- டிஜிட்டல் ஓவியத்  தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG  -
1

சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான்.  ஒரு  பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”

“நீங்கள் அடிக்கவில்லையா? ”

“செத்துப் போனால்.”

காரை, மாதா கோவிலின் அருகே நிறுத்தினேன்: “இத்துடன் எமது கார் பயணம் முடிவடைகிறது.”

“நீங்கள் …” இழுத்தான். நானும்த்தான் நடக்கப் போகின்றேன். கிலர்ன்கன் வரைக்கும்.

“எதற்காக”

“நடைக்காக”.

“கிலன்கர்ன் சென்று திரும்பி விடுவீர்களா?.”

“ஆம்” என்றேன்.

“அப்படி எனில் சேர்ந்தே நடக்கலாம்”.

நானும் அவனுடன் இணைந்து நடந்தேன்.

வலப்புறமாய், ஏரி, கோபித்தப்படி உம்மென்று இருந்தது.

அதன் ஆழத்தையும் அமைதியையும் யார் படம் பிடிக்க கூடும். அமைதியை வேண்டுமானால்…

ஆனால் ஆழத்தை…

“காலை அஞ்சரை மணிக்கு தட்டுகளை கழுவத் தொடங்கனும். இரவு பன்னெண்டு மணிவரை.”

“சரிபட்டு வரல… ரெண்டே ரெண்டு கிழமை. அண்ணனே சொன்னார்  ‘நீ போ… போறதுத்தான் உனக்கு நல்லது’  அஞ்சாயிரம் தந்து பஸ்ஸிலும் ஏற்றிவிட்டான்…”

“துக்கமாக இருக்கிறது. இடைநடுவே வேலையை விட்டுவிட்டு வந்ததற்காய்” என்று வேதனைப்பட்டான். “வயது என்ன என்றேன்”, “பதினெட்டு”. ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என யோசனை தெரிவித்தேன். மோட்டார் திருத்துவது – சமைப்பது – ஏதோ ஒன்று. ஆனால், அதனை திறம் பட செய்ய தெரிந்து கொள்ள வேண்டும் என தேற்றினேன். ஒரு பிளேன்டீ குடித்தாக வேண்டும் என்றான், எதிர்பட்ட மூடியிருந்த கடையொன்றை பார்த்துவிட்டு. பணம் இருக்கின்றதா என்றேன். அஞ்சாயிரம் என்றான் பையன்.

இடை நடுவே, பெரியண்ணனுடன் தினமும் மாட்டுக்கு புல் அறுப்பவன், தனது வண்டியை, வழமைப் போல் பாதையோரமாக தள்ளி வருவதைக் கண்டேன். என்னை கண்டவுடன், வழமை போல் தலையிலிருந்த தொப்பியை வலக்கரத்தால் அகற்றிய படி தள்ளுவதை நிறுத்தினான். “எப்படி, கன்னுகுட்டி” என்று விசாரித்தேன்.

“நல்லா இருக்கு சார்”.

அவரது மாடு, நேற்றுத் தான், கன்று ஒன்றை ஈன்று இருந்தது. “ஆறரைக்கு துவங்கியது. முடிய இரவு பண்னெண்டு மணி.”

“குட்டி – காளையா, பசுவா” என்றேன். “தெரியவில்லை” என்றான். ஒரு கணம் விக்கித்து தடுமாறி போனேன். மாலை ஆறு மணி தொடக்கம், இரவு பண்னெண்டு மணி வரை மாட்டுடன் இருந்துள்ளான். போட்டது காளையா பொட்டையா என்று தெரியவில்லை. தெய்வமே – எத்தகு மனிதர்கள், பசுவின் வேதனையில் தன்னையும் மூழ்கடித்து… காளையா பொட்டையா என்று கூட பாராமல், மாட்டின் வேதனையுடன் இவர்களை இணைத்தது யார்? யார் உன்னை இங்கு கொண்டுவந்து இருத்தியது? தேவர்களா! இல்லையெனில் இந்த அமைப்புமுறைத்தானா – இப்படி பல்வேறு சிந்தனைகள் என்னை அலைக்கழிக்க, கேள்வி கேட்டதற்காக கூசி போனேன். “பெரியண்ணன் எங்கே”. “படுத்து இருக்கிறார். அசதி. சரி, தூங்கட்டும் என்று வண்டியை தனியாக தள்ளி வந்து விட்டேன். தூங்கி எழும்பி வருவார் அவர்”. “பெரியவர் தானே” என்றான், வண்டியை தள்ள தொடங்கிய படி. கிலர்ன்கனிலிருந்து திரும்பும் போது பெரியண்ணன் எனக்காக நிற்பதைக் கண்டேன்.

சாலையோர பஸ் தரிப்பில், நின்றிருந்தார் மனிதர். அருகே சென்றவுடன் ஓடோடி வந்தார். “உங்களை தான் எதிர்பார்த்தேன்…” “ஒரு கேதம்.” புரிந்தது. ஒன்றும் பேசாமல்இ பையில் கையை விட்டு ஓர் ஐந்நூறு ரூபா தாளை எடுத்து கொடுத்தேன். சம்பளத்தில் கழித்து விடுவேன்;. “எங்கே, கேதம்” – “கெம்பியனில்” என்றார் மனிதர். “வீட்டுக்கார மனுசியும் வந்து இருக்காங்கனு சொன்னிங்களே…”

இவர் ஒரு வித்தியாசமான மனிதர். இவரது இன்னொரு நண்பர், ஒரு காட்டுவாசி. பெயர் முனியாண்டி. இவர்கள் இருவரும் பால்ய ஸ்நேகிதர்கள். பலாங்கொடை காட்டில், ஒன்றாக, மாணிக்கக்கல் தோண்டியவர்கள். பெரியண்ணனின் மாணிக்கக்கல் தோன்றிய வரலாறு ரசனைக்குரியது.

“பத்து பண்னெண்டு பொம்பளைங்க… ஒரு தடவ என் அம்மாவ கண்டபடி ஏசி திட்டி இருக்காங்க… அடிக்கப் போய்ட்டேன்… ஆனாலும் அடிக்கல… நான் அடிச்சிட்டேன், தூசனத்தால திட்டிடேன்னு பொலிஸில புகார் செஞ்சிட்டாங்க. ஓஐசி என்ன கூப்பிட்டு விசாரிச்சாரு. நான் உள்ளத உள்ளபடி சொன்னேன். ஏசினது உண்மைதான். ஆனா அடிக்கல. அதுவும் அம்மாவ ஏசுனதால தான் என்றேன்.‟ ஓஐசிக்கு நீதி புரிஞ்சிரிச்சி…‟

“சரி … நான் விசாரிக்கிறேன். நீ போய் நாளை வா. வந்து என்னை பார் என்று சொல்லியனுப்பினாரு. பிறகு பொம்பளைங்கள கூப்புட்டு தனி தனியா விசாரிச்சி இருக்காரு. ஒரே குழறுபடி. ஒருத்தருக்கு எதிரா ஒருத்தர்… சாட்சி. ஒருத்தர் அடிச்சான்னு சொல்ல, மற்றவர் அடிக்கலனு சொல்ல… மகா கோபத்தோட அவர்களை கண்டித்து, ஏசி துரத்தி விட்டார், துரத்தி.‟

மறுநாள் சொன்னார்: - ‘எனக்கு நீ ஓர் உதவி செய்தாகனும்… - பண்டா என்ற கடை முதலாளி ஆள் போட்டு – பலாங்கொடை காட்டில், மாணிக்கக்கல் தோண்ட துவங்கியிருந்தான். பத்து பதினைஞ்சி பேரா. முந்தி எஸ்டிஎப்(கு) உம் இல்ல – காட்டு துரைகளும் இல்ல. காடே சுதந்திரமா நின்னுச்சி. காடு– பரந்து விரிந்து தொறந்து கிடக்கும். யாரும் இஸ்டப்படி போகலாம் வரலாம். இந்த காட்டில் யார் யார் எங்கெங்கு மாணிக்கம் தோன்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது…? அந்த ஓஐசிக்கு ஒரு அக்கா. இந்த மாணிக்க முதலாளிக்கு… அவளுடன் கள்ளத்தொடர்பு. ஏதோ செய்திட்டான் - ஓஐசி இல்லாத சமயமா பாத்து. ஆனா, சாட்சி இல்ல. அக்காவையும் நேரடியாய் கேக்கவும் முடியாது. அவள ஊருக்கு அனுப்பி வைக்கவும் முடியாது. இவனுங்க மாணிக்கக்கல் தோண்டுற இடத்த காட்ட முடியுமான்னு கேட்டாரு…”.

‘முடியும்’ என்றேன். பத்து ரூபா பணத்தை தந்தார். நீ போ. போய் வந்து சொல் என்றார். புறப்பட்டேன். காடு… அப்பேர்பட்ட காடு… முதலில் ஏற்றம்… மரம், செடி, கொடி… அது முடிய … பாறைகள்… பாறைகள்…பாறைகள்… மொத்தத்தமாய் பத்து பாறைகள் இருக்கும்-அடுத்தடுத்ததாய். பின், ஆறு. ஓரமாய், அமைதியாய் - சுளித்து சுளித்து ஓடியது – அதனோரத்திலும் பாய் விரித்தது போல் இன்னும் பாறை படுக்கைகள். அதிலும் பெரிய பெரிய ஓட்டைகள் - வட்ட, வட்டமாய் - ஓர் ஆள் இறங்கி மகிழ்வோடு திருப்தியாய் குளிக்கலாம். யானையை கூட போட்டு குளிப்பாட்டி எடுக்கலாம். சில இடங்களில் ஆறு ஓடுகின்றதா, நிற்கின்றதா, நகருகின்றதா என்பதெல்லாம் தெரியாது. நீல நிறத்தில், அப்படி ஓர் அழகு. காடு முடியும். புல்வெளி திடீரென தோன்றும். பரந்து, விரிந்து – அப்படி ஓர் புல்வெளி – பத்து ஏக்கர் இருக்கும். - இரண்டொரு மரங்கள் இடையிடையே தோப்பு தோப்பாக – புல்வெளி ஓரமாய், ஆங்காங்கே. சின்னஞ்சிறு ஓடை அங்கேயும். ஓடையின் ஓரமாய் - மாணிக்கக்கல் தோண்டும் குழிகள்… குழி, குழி… எங்கும் குழிகள்…

என்னை சுற்றி வளைத்து விட்டார்கள். எனக்கு அப்போது பதினைந்து வயது தானே. சொன்னேன்: “தோட்டத்தில் வேலையில்லை … காசும் இல்லை … ஏதேனும் தந்தால் நானும்தான் தோண்டுவேன்…”

அவர்கள் நம்பிவிட்டார்கள். நானும் தோண்ட துவங்கினேன். ஒரு கிழமை, இன்னொரு கிழமை - வேலையான வேலை. அவர்கள் கேளாததை கூட செய்வேன். ரொட்டி போடுவேன். சம்பல் அரைப்பேன். தேநீர் வைப்பேன், இரவில் மிருகம் வராமல் நெருப்பு போடுவேன். நெருப்பில் சிலர் குளிர் காய்ந்தும் கொள்வார்கள். கிழமைகள் சென்று வீட்டுக்கு போய்வருவதாக கூறி, ஓ.ஐ.சீயிடம் வந்து சொல்லிவிட்டேன். அடியான அடி. பத்துப்பதினைந்து பேரை சுற்றி வளைத்து பிடித்து ரிமாண்டில் போட்டார்கள்… ரொம்ப அடி, அந்த பண்டாவுக்குத் தான்… கடைசியில் பண்டாவும் தோழர்களும் தங்கள் சொந்த ஊருக்கே, பலாங்கொடைக்கே, கிளம்பி சென்று விட்டார்கள். ஆனால், குழிகள் மாத்திரம் … அவை, அங்கேயே கிடந்தன அநாதரவாய்.

“தோட்டத்தில் ஒரு அஞ்சாறு பேரை கூட்டி கொண்டு ஏறினேன். குழிகளில் இறங்கி … வாடியமைத்து … தோண்டி… குளித்து…அந்த வாழ்க்கை வித்தியாசமானது. ஆனால் ஏனோ எனக்கு இந்த வாழ்க்கை சரிப்பட்டு வரவில்லை. கல்லை தேடுவதும், குழிகள் தோண்டுவதும், பின் ஆட்களை வைத்து வேலை வாங்குவதும், அவர்களுக்கு சம்பளம் எண்ணி கொடுப்பதும், பின் அவர்களை கட்டி ஆள்வதும் - போதுமடா சாமி போதும் இது , என்று. காட்டுக்குள் தனியாக சென்று விட்டேன். என்ன அருமையான காடு… ஒரு சத்தமுமே இல்லை. மனிதர்களின் ஆரவாரம் இல்லை – வண்டுகள், குருவிகள் கத்தும். பார்த்தேன். குழியை இன்னொருவருக்கு வித்துவிட்டேன்”.

“மனைவி. அவள் வெளியில். மகன், ஒரு மகள். இவர்கள் மிக நன்றாக இருக்கிறார்கள். ஆனால் நான் போக மாட்டேன் - என்னை வித்தியாசமாகவே அவர்கள் நடத்துவார்கள்… அதனால்தான் இங்கே வந்து - இந்த மாடுகளை பார்த்து மாடுகளுக்கு புல் வெட்டி – அவற்றை குளிப்பாட்டி…”

காலை சரியாக ஆறு மணியானதும், இவ்விருவரும் நாள் தவறாமல் புறப்பட்டு விடுவார்கள். பெரிய மழை கூட இவர்களை ஒருபோதும் நிறுத்தியது இல்லை. மாட்டு சொந்தக்காரர் - ஒப்பீட்டளவில் ஒரு இளவயதுகாரர்தான். பெரியண்ணனை, இவர், பெரியவர் என்றே அழைப்பார். இவ் இளவயதுகாரருக்கு ஒரு நாற்பது வயது இருக்கலாம். ஒரு வண்டியை தள்ளிக் கொண்டு முன்னால் வருவார். இவருக்கு இரண்டடி தள்ளினால்போல்,இரண்டு புல்லறுக்கும் அரிவாள்களையும் கோர்த்து முதுகுக்கு பின்னால் பிடித்தப்படி, பெரியண்ணன், வெற்றிலையை குதப்பி குதப்பி, பின்னால், பனியில் மௌனமாய் நடந்து வருவார்.

“எட்டுகட்டு அறுத்தாக வேண்டும்… எட்டு மணி வரை… பிறகு நான் வேலைக்கு சென்றுவிடுவேன்… பெரியவர், இவர் சாப்பிட்டு ஒரு சின்னதாக ஒரு ரெஸ்ட் எடுத்து கிளம்பினால் இன்னுமொரு மூணு கட்டு…”

“மாடு முந்தியெல்லாம் கதைக்குமே… மிகுந்த நம்பிக்கையோடு கூறினார், பெரியண்ணன். வேலுப்பிள்ளையின் தாத்தா மாடுகளை வளர்த்தவர். அம்மாடுகளை பராமரிக்க வயதான ஒரு கிழவரை அவரது தாத்தா அமர்த்தியிருந்தார். அந்த கிழவரும் மாட்டு பட்டியிலேயே ஒரு படங்கு கட்டிலை போட்டு அங்கேயே படுத்து… தூங்கி எழும்பி…சமயங்களில் மாடுகளோடு கதைப்பதையும் வேலுப்பிள்ளை என்னிடம் கூறியுள்ளார்.. சாஞ்சிக்கம்மா… சாஞ்சிக்க…அப்படியே… புல்லுக்கட்டு மேல…”.

புல்லு வெட்டும் மற்றொரு கிழவர் என்னிடம் கூறியது: “என்னால மூணு மாட்டுக்கு புல்லு வெட்ட முடியாது. மகன் ஆட்டோ ஓட்டுறான்… அவனுக்கு ஏதோ ஓர் பண தேவை… ஒரு மாட்ட – அதுதான் - இருந்ததிலேயே பெருசு. அதை ஒரு லட்சத்துக்கு வித்து… அன்னைக்கு, புல்வெட்டி, மறந்து போய் – அது சாப்பிட்ற எடத்துலேயே, புல்ல கொட்டி வச்சி… மனுசி வந்து கேட்ட உடனே – கண்ணுல தண்ணியும் வந்துடுச்சி… வித்த அன்னைக்கு நான் சாப்பிடவே இல்ல. எப்படியாம் சாப்பிட்றது… இப்பத்தான், மனச கொஞ்சமா தேத்தி… மாட்டுக்கு, பேச மட்டும்தான் முடியாது… ஆனா அதுக்கு எல்லாமே விளங்கும். மனுசங்க மாதிரிதான், மாடும். அதுகளுக்கு கதைக்க முடிஞ்சா? – ஆனால் பெரியண்ணன் கூறுவார்: “கதைக்குமே…”

“இடைநடுவுலதானே, அதுக்கு கதைக்க முடியாம போயிருச்சி…” என்பது அவரது வாதம்.

கூறுவார்: “ஒரு நாள், மாட்டுக்காரரோட ஆயுள் முடிஞ்சிரிச்சி”.

“எமதர்மன் சொல்லிப்புட்டான்… இவன கொண்டு வந்து சேத்துருங்கடான்னு… சித்திரகுப்தனும், ஆள் அனுப்பிட்டான் - புடிச்சி வாங்கடான்னு”.

“இது எப்படியோ மாட்டுக்கு தெரிஞ்சி போச்சு…”

“அது, இவன கூப்புட்டு சொல்லிரிச்சி… கவலபடாத… வாசல் படியில, ஒரு செம்புல பாலையும், ஒரு விளக்கையும் வை… இவனும் வச்சிட்டான்… வந்த தூதனுங்க, களைப்புல, பால அப்படியே மடக், மடக்குன்னு குடிச்சிட்டானுங்க… அதுக்கு பெறகு அந்த வீட்டுல புகுந்து, அவன எப்படி புடிக்கிறது… முடியல…”

“எமதர்மன் - ஒரு மீட்டிங்க போட்டு, பேசி இருக்கான். ஏன் இவன கொண்டு வரல”. “அப்ப தா தெரிய வந்துச்சி… இதெல்லாம் மாட்டோட வேலைன்னு…”

“அன்னையில இருந்து மாட்டோட வாய கட்டி போட்டுட்டானுங்க... அத பேச முடியாம செஞ்சிட்டாங்க…”

வண்டியின் முன் பகுதியில் ஒரு கையளவு, வெள்ளை பூவை தினந்தினமும் சொருகி வைப்பார், மாட்டுகாரர். கிளை பிரியும் அந்த தோட்டத்து பாதை. பிரதான பாதைக்கு ஏறும் முன்பு, தன் வண்டியை நிறுத்தி, தான் அணிந்து இருக்கும் செருப்பையும் ஓரமாய் கழட்டி வைத்துட்டு மண்தரையில் பாதைக்கு மேலாய் இருந்த ஆல மரத்தை நோக்கி, இரு கரம் கூப்பி வணங்குவார். பெரியண்ணன் வேடிக்கைபார்ப்பாரே தவிர வணங்கவும் மாட்டார். செருப்பை கழட்டவும் மாட்டார்.

என்ன வணங்குகிறீர்கள் என்று கேட்டேன். தினமும் புல் கிடைக்கனும், ஒரு பிரச்சனையும் இல்லாமல். உண்மை தான்… மழை இல்லாத காலங்களில் இங்கே புல்லும் இருக்காது.

கோடையில், இவர்கள் தேடி தேடி வெட்டுவார்கள். ஒரு சில வி~மிகள் காடுகளுக்கு தீயையும் வைத்து விடுவார்கள். இருக்கிற புல்லும் அடிக்கிற வெயிலில் எரிந்து சாம்பராகி விடும்.

“குருவியெல்லாம் செத்து போகும். குஞ்சிகள் பாவம். அவையும் எரிந்து சாம்பராகிவிடும்…”

இந்த இரக்க உணர்வு, மாட்டுக்கான புற்கட்டில் இருந்து கிளம்புவதா அல்லது இவரது இரக்க சிந்தையில் இருந்து கிளம்புவதா என்பதெல்லாம் நான் அறியாதது. மாட்டுகாரனின் மகனிடம் விசாரித்தேன். அவனுக்கு ஓர் பத்து வயது இருக்கும். அவன் ஒரு முறை கூறினான்: “நான் பாத்து இருக்கிறேன். கொண்டலத்தி புல்லு காட்டுலத்தான் கூடு கட்டும். காடு எரிய தொடங்கிய ஒடனே, பறந்து போய் இன்னொரு தேயிலை தூருல, அது புது கூடு கட்டிக்கிடும். பறக்க முடியாத குஞ்செல்லாம்…” .

கிழவர் கூறினார்! “கன்னு போட்ட ரெண்டு மூணு நிமிசத்துலேயே எங்களுக்கு தெரிஞ்சி போகும். இது காளையா பொட்டையானு. ஆனா விடிஞ்ச பிறகு தான் சொல்லுவோம்”.

“அப்பா, நான் சிறுவனாய் இருந்த போது இந்தியாவுக்கு கூட்டி போனார். கோயில் குளம் எல்லாம் சுத்தி சுத்தி காட்டினார்”.

பஜனை காலத்தில், இவர் பஜனை கூட்டத்தாருடன் பாடியபடி எங்கெங்கெல்லாமோ சுற்றிவிட்டு வந்து சேர்வார்.

“என்னை தான் யாருமே கவனிப்பதில்லையே. பிறகு சொன்னார்: கேதத்திற்கு போகும் போது அவளை பார்க்கத் தானே செய்வேன்” என.

அவர், அந்த மாட்டுக்காரரின் வீட்டை விட்டு நிரந்தரமாய் அகன்ற போது, அவரை சென்று பார்க்க நேர்ந்தது. பக்கத்து வீட்டில் படுத்திருந்தார். மாட்டுக்காரரின் மகன் கூறினான்: “சுகமில்லையாம். அவர் அந்த வீட்டில்தான் இப்போதெல்லாம் தங்குகிறார்” என்று. முதுகின் பின்னால் இரு அரிவாள்களையும் சேர்த்து பிடித்துக்கொண்டு, அதிகாலை குளிரில், வெற்றிலையை குதப்பி குதப்பி இவர் நிமிர்ந்து நடந்து வருவதை, ஒருமுறை மீட்டுப்பார்த்தேன். பின் ஒருநாள் கேட்க நேர்ந்தது, புதிய இடத்தில்: ‘ஏன் அங்கிருந்து அகன்று விட்டீர்கள் என்று”. ‘மனுசித்தான் காரணம்’ என்றார் அவர். ‘அவளுக்கு மாட்டை எப்பேர்பட்டாவது கொழுக்க வைத்துவிட வேண்டும் என்று பெரும் ஆசை. அப்போதுதான் நிறைய பால் கிடைக்கும் -மாட்டிலிருந்து. இதனால் தான் வெட்டி வரும் புல்லையெல்லாம் தெரியாமல், தெரியாமல் எடுத்து மாட்டுக்கு வைத்து விடுவாள். அது அவளது போக்கு. மாட்டுக்கு, ஒருநாளும் அப்படி சாப்பாடு கொடுக்க கூடாது. நேரம் இருக்கிறது. அந்தந்த நேரத்திற்கு தீணி போட்டால்தான், தின்றுவிட்டு, அசை போட்டவாறே யோசனையுடன் படுத்திருக்கும் மாடு. மாட்டின் பழக்கவழக்கத்தை, நாளைக்கொருமுறை, நாங்கள் நினைத்தப்படி மாற்றக் கூடாது- இது, அவர்’.

இந்த தொழுவத்தில் மொத்தமாய் ஐந்து மாடுகள் இருந்தன. இரண்டு கன்றுக்குட்டிகள். ஒரு நாளைக்கு குறைந்தது பன்னிரெண்டு கட்டாவது அறுத்தாக வேண்டும். ஒருநாள் பெரியவர் என்னை கூட்டி சென்று தொழுவத்தை சுற்றி காட்டினார். அவரது லயத்தின் பின்புறத்தை ஒட்டியபடி அந்த தொழுவம் இருந்தது. வீட்டுக்கு பக்கத்தில் சென்ற ஒடுக்கமான ஒரு சந்து வழியாக மாட்டு கொட்டகைக்கு சென்றாக வேண்டும். சாண வாசனை கப்பென்று அடிக்கும். குறுகலான சந்திலே நுழையும் போது, இருபுறமும் புற்கட்டுக்கள், புற்கட்டுக்கள் என அடுக்கி இருக்கும்… நனைந்து, அவை வாடி வதங்கி, நைந்து தொய்ந்திருக்கும் புற்கள். அள்ளி கட்டியிருப்பார்… கொட்டகைக்குள் நுழைந்தவுடன் தலை இடிக்கும். அந்தளவுக்கு அந்த பட்டி தாழ்ந்து காணப்பட்டது. ஈரலிப்பு மிகுந்த அந்த கொட்டகைக்குள் அசை போட்டவாறே தமது பெரிய பெரிய விழிகளை உருட்டி மாடுகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும். இவர் நுழைந்தவுடன் இவரை திணுசாக பார்க்கும்… இந்த நேரத்தில் என்ன என்பது போல. ‘புல்லு கட்ட நினைச்ச மாதிரியெல்லாம் எடுத்து போட்டுருவா… அதனாலதான் கௌம்பி கெம்பியனுக்னுக்கே வந்துட்டேன். இங்கயும் மாடு இருக்கு…’.


2

“பெண்கள்: அவர்கள் பொறுத்து நான் சவப்பெட்டியில் இருக்கும் போது, மூடியை இழுத்துவிட்டு மூடிக்கொண்டு சொல்லத்தான் செய்வேன்: ‘முடிந்தால் அப்போது பிடியுங்கள் என்னை’ என பொருள்பட டால்ஸ்டாயும் உரைத்திருப்பார். ஆனால் கார்க்கியின் பார்வையோ வித்தியாசப்பட்டிருந்தது.

3

“அந்த காலத்தில்  ஷண், என்னை வீட்டுக்கு அழைத்து சென்று பிராந்தியும் பருக தருவார். நாங்கள் பேசாத விடயமில்லை. உலகம் தொடங்கி மலையகம் வரை. ஆனால் எனது மனைவி சொல்லவே செய்தாள்: ‘இப்படி ஒரு வீடும், இப்படி ஒரு பிராந்தியும் இருந்தால் நானும் செங்கொடி சங்கத்தில் சேர்ந்து விடுவேன் என்று. அப்பொழுதுதான் வாழ்க்கையின் அர்த்தம் முழுதாய் புரிந்தது எனக்கு”.

எனது சகோதரன் சாந்திகுமாரும் ரொசாரியோவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இரவு உணவு முடிந்த கையுடன் அவரை அவரது வீட்டில் விட்டுவிட, அவரது வீட்டுக்கு கிளம்பி விடுவோம், இருளில். இரண்டு மூன்று கிலோமீற்றர்கள் தொலைவில் புறநகரில் இருந்தது அவரது வீடு. நடுநிசி இரவில் - பஸ்ஸ{ம் கிடையாது – எங்களை வற்புறுத்தி சாப்பிட வைத்து விடுவார் அவர் - மனைவியிடம் காச் மூச் என்று சத்தம் போடுவார்… அந்த முட்டைய பொறி… அந்த கறிய எடுத்து வா… கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்ல…”.

“இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்…”

“இங்கேயே படுப்பீர்களா… காலையில், விடியும் முன் புறப்பட்டு விடலாம்… இந்த இரவில் நடக்க முடியாது…”.

“நாங்கள் இருவரும் ஒரு பாயில்… எங்களுக்கு எதிர்த்தாற் போல் அவரும் அவரது மனைவியும் மறு பாயில்…! அறைகளில் கட்டில், மெத்தை இருக்க கூடும்… ஆனால் இவ்விரவோ பாயில்தான், இப்படி…”.

“இவள்தான் எனது சாமி…”

அவள் நாணி சிணுங்கி கொள்வாள்.

இன்னொரு நாள் கூறினார்:

“நிப்போன் ஓட்டல் தெரியுமா… நான் தேவராஜ்… இன்னும் வேறு யாரோ… அங்கேதான் முதன் முறையாக சொன்னேன்: ‘ஷண்ணை அகற்றப் போகின்றோம் என்று’ தேவராஜ் ஒரேடியாக விக்கித்து போனார்… ஷண்ணையா… ஆமாம்…நான் உறுதியாக தெரிவித்து விட்டேன்… பன்றி மாதிரி தடித்து போய் விட்டான்…”.

எனது சகோதரன் என்னிடம் கூறியது:

“இந்த முடிவை இவர்கள் சிறையில் இருக்கும் போதே எடுத்திருந்தனர் -  ஷண்ணை அகற்ற. இவர்கள் வெளியே வர அதுவும் ஒரு நிபந்தனைத்தான். அஸீஸ்-ராமையா, பேச்சுவார்த்தையின் பெறுபேறு இது’.

தொடர்ந்து செங்கொடி சங்கம் இரண்டாக உடைந்தது. ஷண் அகற்றப்பட்டுவிட்டார்.

‘அவருக்கு வயது… கண் தெரியல… வலது கண் துப்பரவா தெரியாது…’ அட்டனில் இருந்து, ரொசியை முதலில் கொழும்புக்கு அனுப்பி, பின் அங்கிருந்து இந்தியாவுக்கும் மூட்டைக்கட்டி அகற்றி விடுவதில் வெற்றிக் கண்ட ராமையா தொழிலாளி விசாரித்த போது கூறியது இது.

‘ரொசிவுட்டு மனுசி, ராமையாவ தன் சொந்த பிள்ளை போல் பாத்துக்குவாங்க…’.

‘ஷண்ணின் வீட்டை போல், எனக்கும் ஒரு வீடு இருந்தால்…’

4

மூன்று தினங்கள் கஷ்டப்பட்டு உழைத்தேன்.

அருகில் இருப்பது போய்வர எளிதாக இருந்தது. மற்றது, ஓட்டலில் தங்குவதாய் இருந்தால் குறைந்தது இருபது இருபத்தையாயிரம் போய்விடும் என்றெல்லாம் யோசித்திருந்தேன்;.

நல்ல வேளை. எனது கட்சிக்காரரின் நண்பருக்கு, அந்த வீடு இருந்தது… அதுவும் வெறுமையாக… ஏனெனில் அச்சமயத்தில் அவரும் லண்டன் சென்றிருந்தார். நானும் அவரது மகனும் மாத்திரமே. மகன் வேலைக்கு சென்றால் அந்தியில் தான் வருவான்… நான் சமைப்பேன்…சமைத்து முடிந்ததும், குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு விடுவேன்… .

மனம் விட்டு கதைத்தார்… எழுதி முடித்து – ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல் - பேட்டியை மீண்டும் மீண்டும் சேர்ந்து திருத்தினோம்… மொத்தமாய் ஓர் பத்து தொலைபேசி அழைப்பிருக்கும்… அத்தனையும் நீண்ட அழைப்புக்கள்… எத்தனை திருத்தங்கள்.. முடிந்து, நூலும்… அச்சாகி… அவரது காப்பியை அவருக்கே முதன் முதலாய் அனுப்பி வைத்தேன்.

‘குடும்பம் இரண்டாக உடைந்து விடும்… இந்த பேட்டியை எடுத்து விடுங்கள், எனக்காக…’.

சிறியதாக அந்த குறுஞ்செய்தி என்னை பார்த்து சிரித்தது.

இவரது பொது வாழ்வில், இவருக்கு கடிவாளம் இடப்பட்டு, இவரது பார்வையும் பங்களிப்பும் குறுகி திசைமாற செய்த, அதே விஷம கரங்கள் இப்போதும் செயலில் இறங்கியுள்ளதை கண்கூடாக தரிசிக்க கூடியதாக இருந்தது.

மனைவி என்பவள் இவ்வளவு பலம் பொருந்தியவள் தானா…? ஒருவர் கட்சியை உடைப்பதும் மற்றவள் ஒருவரின் பார்வையை மட்டுப்படுத்தி, அடியோடு அதனை மாற்றுவதும்…

கிருஷ்ணனின் மனைவி, அவனது கழுத்தை பிடித்து நெரித்ததன் மூலம்தான், சொத்து பிழைத்தது - குசேலருக்கு செல்லாமல் என்பதில் உள்ள நியாயம் மெது மெதுவாக எனக்கு புரிய தொடங்கியது.

இருந்தும், ‘கேதத்திற்கு போகும் போது, இன்று, அவளை பார்க்கத்தானே செய்வேன்’ என்ற பெரியண்ணனின் குரலும் சேர்ந்து ஒலிக்கவே செய்தது.

டால்ஸ்டாய் கூறினாராம்: ‘சவப்பெட்டியில் என்னை வைத்து மூடும் போது…’!.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.