கூகி வா தியாங்கோ மறைந்து விட்டார் . கென்யா எழுத்தாளரும் கல்வியலாளருமாகிய அவரது மரணம் இன்றைய தமிழ் சமூகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது எமக்குள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்மைப் பொறுத்தவரை எமக்குள் இருக்கும் குழாயடிச் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளவே எமக்குப் போதிய நேரமோ அவகாசமோ இல்லாதபோது இது போன்ற ஆளுமைகளின் இருப்பும் மறைவும் எமக்கு ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. இவரது வாழ்வு குறித்தோ அல்லது படைப்புக்கள் குறித்தோ எந்தவித நிகழ்வுகளையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளாமல் ஒரு சில சஞ்சிகைகளில் ஆங்காங்கே பதிவிடப்படும் வெறும் அஞ்சலிக் குறிப்பிடனேயே இவரது மரணத்தையும் கடக்க நினைக்கின்றது எமது சமூகம். இத்தனைக்கும் இதுவரை இவரது ஆறேழு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. அதனையும் விட அன்றைய காலகட்டங்களில் இவர் எமது பல்வேறு சிறுபத்திரிகைகளைளின் அட்டைப்படமாக அலங்கரிக்கப் பட்டிருந்தார் என்பதும் இவரது எழுத்துக்களை எமது முன்னோடிகள் ஆய்வு ரீதியாக மதிப்பீடும் விமர்சனமும் செய்திருந்தனர் என்பதும் எமக்குள் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது. அன்று உலகளாவிய ரீதியில் தனது கவன வட்டத்தினை விஸ்தரித்து மிகவும் காத்திரமாக இயங்கி வந்த எமது சமூகம் ஒரு சில தசாப்த காலத்திற்குள் இப்படி தடாலடியாக கீழிறங்கிப் போயுள்ளது உண்மையிலேயே வேதனையை ஏற்படுதி நிற்கின்றது.
கூகி வா தியாங்கோ அவரது 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற நாவலின் மூலமாகவே எனக்கு அறிமுகமாகிறார். சுமார் 25 வருடங்களுக்கு முன் இதனைத் தாமரைச்செல்வி பதிப்பகமாக வெளியிட்ட நிழல் திருநாவுக்கரசுவிடமிருந்து, அன்றைய காலகட்டத்தில் அவரை சென்னையில் வைத்து நேரிடையாகச் சந்தித்த போது இதனைப் பெற்றுக் கொண்டேன். அப்போது அவர் இந்நாவலை மொழி பெயர்ப்பதற்கு இந்தியா வந்திருந்த கூகியை நேரில் சந்தித்து இந்நாவலை மொழி பெயர்ப்பதற்குரிய காப்புரிமையைப் பெற்றுக் கொண்ட கடிதத்தினை காட்டினார். பின் இந்நாவலை ஏற்கனவே மொழி பெயர்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தியிருந்த மா.அரங்கநாதனிடம் இருந்து குறிப்புக்களைப் பெற்றுக் கொண்டு அமரந்தா - சிங்கராயர் இருவரும் இணைந்து இதனை மொழி பெயர்த்திருந்ததாகவும் குறிப்பிட்டார். உண்மையில் இந்த நாவலினைப் படிக்கும்போது இந்த மொழிபெயர்ப்பாளர்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையும் சிரமும் அவர்களது அர்ப்பணிப்புக்களும் தெளிவாகவே புரிகின்றது.
1979 இல் எழுதப்பட்ட 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற இந்நாவலானது பன்னாட்டு நிறுவங்களினது கொடிய கரங்களின் கீழ் நெருக்கடிக்குள்ளாகித் தவிக்கும் இன்றைய உலகினை அன்றே மிகத் தெளிவாக விவரித்துச் சென்றிருக்கின்றது. காலனித்துவத்தில் இருந்து விடுபட்டாலும் கென்யா நாடானது அனுபவித்த பின் காலனித்துவ கொடுமைகளையும் , பன்னாட்டு நிறுவனங்ககளும் உள்ளூர் பெரு முதலாளிகளும் அடித்தட்டு மக்களின் மீது பிரயோகித்த கொடுமையான சுரண்டல்களையும் அம்மக்களின் அவல வாழ்வினையும் வரலாற்றுப் பின்னணியோடு மிகச் சிறப்பாக விவரித்துச் செல்கின்றது. இந்நாவலினை கூகி சிறையில் தடுப்புக்காவலில் இருந்தபோது மலம் துடைக்கும் தாளில் எழுதி பதிப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுவதானது இதன் சிறப்பிற்கு மேலும் வலு சேர்க்கின்றது.
மேலும் 'இடையில் ஓடும் ஆறு ' (The River Between) , 'அழாதே, குழந்தாயே!' (Weep not Child), 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood),போன்ற பல்வேறு புனைவுகளைப் படைத்த இவர் நாடகம், கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம் என்று பல்வேறு தளங்களிலும் பன்முகத்தன்மையுடன் செயலாற்றியிருக்கின்றார். கூடவே ஆங்கிலத்தில் புலமை மிகுந்த இவர் ஆரம்பித்தில் ஆங்கிலத்திலேயே தமது படைப்புக்களை எழுதியிருப்பினும், ஒரு காலனித்துவ மொழியில் எழுதுவதானால் அந்த மொழியின் ஆக்கிரமிப்புச் சிந்தனைகளும் அதன் அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே உட்புகுத்தப்படும் என்ற காரணத்தினால் பின்னைய நாட்களில் தனது படைப்புக்களை தனது தாய் மொழியாகிய கிக்கீயு மொழியிலேயே எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் இவ்வாறு இருந்தபோதிலும் இவருக்கு மிகப் பிரபலமான விருதுகளான நோபல் பரிசோ அல்லது புலிட்சர் , புக்கர் போன்ற விருதுகளோ கிடைத்திருக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. பலமுறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்ட இவர் அனைத்து தடவைகளிலும் நிராகரிப்பட்டிருக்கின்றார். முக்கியமாக 2010 ம் ஆண்டு இவருக்கே நோபல் பரிசு கிடைக்குமென்று எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போதும் திட்டமிட்ட வகையில் அது இவருக்கு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கூகி வா தியாங்கோவின் எழுத்துக்களில் அடிநாதமாக இழையோடும் முக்கியமான சரடுகளை நாம் அவரது கீழ் வரும் ஒரு சில வரிகளின் ஊடாக புரிந்து கொள்ளலாம்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் எங்கள் பிதாவே ! உங்கள் திவ்விய நாமம் போற்றப்படுவதாக! உங்கள் ராஜ்ஜியம் வருவதாக ! எங்கள் செல்வம் மிக்க ஆப்பிரிக்காவில் காலனிய ஆட்சிக்காலத்தில் நடந்ததைப் போலவே இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப் படுவதாக. இன்றைய நாளில் எங்கள் தினக் கூலிக்குரிய டாலரைத் தாருங்கள். எங்களது தவறுகளை மன்னித்தருளுங்கள். கருணையை வழங்கி உறுதுணையாக இருந்து நாங்கள் உமக்கு என்றும் பணிவுடனும் நன்றியுடனும் இருக்க ஆத்மபலத்தை அளியுங்கள் . என்றென்றும் எப்போதும் ஆமென்.
இப்போது எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. எதற்காக கூகி மேற்குலகில் எந்தவொரு முக்கியமான விருதுகளும் வழங்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறார் என்று.
கூடவே அரசியல், சமூக தளங்களில் செயற்படும் எம்மவரிடையேயும் இப்போதெல்லாம் இவரது எழுத்துக்கள் மீதான எந்தவித மதிப்போ அல்லது கவனக்குவிப்போ இருப்பதில்லை. பெரும்பாலும் மேற்குலக விசுவாசிகளாகவும் பின் காலனத்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும் தொழிற்பட விரும்பும் இவர்களுக்கு, உலக மயமாதல் கோட்பாட்டின் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களும் அதன் ஏக போக சக்திகளும் வழங்குகின்ற பல்வேறு வசதி வாய்ப்புக்களையும் அனுபவிப்பவர்களாக அதியுயர் உச்ச நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைக்கும் இவர்களுக்கு கூகியின் எழுத்துக்கள் ஒரு போதும் உவப்பானதாக இருக்கப்போவதில்லை. அத்துடன் இத்தகைய எழுத்துக்கள் தமக்கு எதிரானவையாகவும், எதிர்காலத்தில் இவை தமக்கு மிகவும் ஆபத்து விளைவிக்க கூடியதாக இருக்கும் என்பதினை உணர்ந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதினையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இதனால் இவர்களும் மேற்குலக அதிகார வர்க்கம் செய்வது போன்றே இவரது எழுத்துக்கள் குறித்தோ வாழ்வு குறித்தோ கள்ள மௌனம் காப்பதுடன் திட்டமிட்ட முறையில் அதனை இருட்டடிப்புச் செய்வதிலும் மிகவும் சிரத்தையாகத் தொழிற்படுகிறார்கள்.
எத்தகைய இருட்டடிப்புக்கள் தொடர்ந்த போதிலும் உலகில் அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கும் வரையிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக கூகி வா தியாங்கோவின் படைப்புக்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதினை நாம் உறுதியாகக் கூறிக் கொள்ளலாம். இத்தகைய எழுத்துக்களை தொடர்ந்தும் மக்களிடையே பரவச் செய்வது எம் போன்ற ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.