- அக்டோபர் 10, 2025 'டொரோண்டோ,கனடாவில் மறைந்த , யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், புகழ்பெற்ற துடுப்பெடுத்தாட்ட, உதைபந்தாட்ட வீரராகவும் விளங்கிய வேல்முருகு வசந்தகுமார் பற்றிய எழுத்தாளர் இந்து லிங்கேஸின் நினைவலைகள் இவை. -
கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.
கல்லூரியைச் சுற்றி எங்கே,எப்போது பார்த்தாலும் வசந்தனின் சுறுசுறுப்பையும், சிரிப்பையும்,பேசும் அழகையும் கண்டு சிறியவர்களாக நாம் மகிழ்ந்த காலமது.அதற்காகவே மாலைப்பொழுதில் மைதானத்தில் பயிற்சி நடைபெற்று முடியும் தருவாயில் அங்கே காத்திருந்து அவரது பகிடிகளைக்கேட்டு ,மற்றவர்களுடன் நாமும் இணைந்து சிரித்த அந்தப் பொழுதுகளும் மறக்க முடியாதவை.காலம் மெல்ல மெல்ல கனியக்கனிய;ஒருத்தருக்குள் இத்தனை வல்லமையா என்ற வியப்பு எம்மையும் கட்டிப்போட்டது.ஒரு கால கட்டம் பார்த்தால்,கிரிக்கெட்டில் சாதனை.மறுபக்கத்தில் உதைபந்தாட்ட வீரனாக.மூத்த மாணவர் தலைவராக.கையெழுத்தும் அச்சிட்டாற்போல மிகவும் அழகாக.கணிதம்,பிரயோக கணிதம் இரண்டிலும் வல்லவராக மட்டுமன்றி,எமக்குக் கற்றுத்தந்த ஆசானாகவும் விளங்கினார் வசந்தன்.
Sean Conneryயின் ஜேம்ஸ் பொண்ட் 007 ஆக வெளிவந்த படங்களைப் பார்த்துவிட்டு; முக்கியமான சில காட்சிகளை அதன் பின்னணி இசையுடனே தொடுத்து,சுவாரஸ்யமாக சொல்வதுதான் வசந்தனின் கை வந்த கலை.இதைக்கேட்பதற்காகவே மாணவர் நாம் கூடியிருந்து கேட்டு மகிழ்ந்தவை பல.அப்படித்தான் வசந்தனிற்கு இன்னொரு புனைப்பெயராக 'டட்ட டாங்‘பிரபல்யமானது.
எமக்கான எத்தனை மகிழ்வான கல்லூரிக்காலம்!அங்கிருந்து ஆரம்பமானதுதான் எனக்கும், வசந்தனுக்குமான நட்பு. வசந்தன் கல்லூரி முடித்து Hatten National Bank இற்கு வேலைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்த வேளையது. அப்பொழுதெல்லாம் Algebra மற்றும் Applied Maths இரண்டையும் பயிற்சி வகுப்புக்களாக கற்பித்த கால இடைவெளியது.அப்போதுதான் நானும் ஒருவனாக அப்பயிற்சி வகுப்புக்களில் இணைந்து கொண்டேன்.இங்கிருந்துதான் அவரை 'மாஸ்ரர் 'என்று இன்னும் நெருக்கமாக மனசில் ஏந்திக்கொண்டேன்.
அவரிற்கும் விரும்பியபடி Hatton National Bank இல் வேலை கிடைத்தது.இடையிடையே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து போவார்.சந்திப்போம்.மீண்டும் பகிடியும் சிரிப்புமாக ஓரிரு நாட்களை மனசு கொண்டாடித்தீர்க்கும்.அப்படியிருக்கும்போதுதான் எதுவுமே வாழ்வில் நிரந்தரமில்லை என்பதை அக்காலம் எனக்கும் உணர்த்தியது.அதற்கு சாட்சியங்களாக என் நண்பர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.அதில் 'டட்ட டாங்' லண்டன் சென்றதும் இக்கதையின் ஓர் அம்சம்.
பள்ளிக்காலம் தொட்டு கல்லூரி்க்காலம்வரை ஒன்றாய் கூடித்திரித்த நண்பர் கூட்டம் ஒவ்வொன்றாகப் பிரியும் வாழ்விருக்கே ;அதைப்போல ஒரு வலி இனி வாழ்வில் வரக்கூடாது என்ற பருவமது.அப்படித்தான் போரும், போர்க்காலமும்,எமைப் பிரிந்தோரின் இழப்பும் என்பதை உணர்ந்து கொண்டேன். எவருமே எதிர்பார்க்கவில்லை! இரண்டரை வருடங்கள் கழித்து ஒருநாள் வசந்தன் ஊர் வந்து சேர்ந்தார்.இல்லை,அந்த " டட்ட டாங்"என்ற இசை சோகமாய் வீட்டு வாசலில் ஒலித்து ஓய்ந்ததுபோல் இருந்தது எனக்கு!
' இனி லண்டனில் வாழ முடியாது.இங்கிருந்து இனி ஏதாவது வேறு நாட்டிற்குத்தான் போகவேண்டும்.இல்லையேல் இன்னும் சில மாதங்கள் இங்கிருந்துவிட்டு மறுபடியும் London போவோம்.நீயும் என்னோடு வா'என்றார்.நானும் சம்மதித்தேன். இந்தக் கால இடைவெளிக்குள் இருவருமாக ஒவ்வொரு நாளும் ஒரு சைக்கிளில் உலா வந்து கல்லூரி மைதானத்தில் நின்று தெரிந்தவர்களிடம் பேசுவது வழக்கம்.அப்போதெல்லாம் துள்ளித்திரிந்த வசந்தனின் உசார் இப்போ எங்கே போய்ச்சுது என்று எண்ணத்தோன்றும்.ஏதோ ஒரு சோகம் அப்போதும் அந்த மனசுக்குள் ஊசலாடிக் கொண்டேயிருந்ததை உணர்ந்தவன் நான்! பத்மா கபே'யில் ரீயும்,வடையும் அல்லது "றிக்கோ"வில் ரோல்ஸும் கோப்பியும், இல்லையேல் அண்ணா கோப்பியும் பீடாவும். வின்ஸரில் நல்ல படங்கள் வந்தால் பார்ப்போம்.நித்தம் மாஸ்ரரின் வீட்டிற்குப்போய் அவரைக் கூட்டிக் கொண்டு வேறெங்காவது செல்லதுதான் வழக்கம்.அப்போது மாஸ்ரரின் அம்மா சொல்வார்,"இந்தப்பிள்ளைக்கு இப்ப நீரும் வந்து பழகாட்டி இவன் நல்லா உடைஞ்சு போவான்.நீர்தான் கவனமா பார்த்துக்கொள்ளும்.பார்த்தீரா எத்தனை பேர் இருந்திச்சினம்.இப்ப என்ர பிள்ளை தனிச்சுப்போனான்.பேரும் புகழும் இருந்தென்ன?உம்மைப்போல வருமா!ஏதோ உம்மால அவன்ர சிரிப்பை இடைக்கிடை காணக் கூடியதாயிருக்கு.கடவுள்தான் அவனைக் காப்பாற்றவேணும்."
இலண்டனிற்கு செல்ல திறந்த விசாவை இடையிடையே அன்று அறிவிப்பது வழக்கம்.அப்போது உடனே கொழும்பு புறப்பட வேண்டும்.தயாராக இருந்தோம். மீண்டும் அப்படியொரு செய்தி வந்தது.இரவு வெலிங்டன் தியேட்டரிலிருந்து புறப்பட்ட KG பஸ்ஸில் கொழும்பு சென்றோம்.அங்கு சென்றதும், 'நேற்றுடன் அச்சட்டம் நீக்கப்பட்டுவிட்டது' என்ற செய்தி அதிர்ச்சியைத்தந்தது.இருவருமாக ஒரு முடிவுக்கு வந்தோம்.
"நான் முதலில் ஜேர்மனி வெளிக்கிடுகின்றேன்.நீங்கள் விரும்பியது போல் நைஜீரியா விற்கு புறப்படுங்கள்.முடிந்தால் இருவரும் இலண்டனில் சந்திப்போம்.OK யா மாஸ்ரர்?"
'"ஓம்.அப்படியே செய்வோம் "
எங்களூர் மண் பலத்த மழையில் நனைந்தபடி என்னை முதலில் வழியனுப்பியது. ஊரையும், உறவையும் பிரியும் முதற் தருணம்போல, எம்மைப்போல எவருமே அனுபவிச்சுக் கதறக் கூடாது கடவுளே என்றழுதது என் உயிர்! என் வாழ்வு ஜேர்மனியில் கரையொதுங்கியது. வசந்தனின் வாழ்வு நைஜீரியாவில்.அங்கிருந்து அன்புடன் ஓர் அஞ்சல் அட்டை வசந்தனிடமிருந்து வந்தது.எலுமிச்சையின்மேல் பிளேட் ஒன்று வைத்தபடி அச்சடித்த அட்டையது.எப்படியிருக்கின்றாய் என்று ஆரம்பித்த அழகான கையெழுத்துடன்,அன்பான வரிகளுடன் .. கடைசியில், " உள்ள அழுகின்றேன் வெளிய சிரிக்கின்றேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கின்றேன்"என்ற வரிகளுடன்!நானும் அழுது தீர்த்தேன்.ஆனால் எம் நேச நட்பின் விருப்பப்படி,என் குடும்பத்துடன் மறுபடியும் கன காலத்திற்குப் பிறகு கனடாவில் இணைந்தோம்! ஒவ்வொரு முறையும் நாம் கனடா செல்லும்போது யோககுமாரன்,நான்,வசந்தன் என நாம் மூவரும் சந்தித்து மகிழ்ந்ததை இனி ஒரு போதுமே மறக்க முடியாது. இந்துவின் மைந்தர்களாக எம் இருவருக்குமான நட்பை இப்போதும் கூட சொல்லித் தீர்க்க ஒன்றாக மிஞ்சி நிற்கின்றதே கல்லூரி மைதான அந்த அரசமரம்;அது சொல்லும் எம் கதையை!அங்கே மைதானத்திற்குள் அமர்ந்திருக்கின்றாரே அந்த வைரவர்,அவரிற்குப் பக்கத்தில் நின்றபடிதானே உங்களின் துள்ளலும், பாய்ச்சலும் நிகழ்ந்தது?அந்த சக்தியை அன்று யார் தந்தது?அவர் அறிவார்.அவரும்,அந்த அரச மரமும்,நானும், எங்களின் கல்லூரி மைந்தர் களுமாக ஒன்றாய்க் கூடிநின்று, எல்லாவற்றையும் எம் மனங்களில் சுமந்தபடி சொல்கின்றோம்:
"போய் வாருங்கள் மாஸ்ரர். ..டட்ட டாங்” -இந்து.லிங்கேஸ்-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.