* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி : VNG
1அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி சுகந்தியைத் திருமணம் செய்து ஐந்துவருடங்கள் ஆகிவிட்டது.எனினும் குழந்தைகளில்லை.ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்துவந்தனர். ஊரிலும் அவர்களுக்கு நல்லபெயர்.
கடைக்கு பலரும் வந்து போவார்கள்.
சிறுசிறு பொருட்களைவாங்க வருபவர்கள்..உதவி கேட்டு வருபவர்கள்..ஒசிப்பேப்பர் வாசிக்கவருபவர்கள்...சுகத்தியுடன் அரட்டை அடைக்க வருபவர்கள்..எப்போதும் கடை கலகலப்பாகவே இருக்கும். கடையை மூடியபின்பே வீட்டிற்குப் போவதால் கடைக்குப் பின் புறமாகவே மதிய உணவை சமைத்துச் சாப்பிடுவார்கள்.
'எதற்கு வீடு..?அதை விற்றுவிட்டு கடையைக் கொஞ்சம் பெருப்பிக்கலாமே' சுப்பையா அண்ணரின் ஆலோசனையை முற்றாக இருவரும் மறுதலித்தனர்.
'இன்றைக்கு கடை நல்ல வருமானம் தருகிறது.அதற்காக வீட்டைவிற்ரு கடையைப் பெருப்பிக்கும் எண்ணத்தால் ஒருவேளை கடை நடத்தமுடியாமல்போனால் வீடாவது மிஞ்சுமே?கடைசிக் காலத்திலாதாவது எங்களுக்கு இருக்கட்டுமே..வீடு என்ற ஒன்று குடும்பத்திற்கு வேணும்'
சுப்பையா அண்ணர் மறு பேச்சு பேசவேயில்லை..தலையை ஆட்டினார்..
'இந்தக் கடையை ஆரம்பிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்..சிறியதாய் ஆரம்பித்து இப்படி ஆகிவிட்டது..மனதிற்குத் திருப்தியாய் இருக்கிறது..'
கடையின் இருமருங்கும் குளிர்ச்சி தரும் மரங்கள்.பின்னால் தென்னை மரங்கள்.ஒன்றிரண்டு பனைமரங்கள்.
'குத்தகைக்குத் தான் எடுத்தது..பிறகு காணிச் சொந்தக்காரர் வெளிநாடு போட்டினம்..காசை மாதம் வங்கியில போட்டுவிடுவம்'
சுகந்தி தேநீருடன் வந்தாள்.
அவள் அழகு என்று சொல்லமுடியாவிட்டாலும் மனதுக்குப் பிடித்தமாகவே தெரிவாள்.தெத்திப்பல் துருத்திக்கொண்டே இருக்க அதுவே தனி அழகென சொல்வான்.
கறுப்பில்லை...வெள்ளைஎன்றும் சொல்லமுடியாது.இரண்டும் கலந்தவளென்று வேண்டுமானால் சொல்லலாம்.அவன் மாநிறமானவன்..
இருவரையும் இணைந்தே பார்ப்பவர்கள் நல்ல தம்பதிகள் என்றே சொல்லிக்கொள்வார்கள். தன் உழைப்பேயே நம்பி வாழ்கிற மணியம் திடகாத்திரமானவன் என்றில்லை. எனினும் கொஞ்சம் இருக்கிற உடம்பு வசீகரத்தை பார்ப்பவர்களிடம் தோற்றுவிக்கும்..
யாவருடனும் நட்பாய் இருப்பாதாலும், அந்த ஊரின் நன்மை தீமைகளில் பங்கேற்பவனாய் இருப்பதாலும் மணியத்திடம் யாவரும் நெருங்கிப் பழகியே வந்தனர்.கூடவே அவனிடமிருந்து வெளிவரும் நகைச்சுவைப் பேச்சுக்களையும் ரசிப்பார்கள்...இதுவும் அவனது கடையை நிறைத்திருக்கும்.
அதனால் தானோ ராகினியும் நெருங்கி வரத்தொடங்கினாளோ? ராகினியும் தில்லையம்பலத்தின் பேர்த்தி..கட்டான உடலுடனும்,திமிரான பார்வையுடனும் வந்து தேவையானதை வாங்கிச் செல்பவள்.
அவளுக்குள் ஏன் இப்படியான உணர்வு வந்தது?
மனதுள் எழுந்த உணர்வினை எப்படித் துணிவுடன் மணியத்திடம் கேட்கமுடிந்தது.
துணிச்சல்காரிதான்.
'ஏற்கனவே திருமணமாகியிருந்த என்னிடமே கேட்கிறாளே?'
அதிர்ச்சியாகவும் இருந்தது...இதையே சுகந்தியிடம் சொன்னபோதும் அதிர்ச்சியில் உறைந்தாள். எனினும் எப்படியோ சுதாகரித்துக் கொண்டாள்.
'நாளைக்கு அவளிடம்பேசுகிறேன்.'என்று பதில் தந்தாள்.
'கேட்பாளா?..இவள் கேட்பாள்...அவளின் பதில் எவ்வாறு இருக்கும்?ஒன்று இல்லை ஆமென்று இருக்கத்தான் செய்யும்.இதனால் ஏற்படப்போகும் சாதாரண அல்லது அசாராண நிலையில் தொடருகின்ற சுமுகமான வாழ்க்கையில் அசௌகரியங்கள் ஏற்படாமலிருக்கவேண்டுமே..அதற்கான சூழலை பேசுபொருளின் சாதுர்யம் சாந்தப்படுத்தலாம்...சமாதானமடையலாம்..மனைவியின் மீதான அதீத நம்பிக்கை அதனை ஏற்படுத்துமெனினும் அனுபவ முதிர்ச்சியற்ற அந்தப்பெண்ணிடமிருந்து எதனை எதிர்பார்க்கப்போகிறோமோ?கடவுளே! நல்லதொரு சூழலை உருவாகித்தா.. எனக்கும்,மனைவிக்குமான காதலைச் சின்னாபின்னமாக்கிவிடாதே!!'
அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..சுகந்தி தன் கணவனின் நிலையைப் புரிந்து கொண்டு அருகில்நெருங்கிப் படுத்தாள்.அந்தச் சின்னப்பெண்ணின் மனதை மாற்றிவிடுவாள் தன்னிடமிருக்கும் உடல்கவர்ச்சி வேண்டாமெனச் சொல்லி தூரமாக்கிவிடுவாளென்று கற்பனை செய்து ஓரளவு ஆறுதலுமடைந்தான்..மனைவியின் மனதில் ஆயிரம் கேள்விகளும்,அதற்கான விடைகளையும் தேடிக்கொண்டிருந்ததைஅறியாமலவளை வழமைக்கு மாறாக இறுக்கினான்.
சுவர்ப் பல்லி ஏதோ 'ச்சு' கொட்டியது ஏதோ சொல்வது போலிருந்தது.
வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கும் கைங்கரியத்தினை மனைவியிடம் கற்றுத்தேர்ந்தவனால் உடல்,ஆன்மா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு எல்லாம் நீயே என்று மார்பில் வாஞ்சையுடன் புதைந்துகொள்வது என்பது அனுபவத்தால் வரவேண்டும்.அப்படித்தான் அவன் தூங்கினான்.
ஒவ்வொருவரின் வாழ்வியல் அனுபவங்களும் மாறுபாடானவை.எனினும் கணவன் மனைவியாக ஆகியவர்களும் வெவ்வேறு சூழலுக்குள் பழகிக்கொண்டாலும் ஏதோ ஒரு மையப்புள்ளியில் ஒன்றிய மனதுடையவர்களாகிவிடும்போது அங்கு பிரகாசம் பெறும் காதலும் ஒளிவிடும்..இங்கும் இவனும்,இவளும் அப்படியே காதலைப் பகிர்ந்துகொண்ண்டே வாழ்வது பலருக்கும் வியப்பைத் தந்தததில் வியப்பில்லை.
[தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.