பாரிகளும்
கரைந்தொழுகும் வெளியில்;
ஏந்துவதற்கான கைகளும்
சொல்வதற்கான குரல்களும்
பிடுங்கி எறியப்பட்டிருந்தபோது...
எமக்கான பாத்திரம்
எதுவாக இருந்திருக்கும்?

அறிவாயா?

02. சிந்தாதேவி!

மாதவன் பீடிகைக் கால்களில்
செவிகளற்று வீழ்ந்தபோது...
அதுவோ;
பழம்பிறப்பின் கதை மறுத்து,
கொத்தாகிப் பொழிந்த குண்டில் இறத்தலே
பூரணமும் விடுதலையும் என்றதாயின்...
எமக்கான பாத்திரம்
எதுவாக இருந்திருக்கும்?

உணர்வாயா!?

03. சிந்தாதேவி!

வைத்த அடிகளின் முன்னால்
இருந்த 'அடிகள்' எல்லாமே,
நாக்குகளை அறுத்துவிட்டு,
நாவாகிய கோலால்
வாயாகிய பறையில் அறைந்து
இழத்தலை உரைத்துப் பரப்புவீர் என
அம்மணம் அளித்து
அதுவே 'நிர்வாணம்' என்றதாயின்
எமக்கான பாத்திரம்
எதுவாக இருந்திருக்கும்?

சொல்வாயா!?

04. சிந்தாதேவி!

போதியின்கீழ் பிணக் குவியல்!
அதன்மேல்,
நிலத்தைக் காவியுள் முடிச்சிட்டுக் களவாடிய
போதிசத்துவன்!
வெள்ளரசுக் கிளையோடு
யாழில் கரையொதுங்கிய துறவால்,
இன்னொரு வாய்க்காலின் கரையில்
ஓராயிரம் உடல்கள் கரையொதுங்கியதாயின்,
எமக்கான பாத்திரம்
எதுவாக இருக்கும்?

பேசாயா!?

05. சிந்தாதேவி!

மணிபல்லவத்தின்
இன்னொரு திசையில்...
பிணவெளியான வாய்க்காலின் கரையில்...
ஆபுத்திரர்களும்  மேகலைகளும்
ஏந்திய பாத்திரங்கள்
நழுவிச் சென்றன.
உப்புக் கடலருகில் உப்பும்
உளுத்தல் அரிசியில் சத்தும் அற்று,
இறப்பிற்கும் இறக்கப்போவதற்கும் இடையில்,
ஒரு சொட்டு உயிர்ப் பிச்சைக்காய்...
வாழவும் மீளவும், மீளவும் வாழவுமாகக்
காய்ச்சிய கஞ்சியேதான்
அட்சய பாத்திரம்!

தெரிவாயா?

06. சிந்தாதேவி!

கண்கள் தேய்ந்து போகவும்
ஆவி கருகிச் சோரவும்
கால்கள் தளர்வு ஆகவும்
காலம் முழுதுமாகவும்
ஒரு நூறு அன்னையர்...

இருக்கிறானா? இல்லையா? என்றும்
இருக்கிறாளா? இல்லையா? என்றும்
அங்குமிங்குமாக எங்குமென்றுமாகக்
காணாமல் போன மகவுகளைத்
தேடித்தேடி...
காணாமலே போனார்கள்!

ஊட்டவும் இயலாத
படைக்கவும் இயலாத
கொடுந்துயர் வெம்மை கவ்விய
அவர்களின் உயிர்வாயில்
'இருக்கிறான்' என்றும்
'இருக்கிறாள்' என்றும் இடும்
 சொற்களேதான்

அட்சய பாத்திரம்!

புரிவாயா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.